14-ம் நூற்றாண்டு வரலாற்றுப் பின்னணியில் எளிமையான படைப்பு.
இந்தியா இஸ்லாமியர்கள் ஆட்சி அதிகார வசமிருந்த காலகட்டத்தில் இந்து மதத்தினர் வித விதமாக தாக்கப்பட்டது பற்றியும், மத மாற வலியுறுத்தி நடந்த கொடுமைகள் குறித்தும் பக்கம் பக்கமாக எழுதலாம். நூற்றுக்கணக்கான திரைப்படங்கள் எடுக்கலாம். அந்த வகையில் இயக்குநர் மோகன் ஜி, தமிழ்நாட்டில் திருவண்ணாமலையை தலைமையிடமாக கொண்டு ஆண்டு வந்த மன்னர் வீர வல்லாளர் பற்றியும், அவரது ஆட்சிக்காலத்தில் அந்த பகுதிக்குட்பட்ட இந்து மதத்தினர் இஸ்லாமிய அதிகார ஆளுமைகளிடம் சிக்கிச் சீரழிந்த வேதனையான வரலாற்றையும் சற்றே கற்பனை கலந்து உருவாக்கியிருக்கிறார்.
வீர வல்லாள மகாராஜாவாக சொல்லிக்கொள்ளும்படியான ராஜ கம்பீரமின்றி களமாடியிருக்கிறார் நட்டி நடராஜ். அவரது போர்ப்படை தளபதியாக வருகிற ரிச்சர்ட் ரிஷி கேரக்டருக்கு ஏற்ற பரந்துவிரிந்த உடற்கட்டுடன், உணர்வுபூர்வமான நடிப்பிலும் சண்டைக் காட்சிகளிலும் கவனம் பெறுகிறார்.
ரிச்சர்ட் ரிஷியின் மனைவியாக வருகிற ரக்சனா இந்துசூடன் வாள் வீச்சில் தேர்ந்தவராக, வீரம் நிறைந்த பெண்மணியாக, கதைநாயகி திரெளபதியாக தந்திருக்கும் நடிப்புக்கு தியேட்டரில் அப்ளாஸ் குவிகிறது.
முகமது பின் துக்ளக்காக அதிகாரத் திமிர் காட்டுகிற சிராக் ஜானி, அதே அதிகாரத் திமிரில் காமவெறியனாக வலம்வருகிற தினேஷ் லம்பா உள்ளிட்டோரின் செயல்பாடுகள் கொடூரம்; நடிப்பிலிருக்கும் மிரட்டல் பரவாயில்லை ரகம்.
வேல ராமமூர்த்தி, ஒய்.ஜி.மகேந்திரன், தேவயானி சர்மா, பரணி, திவி, சரவண சுப்பையா, அருனோதயன் லக்ஷ்மணன் என மற்றவர்கள் கதையோட்டத்தில் கலந்திருக்கிறார்கள்.
எம்கோனே பாடலுக்கு மனதை மயக்கும் இசையைத் தந்திருக்கும் ஜிப்ரான் பின்னணி இசையில் தேவைக்கேற்ப அதிரடி ஆர்ப்பாட்டம் செய்திருக்கிறார். 14-ம் நூற்றாண்டு காலகட்டத்தை காட்சிகள் அத்தனையிலும் கொண்டு வர கலை இயக்குநர் ஈடுபாட்டுடன் பங்களித்திருப்பது தெரிகிறது. ஒளிப்பதிவு தரம்.
இந்த படத்தில் காண்பித்திருப்பது ஆட்சியதிகார கைப்பற்றலில் இஸ்லாமியர்கள் இந்துக்கள் மீது துளியளவும் மனிதாபிமானமில்லாமல் நடந்துகொண்டு, கொடூரத்தின் உச்சத்தைக் காட்டி ஏராளமானோரை கொன்று குவித்த ரத்தச் சரித்திர சம்பவங்களின் சிறு பகுதியாகவே இருக்கும். அது சிலருக்கு சினம் வர வைக்கலாம்; சிலருக்கு திருப்தி தரலாம். வசூல் குவிக்க மோகன் ஜி வேறு நல்ல படம் எடுக்கலாம்.


