இளன் இயக்கத்தில் ‘பியார் பிரேமா காதல்’ லிவ் இன் ரிலேசன்ஷிப்பை மையப்படுத்தி உருவாகி, தியேட்டர்களில் வெளியாகி ஹிட்டடித்தது. இந்த, நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள பியார் பிரேமா கல்யாணம் திருமண வாழ்வில் இளைய தலைமுறை சந்திக்கும் சிக்கல்களை அலசுகிறது.
படத்தை இயக்கி, ஹீரோவாகவும் களமிறங்கியிருக்கிறார் இளன். அவருக்கும் சோஷியல் மீடியா இன்ப்ளூயப்ஸர் சான்விக்கும் காதல் உருவாகி, கல்யாணத்தில் முடிகிறது. கல்யாணத்துக்கு பின், சான்வி கணவர் இளன் வீட்டுக்குப் போகாமல் தன் வீட்டிலேயே வாழ விரும்புகிறார். இளன் வீட்டோடு மாப்பிள்ளையாகிம் சான்வியோடு குடும்பம் நடத்துகிறார். அந்த வாழ்க்கை இருவருக்கும் சிலபல கசப்பான அனுபவங்களைத் தருகிறது… அனுபவங்களால் வாழ்க்கை மாறுகிறது. அந்த அத்தியாயங்களில் கலகலப்பு கலந்திருக்கிறது.
இளன் கல்லூரி மாணவன் போலிருக்கிறார். நடிப்பில் துறுதுறுப்பும் சுறுசுறுப்பும் தெரிகிறது. வேலை வெட்டியில்லாமல் மாமியார் வீட்டில் படும் அவஸ்தைகளால் அவமானங்களால் கலகலப்பூட்டுகிறார்.
சான்வி திமிர் தெனாவட்டை அலட்டலாகவும் காதல் உணர்வை கொஞ்சமாகவும் காட்டியிருக்கிறார். உடைகளைக் குறைத்து கவர்ச்சியாகவும் வெளிப்படுகிறார். ராதிகா, இளங்கோ குமரவேல் அனுபவ நடிப்பைத் தர யோகிபாபு சிறிதளவே சிரிக்க வைக்கிறார்.
ஆர்ப்பாட்டம் ஏதுமில்லாமல் கதைக்குத் தேவையான அளவில் மிதமான பின்னணி இசையைத் தந்திருக்கும் யுவன் சங்கர் ராஜா, பாடல்களை உற்சாகமாக்கியிருக்கிறார். காட்சிகள் கலர்ஃபுல்லாக இருக்க அவற்றை ஒளிப்பதிவில் மெருகேற்றித் தந்திருக்கிறார் தினேஷ் கே பாபு.
எடுத்துக் கொண்ட கதை நன்றாக இருந்தாலும், திரைக்கதையை விளையாட்டுத்தனமாக அணுகியிருப்பதால் பல காட்சிகள் அலுப்பு சலிப்பை தருகின்றன. ஒருசில காமெடி கலாட்டாக்கள் ஆறுதல் தருகின்றன. இந்த படத்தையெல்லாம் தியேட்டரில் பார்ப்பது கஷ்டம். ஓடிடி’யில் என்பதால் ஓகே.
Rating 2.5 / 5

