பனை மரங்களும், அதை சார்ந்த தொழிலில் ஈடுபடுபவர்களும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் படைப்பு. இப்படி சொன்னதும் படம் டாகுமென்டரி போலிருக்கும் என்ற முடிவுக்கு வர வேண்டாம். இது முழுக்க முழுக்க கமர்ஷியல் படம்.
உடன்குடியிலும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் சிலர் தங்களுக்கு சொந்தமான பனை மரங்களிலிருந்து பதநீர் இறக்குகிறார்கள். இறக்கிய பதநீரை கருப்பட்டியாக காய்ச்சி விற்றால் கணிசமான வருமானம் கிடைக்கும். ஆனால், அப்படி செய்ய விடாமல் தடுக்கிறார் ராஜா அண்ணாச்சி. பனை மரம் யாருடையதாக இருந்தாலும் இறக்கும் பதநீரை அவரிடம் கொடுத்துவிட வேண்டும். அவர் அதை கருப்பட்டியாக்கி விற்று பணம் சம்பாதிப்பார். பதநீரை கொடுக்காதவர்கள் பனை மரங்களை அவருக்கு குத்தகைக்கு விட வேண்டும். இதெல்லாம் அந்த ஊரில் எழுதப்படாத சட்டம். அந்த சட்டத்துக்கு கட்டுப்படாதவர்களை அண்ணாச்சி என்ன வேண்டுமானாலும் செய்வார். அப்படிப்பட்ட கொடுமைக்கார அண்ணாச்சியை எதிர்க்க முத்துவேல் என்ற எளிய குடும்பத்து இளைஞன் தயாராகிறான்.
இப்படி துவங்கி ‘அண்ணாச்சியின் அராஜகத்தை அடக்க நினைத்த முத்துவேலின் முயற்சி என்னாச்சி?’ என்பதை நோக்கி நகர்கிறது ‘பனை’யின் கதை…
தன்னிடம் மன பலம் மட்டுமே இருக்கிறது; அண்ணாச்சியிடம் எல்லாவிதமான பலமும் இருக்கிறது என்பதை உணர்ந்து, அண்ணாச்சியின் அராஜகத்துக்கு சாமர்த்தியமாக ஆப்பு வைக்கும் வேலையை சமர்த்தாக செய்திருக்கிறார் முத்துவேலாக வருகிற ஹரிஷ் பிரபாகரன்.
‘அப்படி அவன்கிட்ட என்ன இருக்குன்னு அவனையே சுத்திச் சுத்தி வர்றா?’ என நமக்குள் கேள்வி உருவாகிற அளவுக்கு ஹரிஷ் பிரபாகரன் மீது காதல் வயப்பட்டு வட்டமிடுகிற மேக்னா, அழகாலும் கதைக்கேற்ற நடிப்பாலும் கவர்கிறார்.
அராஜக அண்ணாச்சியாக வருகிற இந்த படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருக்கிற எம் ராஜேந்திரன், தன்னை யாரும் எதிர்க்காதபடி மக்களை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது, கட்டுப்பாட்டை மீறினால் கடுமையாக நடந்து கொள்வது, தேவையென்றால் கொல்வது என கடந்துபோகும் காட்சிகளில் தன்னால் இயன்ற முரட்டுத்தனம் காட்டியிருக்கிறார். அவருக்கு மனைவியாக வருகிற அனுபமாகுமார் சந்தர்ப்பம் பார்த்து அண்ணாச்சியின் தவறுகளை தட்டிக் கேட்பது கம்பீரமாக இருக்கிறது.
பேரன் முத்துவேலை அண்ணாச்சியை எதிர்த்து நிற்கும் கெத்துவேலாக உருவாக்குகிற கடமையை கச்சிதமாக செய்திருக்கும் வடிவுக்கரசி, அதற்கான பலனை அனுபவிப்பது அதிர்ச்சி தருகிறது.
இமான் அண்ணாச்சி, கஞ்சா கருப்பு கூட்டணியின் அலப்பரையில் கொஞ்சம் கொஞ்சம் சிரிக்கலாம்.
அவ்வப்போது தொட்டுக் கொள்வதற்காக அண்ணாச்சி தொடர்பு வைத்திருக்கும் பெண்மணி கவர்ச்சிக்கும் காமெடி கலாட்டாவுக்கும் உதவுகிறார்.
ஜேக்கப் உள்ளிட்ட மற்றவர்களின் நடிப்பும் கதைக்களத்திற்கு பொருத்தமானதாக இருக்கிறது.
பனை மரத்தின் பெருமைகளை எடுத்துச் சொல்லும் பாட்டு, குதூகலம் தரும் குத்தாட்டப் பாட்டு, இடையில் காதல் ஏக்கப் பாட்டு என வைரமுத்து வகைக்கு ஒன்றை தட்டிவிட, அவற்றை தன் இனிய இசை மூலம் ரசிக்க வைக்கிறார் மீரா லால்.
நூற்றுக்கணக்கான பனை மரங்கள் நிரம்பியுள்ள தோப்புகள், மரங்களில் பரபரப்பாக ஏறி பதநீர் இறக்கும் தொழிலாளர்கள், பதநீர் காய்ச்சப்பட்டு கருப்பட்டியாக உருவாகுதல்… எல்லாவற்றையும் காலங்காலமாக தொழிலாக செய்கிற உடன்குடியின் சுற்று வட்டாரத்தில் படப்பிடிப்பு நடத்தியிருப்பது அந்த இடங்களை நேரில் சென்று சுற்றிப் பார்த்த மனநிறைவு தருகிறது. அப்படியான உணர்வைத் தந்திருப்பது சிவக்குமார் ரங்கசாமியின் ஒளிப்பதிவு.
பனை மரம் சார்ந்த தொழில், அதிலிருக்கும் கஷ்ட நஷ்டங்கள் என பலவற்றையும் தொட்டுக் காண்பிக்கும்படி எம் ராஜேந்திரன் எழுதியிருக்கும் கதை, திரைக்கதை, வசனத்துக்கு உயிரூட்டும்படி படத்தை இயக்கியிருக்கிற ஆதி பி ஆறுமுகத்தையும் படக்குழுவையும் பாராட்டலாம்

