கிடைத்த காதலியை தக்க வைத்துக்கொள்ள ஒரு காதலன் படும்பாட்டை கலகலப்பாக சொல்வதே ஹேப்பி ராஜின் கதை.
காதலி பெரும் பணக்கார குடும்பத்துப் பெண்; காதலன் கிராமத்தில் வாழும் எளிய குடும்பத்து வெள்ளந்தி மனிதரின் மகன். அந்த வெள்ளந்தி மனிதரை வெள்ளை வெளேர் என்றிருக்கும் காதலியின் அப்பா, அந்தஸ்தை காரணம் காட்டி தரக்குறைவாக பேசிவிட, காதலர்கள் பிரியும் சூழ்நிலை.
பிரச்சனை பெரியதுதான்; ஆனால் ஒருவர் ஒரு சாரி கேட்டால் காதலர்கள் கல்யாணத்துக்கு தயாராகிடலாம் என்கிற வாய்ப்பு.
சாரி சொல்ல வேண்டியது யார்? அவர் சொன்னாரா இல்லையா? காதல் ஜோடிக்கு கல்யாணம் நடந்ததா, பிரேக்கப்பில் முடிந்ததா? என்பதையெல்லாம் இயக்குநர் மரியா இளஞ்செழியனின் திரைக்கதையில் பார்க்கும் அனுபவம் ஜாலியாக இருக்கிறது. படம் உருவகேலியை எதிர்க்கும் படைப்பாக கவனம் பெறுகிறது.
தன் அப்பாவால் காதல் கைகூடாமல் போய்விடுமோ என்ற பயம், பயந்தபடியே ஏடாகூடமாக நடந்துவிட தவிக்கிற தவிப்பு, அதே அப்பாவின் இன்னொரு அசத்தலான யாரும் எதிர்பார்க்காத பக்கத்தை பார்த்து மிரள்கிற விதம், அப்பாவை அவரது தோற்றத்துக்காக வெறுத்தது தவறென உணர்ந்து கலங்கும் தருணம், காதலனாக உற்சாகம், ஆட்டம் பாட்டம் கூத்து கும்மாளம் என ஜி வி பிரகாஷின் பங்களிப்பு ஏராளம்; தூக்கி வைத்துக் கொண்டாடுகிற அளவில் இல்லையென்றாலும் குறை சொல்ல வாய்ப்பில்லாமல் களமாடியிருக்கிறார்.
தங்களின் குடும்ப அந்தஸ்துக்கு பொருத்தமில்லாத பையனை காதலிக்கிற பணக்கார வீட்டுப் பெண்கள் அப்பா அம்மாவால் அனுபவிக்கிற எல்லா பிரச்சனைகளையும் அனுபவிக்கிறார் ஜி வி’யின் காதலியாக வருகிற ஸ்ரீ கெளரிபிரியா. அளவான அழகான நடிப்பு கவர்கிறது.
படத்தின் இரண்டாவது ஹீரோவாக ஜார்ஜ் மரியான். மஞ்சப்பை தூக்கித் திரியும் கிராமத்தான் லெவலில் செய்யும் அலப்பரையாகட்டும், நான் நினைச்சா உன்னையே விலைக்கு வாங்குவேன் என்கிற ரேஞ்சில் மகன் காதலிக்கும் பெண்ணின் அப்பாவிடம் சவால் விடும்போது காட்டும் கெத்தாகட்டும், அதே நபரோடு ஆற்றங்கரையில் உரையாடுவதாகட்டும், மகன் தன் தோற்றத்தை வெறுப்பதை பக்குவமாக எடுத்துக் கொள்வதாகட்டும் அத்தனை காட்சியிலும் அசத்துகிறார்.
ரீ என்ட்ரீ கொடுத்திருக்கும் ‘காதல் தேசம்’ அப்பாஸ் கதாநாயகியின் அப்பாவாக, கார்ப்பரேட் தொழிலதிபராக கம்பீரம் காட்டியிருக்கிறார்.
கீதா கைலாசம், அதிர்ச்சி அருண் காமெடிக்கு உதவிகிறார்கள். ‘பார்க்கிங்’ பிரார்த்தனா நாதன், மதுரை முத்து உள்ளிட்ட மற்றவர்களுக்கு கதையில் முக்கியத்துவமிருக்கிறது.
ஜஸ்டின் பிரபாகரன் இசையில் பாடல்கள் உற்சாகத்துக்கு கேரண்டி தர, பின்னணி இசை கதையோட்டத்துக்கு பக்காவாக பொருந்துகிறது.
படத்தின் நீளமும், முன்பாதியும் பொறுமையைச் சோதிப்பதை பொறுத்துக் கொண்டால்,
அழகிய காதல், உருவத்தை வைத்து ஒருவரை தரம் தாழ்த்தி மதிப்பிடக்கூடாது என்ற அழுத்தமான அட்வைஸ், கிட்டத்தட்ட படம் முழுக்க காமெடி சரவெடி என நிரம்பியிருக்கும் இந்த ஹேப்பி ராஜால் ஆடியன்ஸ் ஹேப்பி மோடுக்கு போய் வரலாம்!
Rating 3.5 

