கல்லூரியொன்றில் மாணவர்களுக்கிடையில் தேர்தல் நடக்கிறது. அதில் போட்டியிடும் ஒரு மாணவன் வெற்றி பெறுவதற்காக சூழ்ச்சியில் இறங்குகிறான். அவனால், போட்டியிடும் நல்ல மாணவனுக்கு வெற்றி கிடைக்காது என்கிற நிலைமை. அந்த நிலைமையை மாற்ற, மோசமான செயலில் இறங்கியுள்ள மாணவனை வீழ்த்த அந்த கல்லூரிக்குள் வருகிறான் முன்னாள் மாணவன் கதிர். அப்படி வந்த கதிர் அங்கு திடீரென நடந்த தாக்குதல் சம்பவத்தில் ஒருவரை கொலை செய்துவிடுகிறான்.
எதிர்பாராமல் நடந்த அந்த சம்பவத்துக்கு பின், கொலைப் பழியிலிருந்து தப்பிக்க நண்பர்கள் உதவியுடன் ஒருசில விஷயங்களைச் செய்கிறான். அந்த செயல்கள் அவனை கொலைப் பழியிலிருந்து காப்பாற்றியதா? தேர்தலில் ஜெயித்தது யார்? கொலை செய்யப்பட்டது யார்? அவருக்கும் கதிருக்கும் என்ன பகை? என்பதெல்லாம் படத்தின் பரபரப்பான எபிசோடுகள்…
கல்லூரிப் படிப்பின்போது புரட்சி, போராட்டம், போலீஸ் கேஸ் என கெத்து காட்டுவது, ஐந்தாறு வருடங்கள் கழித்தும் அதே கெத்துடன் களத்தில் இறங்கியடிப்பது என கம்பீரம் காட்டுகிறார் கதிராக வருகிற லெனின். நடிப்புக்கு புதியவர் என்றாலும் அது தெரியாதபடி காதல், ஆக்சன் என எல்லாவற்றிலும் புகுந்து விளையாடுகிறார்.
நாயகி அஸ்மின் உருவத்தில் ஒல்லியாக இருந்தாலும் அநியாய அக்கிரமம் செய்கிற அப்பாவையும் அண்ணனையும் எதிர்க்கும் விதத்தில், தான் காதலிக்கும் கதிரை கொலைப் பழியிலிருந்து காப்பாற்ற எடுக்கும் புத்திசாலித்தனமாக முடிவில் கில்லியாக நிற்கிறார்.
தேர்தலில் ஜெயிப்பதற்காக எதை வேண்டுமானாலும் செய்யத் தயாராகிற மாணவனாக நடித்திருக்கும் இளைஞனும், அந்த இளைஞனுக்கு அப்பாவாக எம் எல் ஏ’வாக வருகிற இயக்குநர் ஆர் வி உதயகுமாரும் வில்லத்தனத்தை போதுமான அளவில் காட்டியிருக்க, மற்ற நடிகர் நடிகைகள் நிறைய பேருக்கு கதையில் முக்கியத்துவம் இருக்கிறது. அதை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.
கைலாஷ் மேனன் பாடல்களுக்கான இசையில் மெல்லிய அதிர்வலையை தந்து, பின்னணி இசையில் அதிரடியைக் கூட்டியிருக்கிறார். சதீஷ் மெய்யப்பனின் ஒளிப்பதிவு நேர்த்தி.
மோசமான எம் எல் ஏ, அவரது மகன் மோசமான கல்லூரி மாணவன், அந்த மாணவனை அடக்க வரும் கதாநாயகன் எம் எல் ஏ’வின் மகளைக் காதலிக்கிறார், அந்த காதலுக்கு எம் எல் ஏ எதிராக நிற்கிறார், ஒரு போலீஸ் அதிகாரி கதாநாயகனை பழிவாங்க பல வருடங்களாக காத்திருக்கிறார் என கதை ஒரு வட்டத்துக்குள்ளேயே வலம் வருவது சற்றே சலிப்பு தந்தாலும்,
கல்லூரி பின்னணியில் இரு தரப்பு மாணவர்களிடையே போட்டி பொறாமை, சண்டை சச்சரவு, ரவுடியிஸம் என குறிப்பிட்ட சில காட்சிகளில் இருக்கும் விறுவிறுப்பு அந்த சலிப்பை பின்னுக்குத் தள்ளிவிடுகிறது!
ரெட் லேபில் _ பவர்ஃபுல் ஸ்டூடண்ட்ஸ்!
Rating 3 / 5


