மூன்று ஜோடிகள், அவர்களின் வாழ்க்கையில் அனுபவிக்கும் இனிமையான தருணங்கள், நிம்மதி கெடுக்கும் சம்பவங்கள் என கலந்து கட்டியிருக்கிற படம்.
நேர்மையான அந்த டாக்டர் ஒரு கட்டத்தில் நேர்மை தவறி ஆணவக் கொலையை மறைப்பதற்கு உதவி செய்கிறார். அது தெரிந்த அவரது மனைவி அவரைப் பிரிகிறார். அந்த தம்பதியின் மகள், பிரிந்தவர்களைச் சேர்த்து வைப்பதற்கான முயற்சியில் இறங்குகிறார்.
அந்த முயற்சி என்னவானது? நடந்த ஆணவக் கொலையின் பின்னணி என்ன? அதற்கு டாக்டர் உதவியது எப்படி? அவர் செய்த குற்றத்துக்கு கிடைத்த தண்டனை என்ன?
இப்படி சிலபல கேள்விகளுக்கான பதில்களைத் தந்து நிறைவு பெறுகிறது சரஜ் சீலன் இயக்கியிருக்கும் பாரிஸ் கஃபே.
கொலையை மறைத்து போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் தரச் சொல்லி மிரட்டும் தரப்புக்கு மறுப்பு தெரிவிப்பது, வேறு வழியேயில்லை என்ற நிலைமையில் மிரட்டலுக்கு பணிவது, அதனால் குற்றவுணர்ச்சியில் தவிப்பது என டாக்டராக வருகிற குரு சோமசுந்தரத்தின் நடிப்பு நன்று.
சமூகத்தில் நடக்கும் தவறுகளைத் தட்டிக் கேட்கும் துணிச்சல்மிக்க பெண்மணியாக அனுமோல். தன் கணவனாக இருந்தாலும் அவர் செய்த குற்றத்துக்கான தண்டனை கிடைக்க வேண்டும் என்ற அவரது நிலைப்பாடு கேரக்டரின் மதிப்பை உயர்த்த, நடிப்பு கச்சிதம்.
மகளாக வருகிற அர்ச்சனா அப்பா அம்மாவின் பிரிவால் வருந்தி, அவர்களைச் சேர்த்து வைக்க எடுத்துக் கொள்ளும் முயற்சிகளில் கவனம் பெறுகிறார். சாய் விக்கி, நயனா சாய் உள்ளிட்ட மற்றவர்களின் நடிப்பில் குறையில்லை.
பின்னணி இசையை அலட்டலில்லாமல் தந்து, பாடல்களை இதமான உணர்வூட்டுவதாக வழங்கியிருக்கிறார் கே. சதீஷ் ஜி’யின் ஒளிப்பதிவு காட்சிகளுக்கு மைலேஜ் தருகிறது.
ஆணவக் கொலை சப்ஜெக்டில் வருகிற படங்களில் இருக்கிற வழக்கமான பரபரப்பு இந்த படத்தில் இல்லாமலிருப்பதை படத்தின் வித்தியாசம் என்று சொல்லலாம். அதைத் தாண்டி சொல்வதற்கு ஏதுமில்லை.
Rating 2.5 / 5

