எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் நல்லது செய்கிறவர்களை மக்கள் தெய்வமாக நினைப்பதுண்டு. இந்த கதையின் ஹீரோ ராகவன் சில கொலைகள் செய்கிறார். அதனால் தெய்வமாகிறார். அது எப்படி என்பதும், ஏன் கொலைகள் செய்கிறார் என்பதும் கதையோட்டம்…
ராகவனாக, அப்பாவி கிராமத்து மனிதராக வருகிறார் இயக்குநர் செல்வராகவன். மனைவியோடு மகிழ்ச்சியான வாழ்க்கை, புதிதாய் துவங்கிய ஹோட்டல் பிஸினஸில் பரபரப்பு என்றிருக்கிற அவருக்கு எம் எல் ஏ’வின் மச்சானுடன் பகை உருவாகிறது. ஒரு கட்டத்தில் தான் உயிருக்கு உயிராய் நேசித்த இரண்டு பேரின் மரணத்திற்கு அவர் காரணமாகிவிட அரிவாளைத் தூக்குகிறார். நடிப்பில் ஏற்கனவே இதேபோல் அநியாய அக்கிரமக் காரர்களை வதம் செய்த அனுபவத்தை ரீப்பீட் செய்திருக்கிறார். பாச நேசத்தை வெளிப்படுத்தியிருக்கும் விதத்தில் குறையில்லை.
குஷி ரவி லட்சணமாக இருக்கிறார்; கிராமத்துப் பெண் கேரக்டருக்கு பொருந்திப் போகிறார். செல்வராகவனுக்கு மனைவியாக வருகிற அவரருக்கு உணர்வுபூர்வமாகவும் உணர்ச்சியைக் கொட்டியும் நடிக்க வாய்ப்பிருக்கிறது. பாராட்டும்படி நடித்திருக்கிறார்.
கஷ்டத்திலிருக்கிற குடும்பப் பெண்களுக்கு வட்டிக்கு பணம் கொடுப்பதும், திருப்பிக் கொடுக்க முடியாத பெண்களை காமப்பசிக்கு பயன்படுத்துவதுமாக மைம் கோபிக்கு எந்தவித தனித்துவமும் இல்லாத வில்லன் வேடம். வழக்கமான உருட்டல் மிரட்டல் இருக்கிறது.
செல்வராகவனுக்கு அக்காவாக கெளசல்யா. ஒரு காலத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர். வயதின் முதிர்ச்சி முகத்தில் தெரிகிறது. அதற்கேற்ப முதிர்ச்சியான கேரக்டரில் கவனிக்க வைக்கிறார்.
செல்வராகவன் தன் சொந்த குழந்தைபோல் பிரியம் வைத்திருக்கிற சிறுமியிலிருந்து மற்ற கதாபாத்திரங்களில் வருகிற அத்தனைப் பேரின் நடிப்பிலும் யதார்த்தமிருக்கிறது.
ஏ கே பிரியன் கதையின் போக்கைப் பலப்படுத்தும் விதமாக பின்னணி இசையைத் தந்திருக்க, ரவிவர்மா தன் ஒளிப்பதிவில் காட்சிகளை நேர்த்தியாக பதிவு செய்திருக்கிறார்.
குற்றச் செயல்களை கெத்தாக செய்கிற ஒருவனால், நல்லவன் ஒருவன் நேரடியாக பாதிக்கப்பட்டால் அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை பல படங்களில் பார்த்தாயிற்று. அதையே மீண்டும் சிறுசிறு மாற்றங்களுடன் வழங்கியிருக்கிறார் இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத்.
மனிதன் தெய்வமாகலாம் – கதைக்கேற்ற நடிகர் நடிகைகளின் பொருத்தமான நடிப்பால் ஓரளவு திருப்தியாகலாம்!
Rating 2.5 / 5 

