மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடித்துள்ள ‘பெத்தி’ என்கிற பிரமாண்ட கிராமத்து விளையாட்டு திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
நிகழ்வில் பேசிய ராம்சரண் “பத்திரிகை நண்பர்களுக்கு வணக்கம். உண்மையாகச் சொன்னால், சில நேரங்களில் என்ன பேச வேண்டும் என்று தெரியாமல் போய்விடும். இப்போதும் அந்த மாதிரியான ஒரு தருணத்தில்தான் நான் இருக்கிறேன். சென்னை வந்தாலே எனக்கு எப்போதும் இப்படியான உணர்வு ஏற்படும்.
முதலில், இந்த மேடையில் இத்தனை ஜாம்பவான்கள் இருக்கிறார்கள். அவர்களின் முன்னிலையில் என்ன பேசுவது என்ற எண்ணமே வருகிறது. இருந்தாலும் இங்கு வந்திருக்கும் அனைவருக்கும், குறிப்பாக சென்னை மற்றும் தமிழ்நாடு ஊடக நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.
சென்னை எனக்கு எப்போதும் ஒரு சிறப்பான இடம். நான் பிறந்து வளர்ந்த நகரம் இது. அதனால் ஆர்.ஆர்.ஆர்., மகதீரா அல்லது வேறு எந்தப் படமாக இருந்தாலும், சென்னைக்கு வந்து புரமோஷன் செய்யும் போது வீட்டிற்கு வந்த உணர்வே கிடைக்கிறது. மேலும், என் அம்மாவும் இங்கு பிறந்தவர். அதனால் சென்னை எனக்கு என் தாயின் ஊர் என்ற பாசமான உணர்வை அளிக்கிறது.
பெத்தி திரைப்படம் குறித்து படக்குழுவினர் அனைவரும் ஏற்கனவே பேசிவிட்டார்கள். இந்தப் படத்தை முடிக்க எங்களுக்கு சுமார் இரண்டரை ஆண்டுகள் ஆனது. அதில் 285 நாட்களுக்கும் மேலாக நாங்கள் உழைத்தோம். ஆனால் எங்களைவிட அதிகமாக உழைத்தவர் இயக்குநர் புச்சி பாபு. கடந்த ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளாக அவர் இந்தப் படத்திற்காக உழைத்திருக்கிறார்.
நாங்கள் கஷ்டப்பட்டோம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மையில் இப்படிப்பட்ட சிறந்த கலைஞர்கள் ஒரு படத்தில் இருக்கும்போது அந்தப் பயணம் கஷ்டமாகத் தோன்றாது. இந்தக் கதையை எங்களிடம் கொண்டு வந்த சுகுமார் சாருக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.
இசைப்புயல் A. R. ரஹ்மான் சார் இந்தப் படத்தின் மையத் தூண். நாங்கள் அனைவரும் ஒரு வீட்டைத் தாங்கும் தூண்கள் என்றால், அதன் நடுவில் இருக்கும் மிகப்பெரிய ஆதாரத் தூண் அவர் தான். கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக அதிகாலை வரை விழித்திருந்து பின்னணி இசைப் பணிகளில் ஈடுபட்டிருக்கிறார். அவரது அர்ப்பணிப்பு எங்களுக்கு எல்லாம் மிகப்பெரிய உத்வேகமாக இருக்கிறது.
சிவராஜ்குமார் சார் திரையில் தோன்றினாலே ஒரு தீப்பொறி போல ஆற்றல் உருவாகும். ஜெயிலர் படத்தில் அவருடைய கதாபாத்திரத்தை நான் பலமுறை பார்த்திருக்கிறேன். காரில் பயணம் செய்யும்போதுகூட அந்த காட்சிகளை மீண்டும் மீண்டும் பார்ப்பேன். குறிப்பாக அவர் மெதுவாக நடந்து வரும் காட்சியும், பீடி பிடிக்கும் அந்த ஸ்டைலும் இன்று ஒரு ஐகானிக் தருணமாக மாறியுள்ளது. அவரது கண்களே ஆயிரம் வார்த்தைகள் பேசும்.
ஒளிப்பதிவாளர் ஆர். ரத்னவேலு சார் பற்றி என்ன சொல்வது? அவருடன் நான் நான்கு திரைப்படங்களில் பணியாற்றியிருக்கிறேன். இரண்டு படங்களை நான் தயாரித்தபோதும் அவர் உடன் இருந்தார். அவர் ஒரு உண்மையான ஜாம்பவான். எந்திரன் படத்தில் அவர் உருவாக்கிய காட்சிகள், குறிப்பாக பிரம்மாண்ட பாடல் காட்சிகள், என்னை மிகவும் கவர்ந்தவை. ‘அந்த மாதிரியான ஒரு காட்சியை எனக்கும் கொடுங்கள் சார்’ என்று நான் எப்போதும் அவரிடம் கேட்பேன்.
ரஜினி சார், கமல் சார், ஷங்கர் சார் போன்ற மகத்தான கலைஞர்களுடன் பணியாற்றிய அனுபவம் அவருக்கு இருக்கிறது. ஆனால் அந்த அனுபவத்தின் பெருமையை அவர் ஒருபோதும் வெளிக்காட்ட மாட்டார். அதுவே அவரது சிறப்பு.
என்னைப்போலவே திவ்யேந்து இந்தப் படத்தில் மிகப்பெரிய உழைப்பை தந்துள்ளார் அவரது காட்சிகளை ரசிகர்கள் கொண்டாடுவார்கள்.
இந்தப் படத்தை நான் வெறும் ஒரு நடிகராக செய்யவில்லை. மனதார காதலித்து செய்தேன். ஒவ்வொரு நாள் படப்பிடிப்பு முடிந்து வீட்டிற்கு வந்ததும், என் நண்பர்களிடமும், அம்மாவிடமும், அந்த நாள் ஷூட்டிங் அனுபவங்களைப் பற்றியே தொடர்ந்து பேசிக்கொண்டிருப்பேன். ‘போதும், நிறுத்து… நாள் முழுவதும் இதைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கிறாய்’ என்று அவர்கள் சொல்லும் அளவுக்கு பெத்தி படம் என் மனதில் ஆழமாக பதிந்திருந்தது.
என் வீட்டில் எப்போதும் ஒரு விஷயம் சொல்வார்கள். ‘ஒரு படத்தைப் பற்றி நீ வீட்டிற்கு வந்த பிறகும் தொடர்ந்து பேசினால், அந்த படம் கண்டிப்பாக பெரிய வெற்றி பெறும்’ என்று. ஆர்.ஆர்.ஆர்., ரங்கஸ்தலம், மகதீரா போன்ற படங்களைப் பற்றியும் நான் அப்படித்தான் பேசினேன். நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் பெத்தி படத்தைப் பற்றியே வீட்டில் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறேன். அதுவே இந்தப் படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும் என்பதற்கான என் நம்பிக்கை. குடும்பத்தோடு, குறிப்பாக குழந்தைகளோடு வந்து பார்க்க வேண்டிய படம் இது. மிகவும் ஊக்கமளிக்கும், மனதைத் தொடும் திரைப்படமாக இருக்கும்.
என் வாழ்நாள் முழுவதும் நினைவில் நிற்கும் ஒரு படத்தை இயக்குநர் புச்சி பாபுவும், சுகுமார் சாரும் எனக்கு கொடுத்திருக்கிறார்கள். அதற்காக அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
இறுதியாக, முதல்வர் விஜய் அவர்களுக்கு என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உச்சநிலையிலிருந்த ஒரு திரைப்பட வாழ்க்கையையும், மிகப் பெரிய நட்சத்திர அந்தஸ்தையும் விட்டு விட்டு பொதுச் சேவைக்காக வந்திருப்பது பாராட்டத்தக்க விஷயம். திரைப்படத் துறையைச் சேர்ந்த ஒருவராக நான் மிகவும் பெருமைப்படுகிறேன். அவருக்கும், தமிழ்நாடு மக்களுக்கும் என் வாழ்த்துகள்.
இந்தப் படம் எங்கள் அனைவரின் உழைப்பு . ஜூன் 4-ஆம் தேதி ரசிகர்கள் திரையரங்கில் இந்த அனுபவத்தை கொண்டாடுவார்கள் என்று நம்புகிறேன். உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி” என்றார்.
இயக்குநர் புச்சி பாபு பேசியதாவது.., எனக்கு சென்னை என்றால் மிகவும் பிடிக்கும். ஏனென்றால் எனக்கு மிகவும் பிடித்த பல கலைஞர்கள் இங்குதான் இருக்கிறார்கள். ஏ.ஆர். ரஹ்மான் சார், ரத்னவேலு சார், தேவி ஸ்ரீ பிரசாத் சார் என நான் மதிக்கும் பலர் சென்னையில் இருக்கிறார்கள். சென்னை என்பது வெறும் ஒரு நகரம் அல்ல, இங்கே சினிமாவே வாழ்கிறது. மக்கள் சினிமாவை நேசிக்கிறார்கள், சினிமா கலைஞர்களை மதிக்கிறார்கள்.
எனக்கு பிடித்த மூத்த ஆளுமைகள் அனைவரும் சென்னை பற்றிப் பெருமையாகப் பேசுவார்கள். அப்போது எனக்கு அதன் மகத்துவம் முழுமையாகப் புரியவில்லை. ஆனால் இப்போது இங்கு வரும்போதெல்லாம் ஒரு புனிதமான இடத்திற்குச் செல்வது போன்ற உணர்வு வருகிறது.
எனக்கு மிகவும் பிடித்த நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதி சாரும் இங்கே இருக்கிறார். என்னுடைய முதல் திரைப்படத்தில் அவர் நடித்திருந்தார். எப்போதும் எனக்கு ஆதரவாக இருப்பதற்கும், சென்னை வரும்போதெல்லாம் அன்புடன் வரவேற்பதற்கும் அவருக்கு நன்றி.
பெத்தி பற்றி சொல்ல வேண்டுமென்றால், இது மிகவும் உணர்வுப்பூர்வமான படம். பார்வையாளர்களை முழுமையாக ஈர்த்துக் கொள்ளும் ஒரு அனுபவமாக இருக்கும். குறிப்பாக இரண்டாம் பாதியில் ராம் சரண் சார் கொடுத்திருக்கும் நடிப்பு மற்றும் அர்ப்பணிப்பை பார்த்தால் யாராலும் எளிதில் மறக்க முடியாது.
கடந்த சில நாட்களாக நான் சென்னையில் இருந்து படத்தை மீண்டும் மீண்டும் பார்த்து வருகிறேன். அதே நேரத்தில் ஹைதராபாத்திலும் சிறப்புக் காட்சிகள் நடக்கின்றன. படம் பார்த்த அனைவரும் தொலைபேசியில் அழைத்து பாராட்டி வருகிறார்கள். ‘மிகச் சிறந்த படம்’, ‘மிக அழகாக உருவாக்கியிருக்கிறீர்கள்’ என்று கூறுகிறார்கள். அது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.
இந்தப் படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய காரணம் ராம் சரண் சார் தான். பெத்தி என்றாலே எனக்கு ராம் சரண் தான் நினைவுக்கு வருகிறார். அவர் இந்தக் கதாபாத்திரத்திற்காக கொடுத்த உழைப்பு அளவிட முடியாதது. என்னை நம்பி இந்த வாய்ப்பை வழங்கியதற்காக அவருக்கு மனமார்ந்த நன்றி.
திவ்யேந்து சாரின் நடிப்பைப் பார்த்தபோது, விஜய் சேதுபதி சாரை நினைவுபடுத்தியது. சிறிய சிறிய விஷயங்களில்கூட அவர் காட்டிய நுணுக்கமான நடிப்பு என்னை மிகவும் கவர்ந்தது. இந்தப் படத்தில் இணைந்ததற்காக அவருக்கு நன்றி.
இசைப்புயல் A. R. ரஹ்மான் சார் பற்றி பேச வேண்டுமென்றால், அவரைப் பற்றி ஒரு புத்தகமே எழுதலாம். சிறுவயதிலிருந்தே அவருடைய இசைக்கு நான் மிகப்பெரிய ரசிகன். ஒருநாள் அவருடன் சேர்ந்து பணியாற்றுவேன் என்று கனவிலும் நினைத்ததில்லை. ஆனால் இன்று அது நனவாகியுள்ளது. இந்தப் படத்தின் பாடல்களும் பின்னணி இசையும் அற்புதமாக வந்துள்ளன.
ரத்னவேலு சார் இந்தப் படத்தை உலகத் தரத்தில் காட்சிப்படுத்தியிருக்கிறார். நான் எழுதிய ஒவ்வொரு காட்சிக்கும் அவர் உயிர் கொடுத்துள்ளார். அவரது ஒளிப்பதிவு இல்லாமல் இந்தப் படம் இப்படியாக உருவாகியிருக்காது.
மேலும், சிவராஜ்குமார் சார் இந்தப் படத்தில் ஒரு உண்மையான குருவாகத் தோன்றுகிறார். குரு-சிஷ்யன் உறவு எப்படி இருக்க வேண்டும் என்பதை இந்தப் படம் அழகாக வெளிப்படுத்துகிறது. அந்தக் கதாபாத்திரத்திற்கு அவர் அளித்திருக்கும் மதிப்பும், கம்பீரமும் படத்தின் முக்கிய பலமாக இருக்கும்.
இந்தப் படத்தை ரசிகர்கள் அனைவரும் திரையரங்கில் பார்த்து கொண்டாடுவார்கள் என்று நம்புகிறேன். அனைவருக்கும் நன்றி.”
நடிகர் சிவராஜ்குமார் பேசியதாவது.., முதலில் இயக்குநர் புச்சி பாபுவுக்கு நன்றி. இந்தப் படத்தில் குரு கதாபாத்திரம் பற்றி அவர் என்னிடம் கூறியபோது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அதைவிட, ராம் சரணுடன் இணைந்து நடிக்கப் போகிறேன் என்ற செய்தி எனக்கு இன்னும் மகிழ்ச்சியை அளித்தது.
ராம் சரணையும், அவருடைய குடும்பத்தையும் எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் மீது எனக்கு எப்போதும் ஒரு தனிப்பட்ட அன்பும் மரியாதையும் இருக்கிறது. அதனால் இந்தப் படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் உடனே வந்தது. புச்சி பாபு கதையைச் சொன்னவுடன் எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. உடனே ஒப்புக்கொண்டேன்.
ஆனால் அதன் பிறகு எனக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. சிகிச்சைக்காக நான் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதனால் இந்தப் படம் என்னால் செய்ய முடியாமல் போய்விடுமோ என்று நினைத்தேன். ஆனால் படக்குழுவினர் எனக்காக காத்திருந்தார்கள். அது என்னை மிகவும் நெகிழச் செய்தது. அதற்காக அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.
இசைப்புயல் A. R. ரஹ்மான் சாரை நான் நீண்ட காலமாக அறிவேன். அவர் பின்னணி கலைஞராக இருந்த காலத்திலிருந்தே எனக்கு தெரியும். பின்னர் இசையமைப்பாளராக அவர் இசையை முற்றிலும் புதிய பரிமாணத்தில் கொண்டு சென்றார். பல சிறந்த இசையமைப்பாளர்கள் இருந்தாலும், ரஹ்மான் சார் தனித்துவமான பாணியில் தனி அடையாளத்தை உருவாக்கினார். ஆஸ்கார் விருதை வென்றது இந்திய இசைக்கே பெருமை சேர்த்த தருணம். அவருடைய இசையில் நான் நடித்திருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.
ரத்னவேலு சாருடன் பணியாற்றிய அனுபவமும் சிறப்பானது. படப்பிடிப்பு தளத்தில் அவருடன் தமிழில் பேசிக்கொண்டே இருப்பேன். அவர் காட்டிய அன்பும், மரியாதையும், அர்ப்பணிப்பும் என்னை மிகவும் கவர்ந்தது. எங்களுக்குள் ஒரு சிறப்பு இணைப்பு உருவானது.
தயாரிப்பாளர் மற்றும் முழு படக்குழுவும் மிகச் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். இந்தப் படத்தைப் பார்த்தால் எங்களுக்குள் இருந்த உறவும், ஒற்றுமையும் உங்களுக்குப் புரியும்.
ராம் சரண் சாரின் உழைப்பைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும். இந்தக் கதாபாத்திரத்திற்காக அவர் தனது உடலை மாற்றிக்கொண்ட விதம், எடுத்துக்கொண்ட முயற்சி, அர்ப்பணிப்பு அனைத்தும் அசாதாரணமானவை. அவரது நடிப்பும் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும்.
இந்தப் படத்தை அனைவரும் விரும்புவார்கள் என்று நம்புகிறேன். பெத்தி படக்குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள். ஜூன் 4-ஆம் தேதி படம் வெளியாக இருக்கிறது. நீங்கள் எவ்வளவு ஆவலுடன் காத்திருக்கிறீர்களோ, நானும் அதே அளவு ஆவலுடன் காத்திருக்கிறேன்.நன்றி. வணக்கம்.
இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் பேசியதாவது.., சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு ராம் சரண் எங்கள் வீட்டிற்கு வந்திருந்தார். அப்போது ஒரு விஷயம் எனக்கு மிகவும் தோன்றியது. ஒரு மிகப் பெரிய ஆலமரமான சிரஞ்சீவி சாரின் மகனாக இருந்து, அதே உயரத்தை எட்ட முடியுமா என்று பலர் கேள்வி எழுப்பியிருக்கலாம். ஆனால் ராம் சரண் அதையும் தாண்டி தன்னுடைய தனித்துவமான இடத்தை உருவாக்கியிருக்கிறார். அவர் இன்னொரு ஆலமரமாக வளர்ந்திருக்கிறார். அப்போது என் மகனும் அங்கே இருந்தான். நான் அவனிடம், ‘நீ என்னைவிட பெரியவனாக வரலாம்’ என்று சொன்னேன். அதற்கான உதாரணமாக ராம் சரணைச் சுட்டிக்காட்டினேன். இளம் தலைமுறைக்கு இப்படிப்பட்ட உதாரணங்கள் மிகவும் முக்கியம்.
ஒரு நாள் சுகுமார் சார் என்னைச் சந்திக்க விரும்புவதாகச் சொன்னார்கள். அதன்பிறகு புச்சி பாபுவை அறிமுகப்படுத்தினார்கள். அவர் இந்தக் கதையைப் பற்றி பேசினார். அந்த நேரத்தில் நான் பரிசோதனை முயற்சிகள் நிறைந்த படங்களிலும், வித்தியாசமான படைப்புகளிலும் அதிக கவனம் செலுத்தி வந்தேன். ஆனால் பெத்தி போன்ற ஒரு திரைப்படம் வந்தபோது அதில் இருக்கும் ஆற்றலும், அர்ப்பணிப்பும் என்னை ஈர்த்தது.
இந்த மாதிரியான பெரிய வர்த்தகப் படங்களில் நடிகர்கள் தங்கள் உயிரையே கொடுத்து உழைக்கிறார்கள். நடிப்பிலும், நடனத்திலும், ஒவ்வொரு காட்சியிலும் மிகப்பெரிய அர்ப்பணிப்பு இருக்கிறது. மேலும் இப்படங்கள் பல மொழிகளில் வெளியாகி உலகம் முழுவதும் சென்று சேர்கின்றன. அதனால் அனைவரின் உழைப்பும் மிகப் பெரிய அளவில் மக்களை சென்றடைகிறது.
ராம் சரண் இந்தப் படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் முழுமையான அர்ப்பணிப்புடன் செயல்பட்டிருக்கிறார். ஒவ்வொரு ஃபிரேமிலும் அவரது உழைப்பு தெரியும். இசையும் காலத்திற்கு ஏற்ப தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது. ரோஜா காலத்திலிருந்து இன்று வரை இசை மற்றும் திரைப்படத் துறையில் ஏற்பட்ட மாற்றங்களை நான் நேரில் பார்த்திருக்கிறேன். பலர் என்னிடம் இருந்து ஊக்கமடைந்திருக்கலாம். ஆனால் நானும் பலரிடமிருந்து ஊக்கமடைந்திருக்கிறேன்.
தெலுங்குத் திரைப்படத் துறையில் M. M. கீரவாணி, தேவி ஸ்ரீபிரசாத் , தமன் போன்ற திறமையான இசையமைப்பாளர்கள் இருக்கிறார்கள். தெலுங்கு சினிமா கடந்த சில ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது. அவர்கள் மிகவும் லட்சியத்துடன் செயல்படுகிறார்கள். திரைப்படத் தயாரிப்பின் தரத்தையும் தொடர்ந்து உயர்த்தி வருகிறார்கள். அந்தத் துறையின் ஒரு பகுதியாக இருப்பதில் எனக்கு பெருமை. பெத்தி படத்தில் பணியாற்றிய அனுபவம் எனக்கு முதல் படம் செய்வது போன்ற புதிய உற்சாகத்தை அளித்தது.
இன்றுக் காலைதான் இந்தப் படத்தின் பின்னணி இசைப் பணிகளை முடித்தோம். முடிந்த பிறகும் ‘இதை இன்னும் சிறப்பாக செய்ய முடியுமா?’, ‘இன்னும் ஏதாவது சேர்க்க வேண்டுமா?’ என்ற ஆர்வம் எங்களுக்குள் இருந்தது. அந்த உற்சாகமே இந்தப் படத்தின் சிறப்பு. சிவராஜ்குமார் சாருக்கும், படக்குழுவில் உள்ள அனைவருக்கும் என் நன்றி. இந்தப் படத்தை உருவாக்கிய அனுபவத்தை நாங்கள் அனைவரும் மிகவும் ரசித்தோம். நீங்கள் அனைவரும் இந்தப் படத்தை விரும்புவீர்கள் என்று நம்புகிறேன். நன்றி.”