அர்ஜுன்தாஸ் மிரட்டலாக நடிப்பார் என்பது தெரியும்; யார் மிரட்டினாலும் அடித்து வெளுத்தாலும் வாங்கிக் கொண்டு வேதனையை வெளிப்படுத்தி நடிப்பாரா? ‘பாம்’ படத்தில் அப்படித்தான் நடித்துள்ளார்.
கிராமத்து இளைஞனாக வருகிற அவரின் உயிருக்கு உயிரான நண்பர் கதிரவன். அவர் சாதிப்பாகுபாடு காரணமாக பிரிந்து இரண்டாக பிரிந்து கிடக்கும் கிராம மக்களை ஒன்றாக இணைத்து வைக்க முயற்சி செய்கிறார். ஒரு கட்டத்தில் அவர் இறந்துபோகிறார். அவர் எதை செய்ய நினைத்தாரோ அதை அர்ஜுன்தான் செய்ய நினைக்கிறார். அதனால் எதிர் தரப்பு பெரிய மனிதர்களுக்கு பகையாளியாகிறார். அர்ஜுன்தாஸ் கீழ்சாதிக்காரர். அவர் மேல் சாதிக்காரர்களை எதிர்க்க நினைத்தால் சும்மா விடுவார்களா? அந்த இரக்கமற்ற பெரிய மனிதர்களில் ஒருவர் அர்ஜுன்தாஸை ஒரு சந்தர்ப்பத்தில் கன்னத்தில் அறைகிறான். அதனால் ஏற்படும் வலியையும் அவமானத்தையும் முகபாவங்களில் காண்பிக்கிறாரே தவிர அறைந்தவனை நிமிர்ந்துகூட பார்க்காமல் செல்கிறார். அவரது கேரக்டர் அப்படியொரு அப்பாவித்தனத்துடன் உருவாக்கப்பட்டிருக்க அதற்கேற்ற நடிப்பைத் தந்து மனதைக் கவர்கிறார்.
இறந்து கிடக்கும் நண்பனை ஊரே சாமியாக நினைக்க அந்த சாமியை தூக்கும் ஆற்றல் அர்ஜுன்தாஸுக்கு மட்டுமே கிடைக்கிறது. அதையும், பிரிந்து கிடக்கும் மக்களிடமிருக்கும் மூட நம்பிக்கையைப் பயன்படுத்தி அவர்களை சேர்த்து வைக்கலாம் என்ற மனநிலைக்கு வருபவர் அதற்கான முயற்சியில் இறங்குகிறார்.
ஏதோ செய்கிறார் என்பது தெரியும்; என்ன செய்கிறார் என்பது போகப்போகத்தான் தெரியும் என்பதுபோல் காட்சிகள் நகர, சாமியைத் தூக்குவதும், தூக்க முடியாமல் சோதனைக்கு ஆளாகிறபோது கலங்கி நின்று சாமியை வணங்குவதுமாக அர்ஜுன்தாஸ் வெளிப்படுத்தியிருப்பது தேர்ந்த குணச்சித்திர நடிப்பு.
அருள் வந்து ஆடுகிற ஆவேச ஆட்டத்தாலும் கவனம் பெறுகிறார். அதையடுத்து படத்துக்கான விமர்சனங்களில் பாராட்டுக்கள் குவிகிறது. ரசிகர்கள் அவரது நடிப்பைக் கொண்டாடுகிறார்கள்.
‘மாஸ்டர்’, ‘போர்’, ‘குட் பேட் அக்லி’ என கத்தி, ரத்தம், வன்முறையால் நிரம்பிய கதைக்களத்திலேயே பார்த்துப் பழகிய அர்ஜுன்தாஸை ‘பாம்’ படத்தில் அமைதியான மனிதராக, காதலுக்கும் நட்புக்கும் மதிப்பளிப்பவராக, நல்ல எண்ணங்கள் மட்டுமே ஆக்கிரமித்திருக்கும் மனதுக்காரராக பார்ப்பது புது அனுபவமாக இருக்கிறது.
கனமான கேரக்டர்களை நடிப்பால் மெருகேற்றக்கூடிய திறமை அவரிடம் இருப்பதால் அப்படியான வலுவான கதையம்சமுள்ள படங்களை இயக்க முன்வருகிறவர்கள் அர்ஜுன்தாஸை இழுத்துப் போடலாம். கொடுக்கும் கதாபாத்திரத்துக்கு நிச்சயம் தனது நடிப்பால் உயிரூட்டுவார். அந்த நம்பிக்கையை ரசவாதி, அநீதி படங்களுக்குப் பிறகு பாம் படத்தில் மணிமுத்து கதாபாத்திரத்தில் நடித்து நிரூபித்திருக்கிறார்!

