ஊருக்கெல்லாம் நல்லது செய்பவர் அந்த தூத்துக்குடி தொழிலதிபர். அவர், தன் முன்னாள் காதலிக்காக ஒரு கொலை செய்கிறார். கொலை செய்யப்பட்டவர் அந்த காதலிக்கு போன் செய்து பேசுவதாக கதை சூடுபிடிக்கிறது.
கொலை செய்யப்பட்டவர் எப்படி பேச முடியும் என்பதை கண்டறிய களமிறங்கும் அந்த தொழிலதிபர், தான் கொலை செய்தபிறகு நடந்துகொண்டிருக்கும் மர்மமான சில விஷயங்களின் பின்னணி என்ன என்பதையும் தெரிந்துகொள்ள முயற்சிக்கிறார். அவர் என்ன தெரிந்துகொள்கிறார், எப்படி தெரிந்து கொள்கிறார் என்பது கதையின் மீதி…
கதைநாயகன் குகன் சக்கரவர்த்தியாரின் நடிப்பில் காதல், கருணை, ஆக்சன் அதிரடி என எல்லாமும் சில தருணங்களில் அளவாகவும் சில காட்சிகளில் சற்றே அதிகமாகவும் தெரிகிறது.
அவரே இசையமைத்து பாடியிருக்கும் ‘ஆத்தி ஆத்தி’, ‘இறைவா இறைவா’ உள்ளிட்ட சில பாடல்கள் ஓரளவு இதம் தர, ‘இல்ல இல்ல’ பாடல் அரசியல் தலைவர்களை, முன்னணி நடிகர்களை காண்பிக்கும் காட்சியால் கவர்கிறது.
காதலி, மனைவி என ஹீரோயின்கள் இருவரும் அழகாலும், தேவையுணர்ந்த நடிப்பாலும் தங்களுக்கான காட்சிகளை ஆக்கிரமிக்க பொன்னம்பலம், வையாபுரி, வாசு விக்ரம் என சீனியர்கள் தங்களின் பங்களிப்பை சின்சியராக செய்திருக்கிறார்கள். நிறைய புதுமுக நடிகர், நடிகைகளையும் பார்க்க முடிகிறது.
பணத்தை தாராளமாக செலவு செய்திருப்பது காட்சிகளில் வெளிப்பட்டு படத்திற்கு பிரமாண்ட அந்தஸ்தைக் கொடுக்கிறது.
பார்த்துக் கொண்டிருப்பது சஸ்பென்ஸ் திரில்லரா? அமானுஷ்ய சப்ஜெக்டா? ஃபேமிலி சென்டிமென்ட் ஜானரா? பொலிட்டிகல் அட்டம்ட்டா? என்பதுபோல் குழப்பம் தரும் திரைக்கதை படத்தின் பலவீனம்.
குகன் சக்கரவர்த்தியார் நடிப்போடு கதை, திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு, இசை என 21 பணிகளை ஒன் மேன் ஆர்மியாக செய்து படத்தை இயக்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்க செய்தி. அது கண்டிப்பாக சாதனைதான். அத்தனை திறமைகளையும் கூடுதலாக மெருகேற்றிக் கொண்டு அடுத்தடுத்த படங்களை சிறப்பாக வழங்கினால், ரசிகர்களின் அதரவு வங்காள விரிகுடா ரேஞ்சுக்கு பெரிதாக இருக்கும்!
Rating 2.5 / 5


