மனித மனதின் உளவியல் சிக்கல்களைப் பேசும் விசித்திரமான பரிசோதனைப் படம்.
ராவ் பகதூர் மாபெரும் ஜமீன் பரம்பரை வாரிசு; தனது இரு மகன்களில் ஒருவர் இறந்துவிட, மனைவியை வீட்டின் ஒரு அறையில் சிறை வைக்கிறார். காலம் கடந்தோட முதுமையடைகிறார். குடிக்கு அடிமையாகி, கல்லீரல் புற்றுநோய் உருவாகி, நோய் முற்றி இன்னும் சில நாட்களில் சில நாட்களில் இறந்து விடுவார் என உறவுகள் எதிர்பார்க்கும் நிலையில் இருக்கிறார். மனநலம் பாதிக்கப்பட்டவர் மாதிரியும் நடந்து கொள்கிறார்.
நோய் முற்றிய பின்னும் அவரது உயிர் பிரியாமல் இருப்பதற்கு, அவர் எதையோ தெரிந்து கொள்ள விரும்புவதுதான் காரணம் என்கிறார்கள். அப்படி எதை தெரிந்து கொள்ள விரும்புகிறார் என்பதையும், அவர் கடந்து வந்த வாழ்க்கைப் பாதையையும் விரிவாக காண்பித்தபடி சுற்றிச் சுழல்கிற படத்தின் பெரும்பகுதி வெரி வெரி இன்ட்ரஸ்டிங்.
இளமைப் பருவம், முதுமைப் பருவம், உடல் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட நிலை, மாயாஜால கற்பனையுலகில் வாழ்கிற நிலை என வயதுக்கும் கதாபாத்திரத்தின் தன்மைக்கும் ஏற்றபடி வித்தியாசமான உடல்மொழியும் அசத்தலான முகபாவங்களும் டயலாக் டெலிவரியுமாக பாராட்டும்படியான நடிப்பால் ராவ் பகதூருக்கு உயிரூட்டியிருக்கிறார் சத்யதேவ்.
ஆணாதிக்கத்தில் சிக்கியிருக்கும் பெண்ணின் உணர்வுகளை சரியாக வெளிப்படுத்தியிருக்கிறார் பகதூரின் வாழ்க்கைத் துணையாக வருகிற தீபா தாமஸ்.
பகதூரின் ரகசியங்கள் அனைத்தும் அறிந்த ஃபேமிலி டாக்டராக விகாஸ் முப்பாலா, மகன்களில் ஒருவராக சிறுவன் கிரண், இன்னொரு மகனாக பிரணாய் வாகா, போலீஸ் அதிகாரியாக ஆனந்த் பாரதி, வேலைக்காரியாக பாலா பராசர் என ஒவ்வொருவருக்கும் கதையில் பெரியளவில் முக்கியத்துவமிருக்கிறது. அதை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.
கார்த்திக் பர்மாரின் நேர்த்தியான ஒளிப்பதிவு அரண்மனையின் பிரமாண்டத்தை, கனவுலக காட்சிகளை அழகாக பதிவு செய்திருக்கிறது. ஸ்மரன் சாயின் பின்னணி இசை மற்றும் அஸ்வின் ராஜசேகரின் ஒலி வடிவமைப்பு படத்துக்கு பலம் சேர்த்திருக்கிறது.
படு வித்தியாசமான கதை, ரசிக்க வைக்கிற, கலகலப்பூட்டுகிற காட்சிகள், அடடே என்று ஆச்சரியப்பட வைக்கிற கிளைமாக்ஸ் ட்விஸ்ட்… படம் பார்த்து முடித்ததும் வேறோரு உலகத்துக்குள் சென்று கொஞ்ச நேரம் சுற்றித் திரிந்து திரும்பிய உணர்வு ஏற்படும். அதற்காகவே ராவ் பகதூரைப் பார்க்க தியேட்டருக்கு போகலாம்.
Rating 3.5 / 5

