அசோக் செல்வன் நடித்துள்ள ‘அன்பில் அவன்’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய அறிமுக விழா சென்னையில் நடந்தது.
நிகழ்வில் படத்தின் நாயகன் அசோக் செல்வன் பேசும்போது,
“இது மகிழ்ச்சியான விழா இதில் பேசுவதற்காக எதுவும் தயாரித்துக் கொண்டு வரவில்லை .அந்த அளவுக்கு சென்சார் தொடங்கிப் பட வேலைகள் இருந்து கொண்டே இருந்தன.
நான் நடித்து படம் வந்து இரண்டரை ஆண்டுகள் ஆகின்றன. சினிமாவில் இரண்டரை ஆண்டுகள் என்பது ஐந்து ஆண்டுகள் போன்றது. ஒரு திரைப்படம் என்பது ஏதோ செய்துவிட்டுச் செல்வதல்ல. சினிமா என்றால் நான் நினைப்பேன் ஏதாவது தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். அப்படிப்பட்ட படத்தில் தான் நான் நடிக்க வேண்டும் என்று இருக்கிறேன். நல்ல கதைகள், நல்ல கதா பாத்திரம் பார்த்து நடிக்க வேண்டும். அனைத்தும் இதில் தேர்ந்தெடுத்து செய்தோம்.இந்தப் படத்தில் எனக்குப் பல நண்பர்கள் கிடைத்தார்கள். பல அனுபவங்களைக் கற்றுக் கொண்டோம்.
நான் இந்த விழாவுக்குக் கூப்பிட்ட அனைவரும் இங்கே வந்திருக்கிறார்கள். அது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது .ஏதோ ஒரு முயற்சி செய்ய வேண்டும் மக்களிடம் ஏதாவது கொடுக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். ஒரு படத்தின் போஸ்டரில் என்னுடைய பெயர் போட்டிருந்தால் 100 சதவீதம் எனது உழைப்பு அதில் இருக்க வேண்டும் என்று நினைப்பேன்.அதற்கான மறு கண்டுபிடிப்பு மறு தேடல் செய்ய வேண்டும்.
இந்த முக்கியமான படம் கொடுத்ததற்கு முதலில் என் அக்காவிற்கு நன்றி. மூன்று நான்கு வருடங்களாக அவர் என்னுடன் இருக்கிறார்.பல கடினமான விஷயங்களைக் கடந்து இருக்கிறார். பல சிரமங்களை நான் கடப்பதற்கு அவர்தான் காரணம். எனக்கு அக்கா பலமும் அண்ணன் பலமுமாக அவர் இருந்திருக்கிறார். ஒரு கட்டத்தில் பலரும் மாறி விடுவார்கள் .ஆனால் என் அக்கா அப்படியே இருக்கிறார். அப்பா அம்மாவுக்கு நன்றி. படத்தின் பட்ஜெட் தாண்டிய போது செலவு அதிகமாகும் வீடு அடமானம் வைப்பதற்காக பத்திரத்தைக் கேட்டபோது அவர்கள் தயங்காமல் கொடுத்தார்கள். மகன் ஏதோ செய்கிறான் என்று அவனது கனவுக்காக ஆதரவு கொடுத்தார்கள்.
இயக்குநரும் நானும் பத்து ஆண்டுகளாக நண்பர்களாக இருக்கிறோம்.என் படத்தில் அறிமுகமானவர்கள் இன்று பெரிய படங்களை இயக்கும்போது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.
விக்னேஷ் ராஜா தனுஷ் படத்திலும் அஸ்வத், ரஜினி சார் படத்திலும் இருப்பதை நினைக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. இரண்டு பேரும் வளர வாழ்த்துக்கள்.இங்கே வந்திருக்கும் கௌதம் கார்த்திக் என் தம்பி. அதற்கு மேல் சொல்வதற்கு ஒன்றுமில்லை .எடிட்டர் செல்வாவும் நானும் கல்லூரிக் காலத்திலிருந்து நண்பர்கள். அவர் தனது சிறந்த பங்களிப்பைக் கொடுத்திருக்கிறார்
பீட்டர் ஹெய்ன் மாஸ்டருக்கு நன்றி. இந்தப் படத்தைப் பெரிய படமாக்கியது அவர் தான். பெரிய படங்களில் தொடர்ந்து பணியாற்றுபவர் இது மாதிரி சின்ன படத்திற்கு பணியாற்றுவாரா என்று சந்தேகமாக இருந்தது.ஆனால் அவர் சிறந்த வகையில் உருவாக்கி இருக்கிறார். ஒளிப்பதிவாளர் கௌதம் நல்ல காட்சிகளைக் கொடுத்திருக்கிறார்.
ப்ரீத்தி முகுந்தன் எங்கள் படத்தில் நடித்த போது அவரது ஒரு படம் தான் வந்திருந்தது. அவர் நான் முதலீடு செய்துள்ள பிட்காயின் என்று சொல்வேன். இப்போது நான் கல்லூரி விழாக்களுக்கு எங்கு சென்றாலும் ப்ரீத்தி முகுந்தனைக் கேட்டதாகச் சொல்லுங்கள் என்று கத்துகிறார்கள். இந்த படத்தின் இரண்டாம் பாகத்திலும் அவர் நடிக்கலாம்.
சபு சேட்டன் எங்களுக்கு படப்பிடிப்பில் பிரட் சப்ளை செய்தார். அங்கே ஒரு ஸ்டாலே போட்டு எங்களுக்கெல்லாம் கொடுத்தார். நான் நூறு இருநூறு ஆடிஷன் போயிருப்பேன்.இந்தப் படத்திலும் அப்படி ஆடிஷன் வைத்து தான் தேர்ந்தெடுத்தோம் .அப்படி ஒரு தங்கம் போல மகா, கதிர் போன்றவர்களைத் தேர்ந்தெடுத்தோம் .அவர்கள் பெரிய இடத்துக்கு செல்வார்கள்.
நல்ல கதையைத் தேர்ந்தெடுத்து உருவாகி இருக்கும் இந்தப் படம் மறக்க முடியாத திரையரங்க அனுபவமாக இருக்கும். இதை உலகில் சிறந்த படம் என்று நான் சொல்ல மாட்டேன். ஆனால் நல்ல திரையரங்கு அனுபவமாக இருக்கும்.
இந்தப் படத்தில் ஐங்கரன் இண்டர் நேஷனல் இணைந்த போது கருணாமூர்த்தி சார் ஒன்று கூறினார். அவர் கதையை மட்டும் கேட்டார். மற்றபடி என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் என்றார். அவர் தந்த ஆதரவுக்கு நன்றி. எனது மனைவி கீர்த்திக்கு நன்றி.”என்றார்.
இயக்குநர் ஆர்.கார்த்திகேயன் பேசும்போது,
“முதலில் என்னுடன் பணியாற்றிய எனது உதவி இயக்குநர்களுக்கும் உதவி ஒளிப்பதியாளர்களுக்கும் நன்றி .கடந்த இரண்டு ஆண்டுகளில் எனது மனைவியுடன் பேசியதை விட என் இணை இயக்குரிடம்தான் நான் அதிகம் பேசி இருக்கிறேன். அனைவருக்கும் நன்றி.
நான் படம் பற்றிப் பேச ஏதும் இல்லை என்று நினைக்கிறேன். ஏனென்றால் படம் நன்றாக இருக்கிறது .நம்பிக்கை இருக்கிறது. தணிக்கைத் துறையினர் தொடங்கித் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், ஓடிடி நிறுவனத்தினர் வரை எல்லாரும் நன்றாக இருக்கிறது என்று சொல்லிவிட்டார்கள் .அடுத்து படத்தை உங்களுக்கு எப்போது காட்டுவது என்று ஆசையாக இருக்கிறோம்
அசோக் செல்வனை எனக்குப் பத்து வருடங்களாகத் தெரியும். 2017 முறை முதல் பலமுறை படங்கள் தொடங்கி தொடங்கி நின்று தொடர முடியாமல் போயிருக்கிறது.ஒரு படத்தில் தயாரிப்பாளர் எங்களை வேண்டாம் என்றால் இன்னொரு படத்தில் நாங்கள் இந்தத் தயாரிப்பாளர் வேண்டாம் என்போம்.ஒரு நாள் படப்பிடிப்பிலிருந்து 13 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது வரை பல்வேறு முயற்சி அனுபவங்கள் உண்டு.
அசோக் செல்வன், அபிநயா இவர்களை நினைத்தால் எனக்குப் பெருமையாக இருக்கிறது . ஹேப்பி ஹை பிச்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் என்பதை நினைத்தாலும் பெருமையாக இருக்கிறது. தமிழ் சினிமாவில் புதுமுக இயக்குனர்களுக்கு வாய்ப்பு தரத் தயாராக இருக்கிறார்கள். நல்ல கதையோடு வாருங்கள். அசோக்செல்வன் கதையைத் தேர்வு செய்வதில் தெகிடி முதல் அவரது திறமையைக் காணலாம்.
என்னை இயக்குநர் ஆக்கியதற்கு நன்றி. விக்னேஷ் ராஜா இல்லையென்றால் இந்தப் படம் உருவாகி இருக்காது. அப்படிப்பட்ட கதை. .அபிநயா நல்ல கதைகளைத் தேர்வு செய்கிறார். ஒருமுறை நான் மதுரைக்கு எங்கள் அக்காவுக்கு உடல்நிலை சரி இல்லை என்று போய்க் கொண்டிருந்தபோது எனக்கு ஒரு போன் வந்தது .அப்படித்தான் தொடங்கியது.அவர் நம்பிக்கை அளித்து இந்த பட வாய்ப்பு கொடுத்தார். இந்தப் படத்தில் முழுக்க முழுக்க இந்த நம்பிக்கைதான் இப்படி மாயமாக நடந்து இருக்கிறது.
அசோக்செல்வன் கொடுத்த ஊக்கம் ஆதரவு முக்கியமானது. அவர் எனது படத்தில் ஒரு உதவி இயக்குநரைப் போல ஈடுபாடு காட்டினார். விளம்பர விஷயங்களில் கூட அவரது உதவி பெரிது. படத்தைச் சரியாகச் செய்ததாக மகிழ்ச்சியாக இருக்கிறது. ஹாப்பி ஹை நிறுவனம் இன்னும் மேலே உயர்ந்து வளர்ந்து வர வேண்டும். அறிமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பு தருகிறார்கள் .திறமையானவர்களுக்கு வாய்ப்பு தருகிறார்கள். நல்ல ஒரு திறமையான குழுவினரை வைத்திருக்கிறார்கள். நாம் ஒரு யோசனை சொன்னால் திரும்பி பத்து யோசனைகளாகத் தரும் அளவிற்கு இருக்கிறார்கள்.அப்படி இந்தப் படத்தில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர்,எடிட்டர், சவுண்ட் இன்ஜினியர் எல்லாரும் திறமைசாலிகள்.
இந்தப் படத்திற்கு பீட்டர் ஹெய்ன் மாஸ்டர் காட்டிய ஈடுபாடு சாதாரணமானதல்ல. அவர் பார்ப்பதற்குத் தான் குழந்தை போல இருப்பார் வேலை என்று வந்துவிட்டால் வெள்ளைக்காரன் சீனாக்காரன் எல்லாம் தாண்டி விடுவார். இந்தப் படத்தில் கடைசி 30 நிமிடம் பீட்டர் ஹெய்ன் மாஸ்டரின் படம் என்று கூறலாம். அவருக்குத் தனிப்பட்ட முறையில் பல பிரச்சினைகள் இருந்தாலும் 40 நாட்களுக்கும் மேல் தொடர்ந்து இந்தப் படத்திற்காகப் பணியாற்றினார்.
கோவிந்த் வந்தா நல்ல இசையில் நல்ல வரிகளையும் தேர்வு செய்பவர். தமிழ்ப் பாடகர்களைப் பாட வைத்துள்ளார் .அற்புதமான பாடல்கள் அற்புதமான வரிகள். அவர் வீட்டுக்குக் கொச்சி சென்ற போது அவர் இசையமைக்கும் விதத்தைப் பார்த்து நான் வியந்து போனேன்.
நான் திருத்தங்கள் சொல்லிக் கொண்டே வந்த போது வரியை மாற்ற சொன்னபோது அப்படி செய்தால் இது என் பாட்டாக இருக்காது உங்கள் பாட்டாக இருக்கும் என்றார். அதெல்லாம் மறக்க முடியாது.சிலருக்கு உதவியாளர்கள் என்று பெரும் கூட்டமே வைத்திருப்பார்கள். ஆனால் அவர் ஒன் மேன் ஆர்மி. அவரே வயலின் வாசிப்பார் ,வீணை வாசிப்பார் ,பெயர் தெரியாத கருவிகளையும் வாசிப்பார் .இந்த தலைமுறையில் இப்படி ஒரு இசையமைப்பாளர் புதிதாக தெரிந்தார்.
அபிநயா செல்வம் ஒரு துணிச்சல் மிக்க பெண்மணி தைரியம் மிக்க பெண்மணிக்கு உதாரணமாக அவர் இருக்கிறார் .உதவி இயக்குநர்கள் அவரிடம் திரைக்கதையை அனுப்பினால் மூன்று மணி நேரத்தில் பதில் வரும்.அனைவரும் அதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.ப்ரீத்தி முகுந்தன் ஒரு காட்சியில் சுமாராக நடித்திருந்தார் .ஆனாலும் என்ன செய்ய வேண்டும் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டே இருந்தார் . அவ்வளவு உற்சாகமானவர் .எப்போதும் முயற்சி செய்து கொண்டே இருப்பவர். அவர் நட்சத்திரம் அல்ல நடிப்புக் கலைஞர்.
ஒளிப்பதிவாளர் கௌதம் எனது செல்லப்பிள்ளை.சினிமாவில் சம்பாதிப்பதை சினிமாவில் முதலீடு செய்பவர்கள் மிகச் சிலரே. கமல் சார் போல் அசோக் செல்வனும் சினிமாவில் சம்பாதித்து எல்லாம் இதிலேயே போடுவார். இது மாதிரி தயாரிப்பாளர் கிடைப்பது அரிது. அபிநயா, அசோக் செல்வன் எல்லாம் பெரிய பணக்காரர்கள் இல்லை. நடுத்தரமான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தான் .சொன்னால் நம்ப மாட்டார்கள் சிரமப்பட்டுத் தான் இந்தப் படத்தை எடுத்தார்கள். அவர் வெள்ளையாக இருப்பதால் அவரைப் பெரிய பணக்காரர் என்று நினைக்கிறார்கள்” என்றார்.

