HomeGeneralஇந்தப் படத்தின் கதை பாட்டிலுக்கு பத்து ரூபா வாங்குவது பற்றியது! -ரவி மரியா கதை நாயகனாக...

இந்தப் படத்தின் கதை பாட்டிலுக்கு பத்து ரூபா வாங்குவது பற்றியது! -ரவி மரியா கதை நாயகனாக நடித்திருக்கும் மக்கள் தலைவா’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் இயக்குநர் ராம் தேவ் பேச்சு

Published on

ரவி மரியா கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘மக்கள் தலைவா.’ வரும் ஜூன் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

நிகழ்வில் படத்தின் இயக்குநர் ராம் தேவ் பேசுகையில், ”வாழ்க்கையில் இந்த தருணத்தை பொக்கிஷமாகவும் சந்தோஷமாகவும் அனுபவிக்கிறேன். ஏனெனில் நான் பார்த்து மிரண்ட திரையுலக ஜாம்பவான்கள் அனைவரும் இந்த மேடையில் ஒன்றாக அமர்ந்துள்ளனர். இவர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.

‘மக்கள் தலைவா’ என்ற இந்தப் படத்தின் கதையை முதன்முதலாக இயக்குநர் சி ரங்கநாதன் மூலமாக இயக்குநர் எஸ். ஏ . சந்திரசேகரிடம் சொன்னேன். இந்தப் படத்தின் கதை- பாட்டிலுக்கு பத்து ரூபா வாங்குவது பற்றியது. அவருடன் நீண்ட நேரம் கதையைப் பற்றி விவாதித்தேன். அதில் ஒரு கட்டத்தில் ஹீரோவிற்கு எதிராக அரசியலில் இரு துருவங்கள் ஒன்றிணைவது போன்று வரும். அப்போது இது எப்படி லாஜிக் படி சரியா வரும்? எனக் கேட்டேன். அரசியலில் அதெல்லாம் வரும் என்றார். அதனைத் தொடர்ந்து இந்தப் படத்திற்கு ‘மக்கள் தலைவா’ என்ற டைட்டிலையும் அவர்தான் தேர்வு செய்தார். அவருக்கு இந்த தருணத்தில் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் பகிர்ந்து கொள்ள முடியாத சில காரணங்களால் அவரால் நடிக்க முடியவில்லை.

அதன் பிறகு இந்த கதையில் யாரை நடிக்க வைக்கலாம் என்று பட்டியலிட்டபோது ராதாரவி இடம் பெற்றார். கதையைக் கேட்ட அவர் எனக்கு அரசியல் நன்றாகத் தெரியும் ஆனால் எனக்குத் தெரியாத பல விசயங்களை நீ தெரிந்து வைத்திருக்கிறாய். அதை எப்படி நீ யோசித்தாய்..! என கேட்டுவிட்டு, நடிக்க சம்மதம் தெரிவித்தார். படப்பிடிப்பு தளத்தில் அவர் எதிர்பார்த்ததை விட சிறப்பாக நடித்தார்.‌

அதன் பிறகு இயக்குநர் சி ரங்கநாதன் இந்த கதைக்கு பொருத்தமான ஹீரோ ரவி மரியா தான் என்றார். அதன் பிறகு அவர் அரசியல் மேடையில் பேசிய பேச்சுக்களை இணையத்தில் பார்வையிட்டேன். அப்போதே இந்த கதைக்கு நாயகன் இவர்தான் என தீர்மானித்து விட்டேன். அவரையும் சந்தித்தேன். முதலில் கதாநாயகனாக நடிக்க தயக்கம் காட்டினார். அதன் பிறகு முழு கதையையும் கேட்டுவிட்டு கதையின் நாயகனாக நடிக்க ஒப்புக்கொண்டார். அவருக்கும் நன்றி. அதன் பிறகு பழ. கருப்பையா, நாஞ்சில் சம்பத், இயக்குநர் பேரரசு, கஞ்சா கருப்பு, என ஒவ்வொருவராக இணைந்தனர். அனைவருக்கும் நன்றி” என்றார்.

நடிகர் ரவி மரியா பேசுகையில், ” என்னுடைய அன்பிற்காக, நட்பிற்காக இங்கு வருகை தந்திருக்கும் அனைவருக்கும் நன்றி.

வழக்கமாக நான் அனைத்து படங்களிலும் வில்லனாக நடித்தாலும் காமெடியாக நடித்தாலும் கேரக்டரில் நடித்தாலும் நிறைய பேசுவேன். ஆனால் இந்த படத்தில் கதாநாயகன் என்பதால்.. நிறைய பேசவில்லை. இருந்தாலும் இந்தப் படத்தை அனைவரும் திரையரங்குகளில் பார்த்து ரசித்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

அரசியல்வாதி -தமிழறிஞர்- தயாரிப்பாளர் – நடிகர்- பழ .கருப்பையா பேசுகையில், ” இயக்குநர் ராம்தேவ் நகைச்சுவையான படத்தை உருவாக்கி இருக்கிறார். படப்பிடிப்பு தளத்தில் ஐந்து நாள் பணியை மூன்று நாளிலேயே விரைவாக நிறைவு செய்யக்கூடிய ஆற்றல் படைத்தவர். இவருக்கு ஒளிப்பதிவாளரும் இணையாக பணியாற்றினார். இயக்குநர் தான் இப்படத்தின் முதல் தயாரிப்பாளர். தொடங்கிய பிறகு இடையில் நின்று விட்டது. தயாரிப்பாளர் தேவைப்பட்டார் அப்போது அவருடைய சொந்த ஊரில் உள்ள தொழிலதிபர் கவிதாலயா சரவணனை பார்த்து பேசி, மயக்கி, அவருக்கு ஒரு கதாபாத்திரத்தை வழங்கி படத்தின் பணிகளை தொடங்கினார். அவருடைய வீட்டிலேயே படப்பிடிப்பு நடைபெற்றது. முழு படமும் அவருடைய வீட்டில் தயாரானது தான். இந்தப் படத்தின் மூலம் தயாரிப்பாளர் கவிதாலயா சரவணனின் அறிமுகமும் நட்பும் கிடைத்தது. அவர் பெரிய செல்வந்தர். எங்களிடம் பேசும் போது நான் இரண்டு முறை அமெரிக்காவிற்கு சென்று திரும்பும் செலவுதான் பரவாயில்லை. நான் தயாரிக்கிறேன் என்றார். அதன் பிறகு தற்போது இந்த படம் வெளியாகும் வகையில் அவர் தன்னுடைய கவனத்தை செலுத்தி வருகிறார்.

இயக்குநர் ராம் தேவிற்கு நன்றாக நகைச்சுவையாக கதையை சொல்லக்கூடிய ஆற்றல் உண்டு. நான் இந்தப் படத்தில் கெடுமதியாளனாக அதாவது வில்லனாக நடித்திருக்கிறேன். பிற வேடங்களில் நடித்திருக்கிறேன். ஆனால் நகைச்சுவையாக இந்த படத்தில் தான் நடித்திருக்கிறேன். இதை மிகவும் ரசித்தேன்.

எந்த ஒரு படமும் கதையும் காலத்தை கடந்து நிற்க முடியாது. ‘ஹரிதாஸ்’ திரைப்படம் வந்த காலகட்டத்தில் ‘பராசக்தி’ வந்து மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. அதனால் எவராலும் காலத்தை கடந்து எந்த ஒரு கதையையும் சொல்ல முடியாது. காலத்திற்கு உட்பட்டு காலகட்டத்தில் நடைபெறும் சம்பவங்களை உள்வாங்கி கதையை சொல்கிறவன் வென்று விடுவான்.

கே பாக்யராஜ் ஒரு சிறந்த கதாசிரியர். காலத்தையும் சமூகத்தையும் உள்வாங்கி அதை கதையாக சொல்கிற ஆற்றல் நமக்கு இருந்து, அதை கலை வடிவத்தில் வெளிப்படுத்தும் போது அவை மிகப்பெரிய வெற்றியை பெறும்.

மகாபாரதங்கள் ஏன் மீண்டும் மீண்டும் எழுதப்படுவதில்லை என்று நான் நினைப்பேன். மகாபாரதத்தில் உள்ள தர்ம புத்திரனை உருவாக்க.. சிறந்த இயக்குநர்கள் போதாது. அதற்கு வலிமை வாய்ந்த வியாசரை போன்ற ஒருவர் தான் வேண்டும்.

மூவாயிரம் ஆண்டுகளாக தர்ம புத்திரனுக்கு நிகராக எந்த ஒரு கதாபாத்திரத்தையும் யாராலும் உருவாக்க முடியவில்லை. வாழ்க்கையிலும் சந்திக்கவில்லை. இதிகாசங்களிலும் சந்திக்கவில்லை.. அவனைப் படைப்பதற்கு அவனை விட ஆற்றல்மிக்க கதை தலைவன் வேண்டும். அதனால் தர்ம புத்திரனை வியாசரை தவிர வேறு யாராலும் படைக்க முடியாது.

நான் படித்த கதைகளிலேயே மிகவும் சிறந்த கதை லியோ டால்ஸ்டாய் எழுதிய ‘ரெஸரக்சன்’. டால்ஸ்டாய் காந்திஜிக்கே முன்னோடி. இந்த கதையை நான் பலமுறை வாசித்திருக்கிறேன். இப்படி ஒரு கதை தலைவனை எப்படி ஒரு கதாசிரியரால் உருவாக்க முடியும் என்பதை நான் எண்ணிப் பார்த்தால் … அந்த கதையின் தலைவனே டால்ஸ்டாய் தான்.

நம் காலத்தில் காலத்தின் சரிவை… அரசியலின் இழிவை… வெளிப்படுத்துகின்ற படமாக இந்த படம் அமைந்திருக்கிறது.

சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு புடம் போட்ட தலைவர்கள் நாடாளும் தன்மை வேறு. அவர்கள் அரசியல் என்பது அதிகாரம் என்று கருதியவர்கள் இல்லை. அரசியல் என்பது தொண்டு. அரசியல் என்பது தியாகம். அரசியல் என்பது நேர்மை.. என்று ஒரு 30 ஆண்டு காலம் சிறைகளில் கழித்து, வாழ்ந்து நெறிப்படுத்தப்பட்டு பிறகு ஆட்சித் தலைவனாக வருகிறவர்கள்.

அதற்குப் பிறகு கூட இந்த மண்ணில் கொள்கை சார்ந்த இயக்கங்கள் வளர்ந்தன. அந்த கொள்கையோடு ஊறி திளைத்து தலைவர்களாக மேன்மை அடைகிறார்கள். ஆனால் ஒன்றும் இல்லாமல் அதிகாரத்திற்காக…. அதிகாரத்தை சுவைப்பதற்காக … பெருமைக்காக… என்ற நிலை வந்து விட்ட பிறகு, அரசியலில் வீழ்ச்சி ஏற்பட்டே தீரும். அந்த வீழ்ச்சி ஏற்பட்டது . ஆனால் தமிழ் சமுதாயம் முதிர்ச்சி அடைந்த சமுதாயம். ஆகவே இதிலிருந்து மீட்பதற்காகத்தான் ராம்தேவ் போன்றவர்கள் கதை எழுதுகிறார்கள். இது இன்றைய அரசியல் மோசமாக இருக்கிறது என்று சொல்லவில்லை. மோசமாக இருக்கிறது. இதிலிருந்து தமிழ் சமூகம் மீள வேண்டும் என்பதற்காகத்தான் இந்த கதையை எழுதி இருக்கிறார்கள். இந்த படமும் அப்படித்தான் அமைந்திருக்கிறது.

‘மக்கள் தலைவா ஃபார் சேல்’ என்பது மக்களுக்கு தலைவனாக இருக்கின்றவன் மக்களை வழிநடத்துகின்றவனாக இருக்க வேண்டும். விற்பனைக்கு உரியவனாக இருக்கக் கூடாது என்ற செய்தியை மிகச் சிறப்பாக இயக்குநர் ராம்தேவ் சொல்லி இருக்கிறார். ஆகவே அவரை நான் பாராட்டுகிறேன்.

எனவே கதையின் நாயகன் என்று சொல்வதற்கு ரவி மரியா வெட்கப்பட வேண்டிய தேவையில்லை. இந்த படம் வெற்றி பெற்று விட்டால்… நீங்கள் மிகப்பெரிய கதை தலைவராகி விடுவீர்கள். வெற்றி சார்ந்தது தான் நம்முடைய வாழ்க்கை ” என்றார்.

இயக்குநர் ஆர். கே. செல்வமணி பேசுகையில், ” 1986 ஆம் ஆண்டில் மணிவண்ணன் இயக்கத்தில் வெளியான ‘தீர்த்தக் கரையினிலே’ என்ற படத்திற்கு தயாரிப்பாளர் பழ. கருப்பையா. அந்தப் படத்தில் நான் உதவி இயக்குநர். நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு அவரை இந்த மேடையில் பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த நிகழ்விற்கு ஏராளமான திரையுலக பிரபலங்கள் வருகை தந்திருக்கிறார்கள் என்றால்.. அதற்கு ரவி மரியாவின் நட்புதான் காரணம். ரவி மரியா சிறந்த நடிகர் மட்டுமல்ல சிறந்த பண்பாளர். அனைவருக்கும் உதவி செய்யும் தாராள மனப்பான்மை கொண்டவர். சிறந்த படைப்பாளியும் கூட. இயக்குநர் சங்கத்தின் பொறுப்பில் இருந்தபோது உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக கேட்டவுடன் எந்தவித தயக்கமும் இல்லாமல் லட்சக்கணக்கான ரூபாயை நன்கொடையாக வழங்கியவர்.

இந்தப் படத்தில் அவர் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இங்கு திரையிடப்பட்ட இரண்டு பாடல்களும் சிறப்பாக இருந்தது. இசையமைப்பாளர் துளசிராமனுக்கு சிறந்த எதிர்காலம் இருக்கிறது. அவரையும் வாழ்த்துகிறேன்.

இந்தப் படத்தின் டிரைலர் திரையிடப்படவில்லை. ஏனென்று கேட்டபோது.. சென்சார் பிரச்சனை என்றார்கள். பொதுவாக இது போன்ற பிரிவியூ தியேட்டர்களில் ட்ரெய்லரை திரையிடும்போது யாரும் சென்சார் சர்டிபிகேட்டுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ஆனால் அதே தருணத்தில் படம் சற்று வில்லங்கமாக இருந்தால் பிரிவ்யூ தியேட்டரில் திரையிடுவதற்கு தயக்கம் தெரிவிப்பார்கள். அப்படி என்றால்… இந்தப் படத்தில் ஏதோ வில்லங்கம் இருக்கிறது என்று தெரிகிறது.‌

பத்து ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ‘தலைவா’ படத்திற்கும் சென்சார் பிரச்சனை இருந்தது. தற்போது தயாராகி இருக்கும் ‘மக்கள் தலைவா’ படத்திற்கும் சென்சார் பிரச்சனை இருக்கிறது.

ஆனால் நாங்கள் படத்தை இயக்கிய போது எங்களுக்கு அத்தகைய நெருக்கடி இருந்ததில்லை. ‘மக்களாட்சி’ என்ற அரசியல் படத்தை இயக்கிய போது எனக்கு எந்தவித சிக்கலும் ஏற்பட்டதில்லை. அப்போது படைப்பாளிகளுக்கு சிறிதளவு சுதந்திரம் இருந்தது என நினைக்கிறேன். ஆனால் தற்போது உள்ள படைப்பாளிகளுக்கு கண்ணுக்குத் தெரியாத ஒரு பயம் சூழ்ந்திருக்கிறது.‌

இந்தப் படத்தை செய்யலாமா…? படத்தை இயக்கினால் தணிக்கை செய்வார்களா? தணிக்கை செய்த பின்பு திரையரங்குகளில் வெளியிடுவார்களா? மத்திய அரசு இந்த படத்திற்கு சென்சார் செய்யுமா? அதையும் கடந்து வந்தால் மாநில அரசாங்கம் இந்த படத்தை திரையரங்குகளில் வெளியிட அனுமதிக்குமா.. ?அதையும் கடந்து படம் திரையரங்குகளில் வெளியானால் இங்குள்ள ஜாதி, மத அமைப்புகள் ஏதேனும் பிரச்சனைகளை ஏற்படுத்தி படத்தை நிறுத்தி விடுவார்களா? என பல விசயங்கள் இருக்கிறது.

ஒரு படைப்பாளி ஒரு உண்மையை சொல்வதற்கு ஏராளமானவர்களுக்கு பயப்பட வேண்டிய சூழல் இன்று இருக்கிறது.

உண்மையை தவிர வேறு எதை வேண்டுமானாலும் திரைப்படங்களில் பேசலாம். உண்மையைப் பேசினால் மட்டும்தான் அந்தத் திரைப்படம் வெளியில் வருவதற்கு கஷ்டம். பொய்யை பேசலாம்… கற்பனையைப் பேசலாம் …ஆபாசத்தை பேசலாம்… அருவெறுப்பை பேசலாம்… வன்முறையை பேசலாம்… கலாச்சார சீரழிவை பற்றி பேசலாம்… ஆனால் உண்மையை மட்டும் பேசக்கூடாது. மீறி பேசினால் அந்தப் படம் இந்தியாவில் வெளியாவது கஷ்டம். இதனை நான் உணர்ந்து தான் சொல்கிறேன். இதற்கு மிகப்பெரிய உதாரணம் எனது இயக்கத்தில் உருவான ‘குற்ற பத்திரிக்கை’. இந்தப் படம் என் வாழ்க்கையே திசை மாற்றிய படம்.

இன்றுள்ள படைப்பாளிகள் எப்படி இந்த விசயத்தை சொல்வது என்பதை தெரிந்து கொண்டிருக்கிறார்கள். அதனை கொஞ்சம் காமெடியாக சொல்லத் தொடங்கி இருக்கிறார்கள். அந்த வகையில் ‘மக்கள் தலைவா’ படம் உருவாகி இருக்கிறது. அதிலும் நாஞ்சில் சம்பத்- பழ கருப்பையா- ராதாரவி – என அரசியல்வாதிகள் நடித்திருக்கிறார்கள். அதனால் இந்த படத்தில் ஏதோ ஒரு விசயம் இருக்கிறது என்பது மட்டும் தெரிகிறது.

நட்பிற்கு இலக்கணமாக திகழும் ராதாரவி. இந்தப் படத்தைப் பற்றியும், இதில் பணியாற்றிய கேமராமேனை பற்றியும் பாராட்டி பேசினார். சின்ன பட்ஜெட் தயாரிப்பாளர்களுக்கு அவர் ஒரு சூப்பர் ஸ்டாரான கேமரா மேன் என குறிப்பிட்டார். எனக்கு கேமரா மேன் கார்த்திக் பற்றி எதுவும் தெரியாது. ஆனால் அவருடைய வேலையைப் பற்றி ராதாரவி சொன்ன பிறகுதான் அவருடைய திறமையை நான் தெரிந்து கொண்டேன். இந்தப் படத்துக்குப் பிறகு அவருக்கும் பெரிய எதிர்காலம் உள்ளது.

இந்த படத்தின் டைட்டில் ‘மக்கள் தலைவா’ மட்டுமல்ல.. அதன் கீழ் ‘ஃபார் சேல்’ என இடம் பிடித்திருக்கிறது. இதைப் பற்றி புரிந்தவர்களுக்கு நன்கு தெரியும். இப்படி யோசிப்பதற்கு ஒரு துணிச்சல் வேண்டும். அதனை டைட்டிலில் டேக் லைனாக இடம்பெறச் செய்வதற்கும் ஒரு தைரியம் வேண்டும். நாம் அரசியலில் யாரையும் குறை சொல்லப் போவதில்லை. ஆனால் ஒரு பாட்டிலுக்கு பத்து ரூபாய் என்பதை பலர் சொல்லிக் கொண்டிருந்தனர். படத்தில் இந்த கதாபாத்திரத்தில் பேரரசு நடித்திருக்கிறார்.

நடிகர் ரவி மரியாவிற்கு இடுப்பு வளையாது. ஆனால் இந்த படத்தில் அவர் ஹீரோயினுடன் பாடல் காட்சியில் நன்றாக டான்ஸ் ஆடி இருக்கிறார். அவருடைய நல்ல மனதிற்கும் நகைச்சுவையான படம் என்பதாலும் இந்த படம் பெரிய வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்” என்றார்.

Latest articles

கதையின் ஆன்மாவை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்த சாம் சி எஸ்… ஒரே நாளில் இரண்டு ஜானர்களில் அசத்தல்!

இசை என்பது வெறும் பாடல்களுக்கோ பின்னணி இசைக்கோ மட்டும் அல்ல, ஒரு கதையின் ஆன்மாவை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும்...

க்ரைம் த்ரில்லர் சப்ஜெக்டில் மலையாளப் படங்களுக்கு இணையாக போட்டி போடும் ‘தி டார்க் ஹெவன்.’

மலையும் மலை சார்ந்த குறிஞ்சி நிலப் பின்னணியில் உருவாகியிருக்கும் பரபரப்பான க்ரைம் த்ரில்லர் திரைப்படம் 'தி டார்க் ஹெவன்.'...

‘அறுவடை’ படப்பிடிப்பு நிறைவில் பிறந்தநாள் கொண்டாட்டம்… உற்சாகத்தில் தயாரிப்பாளர் கார்த்திகேசன்! 

ஒவ்வொருவருக்கும் பிறந்தநாள் கொண்டாடும்போது மகிழ்ச்சியான மனநிலை வேண்டும். ஏதோ ஒரு காரியத்தை செய்து முடித்து ஏதோ ஒரு நல்ல...

‘நாகபந்தம்’ படத்தின் புரமோஷன் அனந்த பத்மநாப சுவாமி ரதயாத்திரையுடன் தொடக்கம்!

அபிஷேக் நாமாவின் பிரமாண்டமான கனவுத் திரைப்படமான 'நாகபந்தம்' ஜூலை 3ஆம் தேதி உலகம் முழுவதும் மிகப்பெரிய அளவில் திரையரங்குகளில்...

More like this

கதையின் ஆன்மாவை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்த சாம் சி எஸ்… ஒரே நாளில் இரண்டு ஜானர்களில் அசத்தல்!

இசை என்பது வெறும் பாடல்களுக்கோ பின்னணி இசைக்கோ மட்டும் அல்ல, ஒரு கதையின் ஆன்மாவை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும்...

க்ரைம் த்ரில்லர் சப்ஜெக்டில் மலையாளப் படங்களுக்கு இணையாக போட்டி போடும் ‘தி டார்க் ஹெவன்.’

மலையும் மலை சார்ந்த குறிஞ்சி நிலப் பின்னணியில் உருவாகியிருக்கும் பரபரப்பான க்ரைம் த்ரில்லர் திரைப்படம் 'தி டார்க் ஹெவன்.'...

‘அறுவடை’ படப்பிடிப்பு நிறைவில் பிறந்தநாள் கொண்டாட்டம்… உற்சாகத்தில் தயாரிப்பாளர் கார்த்திகேசன்! 

ஒவ்வொருவருக்கும் பிறந்தநாள் கொண்டாடும்போது மகிழ்ச்சியான மனநிலை வேண்டும். ஏதோ ஒரு காரியத்தை செய்து முடித்து ஏதோ ஒரு நல்ல...