பேய்க் கதைக்குள் பகுத்தறிவுப் பாடம் நடத்தும் ‘ஸ்கூல்.’
ஊரில் நல்ல பெயர் எடுத்திருக்கிற அந்த ஸ்கூலில் மர்மமான முறையில் ஒரு மாணவனும் மாணவியும் இறந்துபோக, அதற்கு காரணம் அமானுஷ்ய சக்தியா? அந்த பள்ளியின் தலைமையாசிரியர் எழுதிய புத்தகமா என்ற இரு கோணங்களில் விசாரணை துவங்குகிறது.
அமானுஷ்ய சக்திதான் காரணம் என்றால் அதன் பின்னணி என்ன? புத்தகம்தான் காரணம் என்ற அந்த புத்தகத்தில் அப்படி என்னதான் இருக்கிறது?
இப்படி படம் பார்ப்பவர்களின் மனதில் எழும் கேள்விகளுக்கு பதில் சொல்லி கடந்தோடுகிறது
வெற்றி மட்டுமே குறிக்கோள் என்ற தவறான மனநிலைக்கு ஆளாகி, ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டு, பள்ளியில் கலவரச்சூழலை உருவாக்கிக் கொண்டிருக்கும் மாணவ மாணவிகளை நல்வழிப்படுத்தும் ஆசிரியராக யோகிபாபு எளிமையான நடிப்பில் தன் கடமையை செய்திருக்கிறார். சக ஆசிரியராக வருகிற பூமிகா யோகிபாபுவின் செயல்பாடுகளுக்கு உறுதுணையாக நிற்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டு சரியாக செய்திருக்கிறார்.
மாணவர்கள் மனதில் வெற்றியடைவது மட்டுமே சாதனை என்ற எண்ணம் உருவாகும் விதத்தில் புத்தகம் எழுதி ஸ்கூலில் குழப்பச்சூழலை உருவாக்கும் தலைமையாசிரியராக பக்ஸ் பகவதி பெருமாள், போலீஸ் ஆஃபீசராக கே எஸ் ரவிக்குமார், ஆவிகளை ஏவிவிட்டு அக்கிரம அராஜகங்களை செய்கிறவராக நிழல்கள் ரவி, அமானுஷ்ய சக்திகளை அதட்டி மிரட்டும் சாமியாராக ஆர் கே வித்யாதரன், மாணவ மாணவிகள், சக ஆசிரியர், ஆசிரியைகள் என மற்றவர்களின் நடிப்பு நேர்த்தி.
இசைஞானி இளையராஜாவின் எழுத்திலும் இசையிலும் உருவான பாடல்களும் பின்னணி இசையும் படத்துக்கு விளம்பர வெளிச்சம் தந்துள்ளன.
ஆதித்ய கோவிந்தராஜின் ஒளிப்பதிவு கச்சிதம்.
படத்தின் நீளம் அதிகம் என்பது தொடங்கி பட்டியலிட சிலபல குறைகள் இருந்தாலும் ‘வெற்றி பெற நினைப்பதில் தவறில்லை; வெற்றி பெறுவது மட்டுமே சாதனை என்ற எண்ணம் தவறு’ என்ற அனைவரும் ஏற்கும் கருத்தை, ஹாரர் திரில்லர் கதைக்களத்துக்குள் புகுத்தி பகுத்தறிவுப் பாடம் நடத்தியிருக்கும் இயக்குநர் கே ஆர் வித்யாதரனின் நோக்கத்தில் குறையேதுமில்லை!
ஸ்கூல் _ படம் வடிவில் பாடம்!

