‘கிடுகு’ படத்தை இயக்கிய வீரமுருகன் இயக்கத்தில் அப்புகுட்டி, தீபா, யாசர் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘கலன்’ படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
இந்து மக்கள் கட்சியின் நிறுவனர் தலைவர் அர்ஜுன் சம்பத், இயக்குநர்கள் சங்கத் தலைவர் ஆர்.வி.உதயகுமார், செயலாளர் பேரரசு, தயாரிப்பாளர்கல் சங்க செயற்குழு உறுப்பினர் மற்றும் பி.ஆர்.ஓ சங்க தலைவர் விஜயமுரளி, பின்னணி பாடகர் மற்றும் இசையமைப்பாளர் அந்தோணிதாசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள்.
இயக்குநர் வீரமுருகன் விருந்தினர்களை வரவேற்று பேசுகையில், “ஊடக நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம், இந்த படத்தை விளம்பரப்படுத்தி மக்களுக்கு தெரிகிறது என்றால் அது உங்களால் தான்.
அர்ஜுன் சம்பத் அண்ணனை என் வாழ்க்கையில் மறக்கவே முடியாது. கிடுகு படம் வெளியான போது என்னை அழைத்து பணம் கொடுத்தவர், துத்துக்குடியில் தியேட்டர் கிடைக்காமல் போன போது கல்யாண மண்டபம் ஒன்றை வாடகை எடுத்து அதில் என் படத்தை மக்களுக்கு இலவசமாக போட்டு காண்பித்தார், அவருக்கு நன்றி.
அண்ணன் பேரரசு அவர்களுக்கு நன்றி, நித்யானந்தாவுடன் காண்பிரன்ஸ் வீடியோவில் இருந்தோம், அவருக்கும் எனக்கும் தேசிய விருது கொடுத்தார்கள். அப்போது நித்யானந்தாவின் கதையை படமாக எடுக்குமாறு கேட்டார்கள், அவர் ஓகே சொல்வார் என்று நினைத்தேன் சொல்லவில்லை, அவருக்கு நன்றி. விஜயமுரளி சாருக்கு நன்றி. ஆர்.வி.உதயகுமார் சார் அவர்களுக்கு நன்றி.
கிடுகு படம் முடிந்ததும், நாதுராம் கோட்ஸே என்ற படத்தை தொடங்கினேன், ஆனால் அந்த படத்திற்கு பெரிய எதிர்ப்பு வந்தது. அதனால் இந்த படத்தை உடனே தொடங்க வேண்டும் என்று முடிவு செய்தேன், இதற்கும் பல எதிர்ப்பு வந்தது. அப்போது குருமூர்த்தி அண்ணன் நான் உடன் இருக்கிறேன் உடனே தொடங்குங்கள், என்று கூறி படம் முடியும் வரை என்னுடன் இருந்தார். அவர் ராணுவத்தில் பணியாற்றுகிறார். பணிக்கு விடுமுறை போட்டுவிட்டு என் உடன் தான் பயணித்து வருகிறார் அவருக்கு நன்றி.
ஜெ.கே அண்ணன் அவர்களுக்கு நன்றி. இந்த படத்தில் முதலில் பரணியை தான் நடிக்க வைப்பதாக இருந்தத். ஆனால், அவர் வேண்டாம் அப்புக்குட்டியை நடிக்க வைக்கலாம் நன்றாக இருக்கும் என்று கூறியவர் மணிமாறன் அண்ணன் தான். அதுமட்டும் அல்ல, படப்பிடிப்பில் மணிமாறன் அண்ணனின் விரல் துண்டாகி விட்டது. ஆனால், அவர் அதை பொருட்படுத்தாமல் நடித்துக் கொண்டே இருந்தார். பிறகு தீபா அக்கா அழுதுக்கொண்டே இருந்தார், அப்போது தான் எங்களுக்கு தெரிந்தது. அப்போது கூட மருத்துவமனைக்கு போகாமல் முடித்துவிட்டு போகிறேன், என்று சொன்னார், அவருக்கு நன்றி. தீபா அக்காவை நடிக்க வைக்க முடிவு செய்த போது அவர் லாரன்ஸ் சார் படத்தில் ஒப்பந்தம் ஆனார். அதனால் அவர் வருவரா? என்று யோசித்தோம். ஆனால், அவர் உடனே வருகிறேன் என்று சொல்லி வந்து நடித்துக் கொடுத்தார், அவருக்கு நன்றி.
இசையமைப்பாளர் ஜெர்சன், கிடுகு படத்திற்கு பலர் இசையமைக்க மறுத்த போது, தைரியமாக என்னுடன் பயணித்தார். அதுமட்டும் அல்ல, எத்தனை முறை, எத்தனை பாடல்கள் கேட்டாலும் சலிக்காமல் போட்டுக் கொடுப்பார். எதாவது ஒரு பாடல் சரியில்லை என்று சொன்னால், அனைத்தையும் உடனே அழித்துவிட்டு முதலில் இருந்து போடுவார், அந்த அளவுக்கு கடினமாக உழைத்துக் கொடுத்தார், அவருக்கு நன்றி. இந்த படத்தின் இணை இயக்குநராக, உதவி இயக்குநராக பணியாற்றிய அனைவருக்கும் நன்றி.
இத்தனை பேருக்கு நான் நன்றி சொல்ல காரணம், யாருமே பணத்திற்காக பணியாற்றவில்லை. நான் கதை எழுதும் போது கூட, இது சாதாரண படமாக இருக்காது, அப்படி நீங்கள் எடுக்க மாட்டீர்கள், இருந்தாலும் உங்களுடன் பணியாற்றுகிறோம், என்று கூறி இரண்டு வருடங்களாக என்னுடன் பயணிக்கிறார்கள். அதனால், இவர்களுக்கு நன்றி சொல்வது என் கடமையாக கருதுகிறேன். கேமரா மேன், கலை இயக்குநர் என அனைவருக்கும் நன்றி. காயத்ரி ஜி அனைத்து காட்சிகளையும் ஒரே டேக்கில் முடித்தார். அவரும், தீபா அக்காவும் இணைந்து நடித்த காட்சிகள் சிறப்பாக இருக்கும், அவருக்கு நன்றி. சம்பத் ராம் அண்ணனுக்கு நன்றி, யாசர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி” என்றார்.
நடிகை தீபா பேசியபோது, “அதர்மத்திற்கும் தர்மத்திற்கும் நடக்கும் பெரிய போராட்டம் தான் இந்த படம். இதுபோன்ற படங்களில் ஆண்களை தான் அதிரடி வசனங்களை பேச வைத்திருப்பார்கள். ஆனால், இந்த படத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அவர்கள் மூலம் அதிரடி வசனங்களை பேச வைத்திருக்கிறார்கள். இதில் பெண்களால் முடியாதது எதுவும் இல்லை, என்பதையும் இயக்குநர் வீரமுருகன் சொல்லியிருக்கிறார். எனக்கு இப்படி ஒரு கதாபாத்திரத்தை கொடுத்த இயக்குநருக்கு நன்றி” என்றார்.
நடிகர் அப்புக்குட்டி பேசியபோது, “கலன் படத்தில் நடித்தது மகிழ்ச்சி. மேடையில் இருக்கும் அனைத்து பெரியவர்களுக்கும் நன்றி. இந்த படத்தில் நான் நடிப்பதற்கு மிக முக்கியமான காரணம் மணிமாறன் அண்ணன் தான். ஒரு நாள் இயக்குநரை சந்திக்க அழைத்து சென்றார், அப்போது இயக்குநர் கதை சொன்ன போது 20 நாட்கள் படப்பிடிப்பு இருக்கும், பெரிய சம்பளம் கிடைக்கும் என்று நினைத்தேன். ஆனால், அவர் மொத்தமே 6 நாட்கள் தான் என்று சொன்னார். ஆனால், படத்தில் நீங்க தான் முக்கியமான வேடம், நாயகனின் தாய்மாமனாக நடிக்க வேண்டும், என்று சொன்னார். சரி ஆறு நாட்களாக இருந்தாலும் பெரிய சம்பளம் கொடுப்பார்கள், என்று நினைத்து போனேன். ஆனால் ஆறு நாட்களை நான்கு நாட்களில் முடித்து விட்டார்.
சிறிய படம் என்று சொன்னவர், படப்பிடிப்பில் இரண்டு கேமராக்களை வைத்து எடுத்துக் கொண்டிருந்தார்கள். மிக வேகமாக படப்பிடிப்பு நடந்தது, பலர் வேகமாக எடுப்பார்கள் ஆனால் காட்சிகள் எதிர்பார்த்தது போல் வராது. இயக்குநர் வீரமுருகன் சார் காட்சிகளை வேகமாக படமாக்கினாலும், மிக தரமாக எடுத்தார். நான்கு நாட்கள் நான் நடித்தாலும் என்னை படம் முழுவதும் வருவது போல் காட்டியிருக்கிறார்கள், இது மிகப்பெரிய விசயம்.
வீரமுருகன் சாரின் வேகத்தை பார்த்து ஒரு கட்டத்தில் எனக்கு பயமே வந்துவிட்டது. அவர் மிக தைரியமான ஒரு மனிதர். தீபா எனக்கு அக்காவாக நடித்திருக்கிறார். இது வித்தியாசமான படம், இந்த படத்தில் எனக்கு வாய்ப்பளித்த இயக்குநருக்கு நன்றி.” என்றார்.

