உலகம் பல மாற்றங்களை சந்தித்துக் கடந்திருக்கிற 2047 காலகட்டம். லூசிபர் என்ற சர்வாதிகாரி மால்கம் டைனஸ்டி என்ற பேரரசை உருவாக்கிக் கொண்டு உலக நாடுகளை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறான். இந்தியா அவனுக்கு கட்டுப்பட மறுத்து துணிச்சலாக எதிர்க்கிறது.
அந்த துணிச்சல் ஜெயித்ததா? சர்வாதிகாரம் நினைத்ததை சாதித்ததா என்பது கதையின் மீதி…
கதையின் நாயகனும் வில்லனுமாக விக்னேஷ். ஒருபக்கம் இந்தியாவைக் காக்கும் அதிகாரி பொறுப்பு, இன்னொரு பக்கம் இந்தியாவைக் கட்டுப்படுத்த, கட்டுப்பட மறுத்தால் அழிக்க துடிக்கும் அமைப்பின் மாபெரும் சக்தி வாய்ந்த நபர். இரண்டிலுமே ஸ்டைலிஷான நடிப்பாலும் தோற்றத்தாலும் ஸ்கோர் செய்கிறார்.
லூசிபராக வருகிற தலைவாசல் விஜய் சர்வாதிகாரத்தின் கோர முகத்தைக் மிரட்டலாக காண்பிக்கிறார்.
நாயகிகளில் நாயகி மணிஷா ஜெஷ்னானிக்கு உணர்வு பூர்வமாக நடிக்கவும், கவர்ச்சி காட்டவும் வாய்ப்பு. சரியாக பயன்படுத்தி கவனம் ஈர்க்கிறார்.
அல்மஸ் அதம், ஷாம் என அடுத்தகட்ட ஹீரோயின்கள் கிளாமர் குயின்களாக நடமாடுகிறார்கள்.
சர்வாதிகாரத்துக்கு அடிபணிய மாட்டோம் என்பதில் உறுதியாக இருக்கிற தருணங்களில் கம்பீரம் காட்டியிருக்கிறார் இந்திய ஜனாதிபதியாக நடித்திருக்கும் இளம்பெண்.
இந்தியாவின் பிரதமராக ஒய்.ஜி.மகேந்திரன், ராணுவ தளபதியாக நாசர் தனித்து தெரிகிறார்கள்.
மற்ற கேரக்டர்களில் நிழல்கள் ரவி, அஜய் ரத்னம், சுரேஷ் மேனன், ஜான் விஜய், டி.எம்.கார்த்திக், யோக் ஜேபி, லீலா சாம்சன், மோகன்ராம் உள்ளிட்டோரின் பங்களிப்பு கச்சிதம்.
துப்பாக்கிக் குண்டுகளும், ஏவுகணைகளும் சீறிப் பாயாத காட்சிகள் குறைவு. அதற்கேற்றபடி பின்னணி இசையை சுறுசுறுப்பாக தந்திருக்கிறார் சந்தோஷ் ராம்.
பல காட்சிகள் கிரீன் மேட்’டில் உருவானவை போலிருக்க மற்ற காட்சிகளை தனது கேமரா கோணங்களால் தரம் உயர்த்திக் காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் தேவ சூர்யா.
இந்தியாவை அழிக்க முயற்சிப்பவர்களை ‘ரெட் ஃபிளவர் ஆபரேசன்’ மூலம் வீழ்த்துவதாக நகரும் கதையில், ‘ரெட் ஃபிளவர்’ என்பது நேதாஜி சுபாஷ் சந்திரபோஸால் உருவாக்கப்பட்ட அமைப்பு என சித்தரித்திருப்பது ஆடியன்ஸின் கைத்தட்டலைப் பெற உதவுகிறது.
தேசப்பற்றுடன் ஒரு கதையை உருவாக்கி, அதற்கு மேக்கிங்கில் ஹாலிவுட் பிரமாண்டத்தை தர நினைத்த இயக்குநர் ஆண்ட்ரூ பாண்டியன், அந்த பிரமாண்டத்தை வீடியோ கேம் அளவில் பரிமாறியிருப்பது பரிதாபம்!
Rating 2.5 / 5

