இந்த படத்தின் இயக்குநர் கே பி தனசேகருக்கு ‘பூங்கா என்பது மண்மீது இருக்கிற சொர்க்கம்’ என்ற எண்ணம் உருவாகியிருக்கிறது. அதை பலருக்கும் உணர்த்த நினைத்ததன் விளைவாக இந்த படத்தை எடுத்திருக்கிறார். படம் பார்த்தபின் நமக்கும் அவரது எண்ணமே ஏற்படுகிறது.
ஒரு பூங்கா. அங்கே வந்துபோகும் பலரும் பேசிப்பழகி நண்பர்களாகிறார்கள். அதில் நான்கு பேர் இந்த கதையில் முக்கியமானவர்கள். அதில் ஒருவருக்கு கல்யாணமாகிறது. அவர் மனைவியுடன் பார்க்குக்கு வந்து, அங்கு கூடியிருக்கிறவர்களிடம் வாழ்த்து பெறுகிறார்.
நான்கு பேரில் முக்கியமான ஒருவர், அங்கு தன் காதலியுடன் வந்தமர்ந்து பேசிக் கொண்டிருப்பவரை இழுத்துப் போட்டு அடிக்கிறார். அதே பார்க்கில் அவருக்கு கல்யாணமும் நடக்கிறது. அந்த கல்யாணத்துக்கு அவரிடம் அடிவாங்கியவர் வந்து வாழ்த்துகிறார். இப்படி பல விஷயங்கள் நடக்கின்றன.
ஏன் நடக்கின்றன, எதற்காக நடக்கின்றன என்பது ‘பூங்கா’வின் ஸ்கிரீன்பிளே.
ஐ டி நிறுவனத்தில் தன்னுடன் பணிபுரிகிற பெண்ணை காதலிப்பதும், தன் கண்ணெதிரில் தவறுகள் நடப்பதை பார்த்தால் கோபத்தில் கொந்தளிப்பதும் சம்பந்தப்பட்டவர்ளை அடித்து துவைப்பதுமாக தனக்கு கொடுத்த வேலையை சரியாகச் செய்திருக்கும் நாயகன் கெளசிக் நடனத்திலும் திறமை காட்டுகிறார்.
கெளசிக்கை காதலிக்கும் ஆராவுக்கு ஒடிசல் தேகம்; புத்துணர்ச்சி ததும்பும் முகம். நடிப்பு அளவாகவும் சிரிப்பு அழகாகவும் இருக்கிறது. அம்மணியும் நன்றாக டான்ஸ் ஆடுகிறார்.
தன் காதலனின் அருமையை, காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தன் வீட்டாருக்கு உணர்த்துவதற்காக தற்கொலை முயற்சிவரை செல்கிற பிரணா, எல்லோரையு ஒரே கண்ணோட்டத்தில் பார்ப்பது முட்டாள்தனம் என்பதுபோல் கிளைமாக்ஸில் பேசுகிற வசனம் அர்த்தமுள்ளது.
தன்னை பொதுவெளியில் பெண்களிடம் தவறாக நடந்து கொள்பவன் என தவறாக புரிந்துகொண்டு புரட்டிப்போட்டு துவைத்த நபரின் கல்யாணத்துக்கு சென்று வாழ்த்துகிற பெருந்தன்மை, காதலியை உயிருக்கு ஆபத்தான நிலைமையில் பார்க்கும்போது வெளிப்படுத்துகிற பரிதவிப்பு என பிரணாவின் காதலனாக வருகிற சசி தயா உணர்வுபூர்வ நடிப்பால் கவனம் பெறுகிறார்.
தமிழ்த் திரைப்பட செய்தி தொடர்பாளர் கோவிந்தராஜ் எட்டிப் பார்க்கும் ஒரு காட்சி கலகலப்புக்கு கேரண்டி.
பூங்கா ராமு, பாலசுப்பிரமணியம், திண்டுக்கல் மணிகண்டன், ஸ்ரீதேவி, ஸ்மூல் ராஜா, சாய் ஜேபி, வரன், நோயல் ரெஜி, மேஜிக் சரவணகுமார் என பலரும் படத்துக்கு போதுமான அளவில் நடித்திருக்கிறார்கள்.
அகமது விக்கியின் இசையில் ‘சிக்கிமுக்கிக் கல்லு’ காதல் பாடலை ரசிக்க முடிகிறது. பூங்காவின் மகத்துவங்களை அடுக்கும் வரிகளில் அமைந்த ‘ஹேப்பி பார்க் டே’ பாடல் மகிழ்ச்சியுணர்வைத் துண்டுகிறது.
கதையின் ஹீரோ பூங்காதான் என்பதை புரிந்துகொண்டு அதை எந்தளவு அழகாக காட்டமுடியுமோ அந்தளவு அழகாக காட்ட முயற்சித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஆர்.ஹெச்.அசோக்.
காதல் வளர்ப்பு, நட்பு வளர்ப்பு, சண்டை சச்சரவு என படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஒரே பூங்காவிலேயே படமாக்கப்பட்டிருந்தாலும் நடக்கும் சம்பவங்களில் இருக்கிற பரபரப்பால் சலிப்பு தட்டவில்லை.
முன்னணி நடிகர் நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் இல்லை; படத்தில் பிரமாண்டமாய் எதுவுமில்லை. எளிய பட்ஜெட்டில் கிடைத்தவர்களைப் பயன்படுத்திக் கொண்ட ஒரு படைப்பு. பூங்காவை நேசிக்காத நபர்கள் இருக்க முடியாது. அப்படிப்பட்ட பூங்காவை மையப்படுத்தி ஒரு படம் உருவாகியுள்ளது என்பதே தனித்துவமானதுதான். பல சந்தர்ப்பங்களில் தனித்துவம் மட்டுமே வெற்றிக்கு உதவுவதில்லை.
வித்தியாசமான சிந்தித்திருப்பதற்காக இயக்குநர் உள்ளிட்ட படக்குழுவை பாராட்டலாம்.
Rating 3 / 5

