‘கெட்டியோலானு என்டே மாலாக்கா’, ‘ரோஷாக்’ ஆகிய படங்களை இயக்கிய நிசாம் பஷீர் இயக்கியுள்ள படம். வங்கி கொள்ளை என்ற அதிரடியான குற்றச் சம்பவத்தை சுற்றிச் சுழலும் I, Nobody.
அரசுப் பணியிலிருக்கிற ராஜீவனுக்கு, எளிதாகப் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற பேராசை. அதற்காக விபரிதமான ஒரு விஷயத்தில் இறங்குகிறார். அதனால் அவர் என்னென்ன சிக்கல்களில் மாட்டுகிறார், எப்படி மீள்கிறார் என்பதே I, Nobody’யின் கதை.
நாயகன் ராஜீவனாக பிரித்விராஜ் சுகுமாரன், நடுத்தர குடும்பத் தலைவனின் பொறுப்பு, பணத் தேவைக்கான நெருக்கடி, அதனால் எடுக்கும் தவறான முடிவு, அதை தொடர்ந்து பயம், பதற்றம், அவமானம், மீண்டு வருவதற்கான திட்டமிடல் என பல உணர்வுகளைத் தன் நடிப்பில் மிகச்சரியாக வெளிப்படுத்தியுள்ளார்.
பிரித்விராஜின் மனைவியாக பார்வதி திருவோத்து. விவாகரத்து வரை செல்லும் கசப்பான உறவில் மன உளைச்சலை சந்திப்பது, ஒரு தாயின் மன உணர்வுடன் ஆபத்தான நேரத்தில் குடும்பத்தைக் காக்கப் போராடுவது என நடிப்பில் நல்ல மெச்சூரிட்டி தெரிகிறது.
காவல் அதிகாரியாக, ஒரு சுயநலம், பேராசையின் பிம்பமாக மிரட்டியுள்ளார் ஹக்கிம் ஷாஜகான். அசோகன், மதுபால் உள்ளிட்ட மற்றவர்கள் முக்கியத்துவமுள்ள கேரக்டரில் பொருந்தியிருக்கிறார்கள்.
தினேஷ் புருஷோத்தமனின் ஒளிப்பதிவும், ஜேக்ஸ் பிஜாயின் பின்னணி இசையும் படத்தை தாங்கிப் பிடிக்கின்றன.
நாயகன் அதிரடியான சண்டைக் காட்சிகளில் ஈடுபடுவது அவரது கேரக்டருக்கு பொருந்தவில்லை என்றாலும் அந்த காட்சிகள் விறுவிறுப்பாகவே இருக்கிறது.
எழுத்தாளர் சமீர் அப்துல் அமைத்திருக்கும் நான் லீனியர் திரைக்கதை, படத்தின் முதல் பாதியை விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகமாகவும் கடந்தோட வைக்கிறது. அடுத்தடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பை உருவாக்குகிறது.
அப்படி முதல் பாதியில் சுறுசுறுப்பாக பயணிக்கும் திரைக்கதை, பின்னர் அரசியல், சோஷியல் மீடியாக்களின் ஆதிக்கம் என பலவற்றை கலந்துகட்டியதில் வேகம் குறைகிறது; படத்தின் நீளம் 168 நிமிடங்களாக நீள்வதால் சலிப்பு தட்டுகிறது. இன்டர்வலுக்கு பிறகான திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் ஈடுபாடு காட்டியிருந்தால் பிரமாதமான திரில்லர் அனுபவத்தை ஆடியன்ஸுக்கு கொடுத்திருக்கலாம்.
Rating 3 / 5

