பவிஷ் நாராயணன் நடிக்கும் ‘லவ் ஓ லவ்’ படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் 15.6.2026 அன்று சென்னையில் நடந்தது. சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் சுப்பிரமணிய சிவா, நடிகர்கள் தர்ஷன் கேபிஒய் பாலா ஆகியோர் கலந்து கொண்டனர்.
காதல் நகைச்சுவை திரைப்படங்களுக்கு தமிழ் சினிமாவில் எப்போதும் தனி ரசிகர் பட்டாளம் உண்டு. வயது வித்தியாசமின்றி அனைத்து தரப்பினரையும் கவரும் இந்த வகை படங்கள், சமீப காலங்களில் தொடர்ந்து வெற்றிப் படங்களாக உருவெடுத்து வருகின்றன. அந்த வரிசையில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள புதிய படம் இது.
மகேஷ் ராஜேந்திரன் எழுதி இயக்கியுள்ள இந்த படத்தில் நாகா துர்கா, இயக்குநர் செல்வராகவன், இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார், வனிதா விஜயகுமார், ரம்யா, ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இன்று வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது. வெறும் 80 வினாடிகளில் காதல், நகைச்சுவை, இளமைத் துள்ளல் மற்றும் சுவாரஸ்யமான சம்பவங்களின் கலவையை அழகாக பதிவு செய்திருக்கும் இந்த டீசர், சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
உறவுகள் மீது அதிக ஈடுபாடு கொண்ட ஒரு இளைஞனின் வாழ்க்கையில் நிகழும் எதிர்பாராத திருப்பங்களையும், அதனால் உருவாகும் நகைச்சுவை மற்றும் உணர்ச்சிகரமான தருணங்களையும் படத்தின் டீசர் சுவாரஸ்யமாக வெளிப்படுத்துகிறது. மேலும், ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் வழங்கப்பட்டுள்ள தனித்துவமான அறிமுகம் டீசரின் பலமாக அமைந்துள்ளது.
குறிப்பாக இயக்குநர் செல்வராகவன் ஏற்றுள்ள நகைச்சுவை கலந்த கதாபாத்திரம் ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளது. அவரது இயல்பான நடிப்பும், வித்தியாசமான திரைப்பிரசன்னமும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது.
சென்னை நகரின் பல்வேறு அழகிய இடங்களில் பெரும்பாலும் படமாக்கப்பட்டுள்ள இப்படம், நகர்ப்புற காதல் கதைக்கு ஏற்ற தனித்துவமான காட்சியமைப்பைக் கொண்டுள்ளது. சில முக்கிய காட்சிகள் ஊட்டியிலும் படமாக்கப்பட்டுள்ளன. படம் வெளியாகும் முன்பே அதன் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமையை அமேசான் பிரைம் வீடியோ நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. படத்தின் உள்ளடக்கம் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களில் நம்பிக்கை கொண்டு இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இசைத்துறையின் முன்னணி நிறுவனமான திங்க் மியூசிக் இப்படத்தின் இசை வெளியீட்டு நிறுவனமாக இணைந்துள்ளது.
‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற பவிஷ் நாராயண், தமிழில் அறிமுகமாகும் பிரபல தெலுங்கு யூடியூப் நட்சத்திரமான நாகா துர்காவுடன் ஜோடி சேர்ந்துள்ளார்.
படத்திற்கு இசையமைத்திருப்பவர்கள் வடசென்னையைச் சேர்ந்த இளம் இசையமைப்பாளர் ஜோடியான FOXn (பிரதீப் பி.ஜே. – வேய்ன் பேவி). இவர்களின் இசையில் உருவான பாடல்கள் விரைவில் வெளியாக உள்ளன.
ஒளிப்பதிவாளர் பி.ஜி. முத்தையா, தேசிய விருது பெற்ற படத்தொகுப்பாளர் என்.பி. ஸ்ரீகாந்த், கலை இயக்குநர் பா. மகேந்திரன் ஆகியோர் இடம்பெற்றுள்ள தொழில்நுட்பக் குழுவும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது.
இறுதிக்கட்ட பின்னணிப் பணிகளில் இருக்கும் ‘லவ் ஓ லவ்’, ஜூலை 2026-ல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இளைய தலைமுறையின் காதல், உறவுகள் மற்றும் வாழ்க்கையை நகைச்சுவையுடன் சொல்லும் இந்த திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் என்ற நம்பிக்கையில் படக்குழு உள்ளது.

