காவல்துறையில் பணிபுரிகிற எல்லோருமே மக்களுக்கு எதிரானவர்கள் என்று நினைக்கிற ஒருவருக்கும், காவல்துறையில் புதிதாக பணியில் சேர்கிற ஒருவருக்கும் இடையில் நடக்கும் மோதலில் பற்றியெறிகிற ‘தணல்.’
மாநிலம் முழுவதுமுள்ள காவல்துறையில் பணிபுரிகிற அத்தனை பேரையும் கொன்று தீர்க்க வேண்டும் என்ற வெறியோடு சிலர் குழுவாக இணைந்து செயல்படுகிறார்கள். அவர்களிடம், போலீஸ் பணியில் இணைந்த அன்றே ஆறு இளைஞர்கள் சிக்குகிறார்கள். அதில் ஒருவர் படத்தின் ஹீரோ அதர்வா.
சிக்கியவர்களில் ஒருவரை அந்த குழுவின் தலைவன் கொடூரமாக கொன்று விட, அதை நேரில் பார்க்கும் அதர்வாவுக்கும் மற்றவர்களுக்கும் பயம் தொற்றுகிறது. அங்கிருந்து ஓடி தப்பிக்கலாம் என்று பார்த்தால் அதற்கு வழியில்லை என்கிற நிலைமை.
ஒரு வழியாக துணிச்சலை உருவாக்கிக் கொண்டு அவர்கள் யார், எதற்காக போலீஸாரை எதிரியாக நினைக்கிறார்கள் என்பதையெல்லாம் தெரிந்து கொள்ளும் முயற்சியில் இறங்குகிறார். அவர் எதையெல்லாம் தெரிந்து கொள்கிறார் என்பது கதையின் மீதி…
கொலைகார கும்பலை பார்த்து ஆரம்பத்தில் பயந்து ஓட்டமெடுப்பது, பின்னர் ஆனது ஆகட்டும் என்ற மனநிலைக்கு வந்து அவர்களை எதிர்க்கத் தயாராகி ஆக்சன் அதிரடியில் இறங்குவது என கடந்தோடும் காட்சிகளில் அப்ளாஸ் பெறுகிறார் அதர்வா. காதல், சென்டிமெண்ட் என மற்ற உணர்வுகளை வெளிப்படுத்துவதிலும் குறை வைக்கவில்லை.
போலீஸ் துறையில் இருப்பவர்களை கொத்துக் கொத்தாக கொல்ல திட்டமிடுவதும், கையில் கிடைப்பவர்களை கொல்வதுமாக மிரட்டியிருக்கிறார் அஸ்வின் காகுமனு. அப்படி வெறியேறித் திரிபவர் கதைப்படி வில்லனா என்றால், கிளைமாக்ஸின் நெருக்கத்தில் விரிகிற பிளாஷ்பேக் அப்படியெல்லாம் இல்லை என்று விரிவான விவரங்களை அடுக்கிறது.
வேலைக்குப் போய் சம்பாதிக்கும் வயதில் பிளஸ் டூ படித்துக் கொண்டிருக்கும் ஹீரோவை காதலிப்பது, அதனால் அப்பாவின் எதிர்ப்பைச் சம்பாதிப்பது என தனித்துவம் ஏதுமில்லாமல் நடமாடும் லாவண்யா திரிபாதி, கொலை செய்வதற்கு தயங்காத கும்பலிடம் மாட்டிக் கொண்டு மிரளும்போது சற்றே கவனம் பெறுகிறார்.
ஹீரோவுக்கு நண்பனாக வருகிற ஷாரா காமெடிக்கு உதவியிருக்கிறார்.
அழகம் பெருமாள் ஹீரோவின் தந்தையாக, அருள் டி சங்கர் ஹீரோயினின் தந்தையாக, காவல்துறை அதிகாரிகளாக செல்வா, போஸ் வெங்கட், ராஜசிம்மன்… நடிப்பில் அசத்துகிற இன்னும் பலர் படத்தில் உண்டு; அவர்களுக்கு கதையில் முக்கியத்துவமும் உண்டு.
பெரும்பாலான காட்சிகளில் பரபரப்பும் விறுவிறுப்பும் கலந்திருக்க அதன் சதவிகிதத்தை தன் பின்னணி இசையால் அதிகரித்திருக்கிறார் ஜஸ்டின் பிரபாகரன்.
சக்தி சரவணனின் ஒளிப்பதிவிலிருக்கும் நேர்த்தியும் தரமும் பெரியளவில் பாராட்டுப் பெறுகிற தகுதியைக் கொண்டிருக்கிறது.
வில்லனைப் போல் செயல்படும் அஸ்வின் காகுமனுவின் பழிவாங்கல் நடவடிக்கைகளில் நியாயம் குறைவாக இருப்பதும், லாஜிக் பற்றியெல்லாம் கவலைப்படாமல் அமைக்கப்பட்டிருக்கும் காட்சிகளும் படத்தின் பலவீனம்.
தன்னைச் சார்ந்த மக்கள் பாதிக்கப்பட்டு பலியானதற்கு பழிவாங்க ஹீரோக்கள் களமிறங்குகிற கதைகளை விதவிதமாக பார்த்துள்ள நமக்கு, அப்படிப்பட்ட ஒருவரால் ஹீரோ பாதிக்கப்படுவதாக திரைக்கதையில் தீப்பற்ற வைத்து வித்தியாசம் காட்டி, ரசிகர்களை படத்தின் பலவீனங்களை பொருட்படுத்தாத மனநிலைக்கு தள்ளுகிறார் இயக்குநர் ரவீந்திர மாதவா.

