கடவுள் தன் பக்தர்களை சோதிப்பதெல்லாம் காலங்காலமாக நடக்கிற கதை. இந்த வானரனில் நாம் பார்ப்பது கடவுள் வேஷம் போட்டு பிழைப்பு நடத்துகிற எளிய மனிதன் சோதனைக்கு ஆளாகிற கதை.
அனுமார் வேசம் போட்டுக்கொண்டு மக்கள் கூடும் இடங்களில் வலம் வந்து, யாசகமாக கிடைக்கிற காசில் வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த நபரின் மகளுக்கு மூளையில் பிரச்சனை. ஆபரேசன் செய்தால்தான் காப்பாற்ற முடியும். அதற்கு நான்கைந்து லட்சங்கள் செலவாகும். சில நாட்கள் முன் மகள் கேட்ட செருப்பையே வாங்கித் தர பணமில்லாமல் மனம் நொந்து போயிருக்கும் அவர், மகளின் ஆபரேசனுக்கான பணத்துக்கு எங்கே போவார்? எப்படி மகளைக் காப்பாற்றுவார்?
நம் மனதில் எழும் கேள்விகளுக்கு பதில்களாய் படத்தின் மீதிக் கதை காட்சிகளாக விரிகிறது. இயக்கம் ஸ்ரீராம் பத்மநாபன்
கதையின் நாயகன் பிஜேஷ் நாகேஷ். (நடிகர் நாகேஷின் மகன் ஆனந்தபாபுவின் வாரிசு) மனைவியை இழந்த வலியோடு இருக்கிற அவர் மகளின் வியாதியறிந்து அதிர்வது, ஆபரேசனுக்காக உதவி கேட்டு தவிப்பது, கிடைத்த உதவி பறிபோனபின் மனம் உடைவது என காட்சிக்கு காட்சி உணர்வுபூர்வமான நடிப்பைத் தந்திருக்கிறார்.
ஹோம்லி லுக்கில் மனதைக் கவர்கிறார் பிஜேஷின் காதல் மனைவியாக வருகிற அக்ஷயா.
பிஜேஷ் _ அக்ஷயா தம்பதியின் மகளாக வந்து அழகான சிரிப்பையும் கதைக்கேற்ற நடிப்பையும் தந்திருப்பது குழந்தை நட்சத்திரம் ‘சூப்பர் சிங்கர்’ வர்ஷினி.’
லட்சக்கணக்காக பணத்தை தன் சுயநலத்துக்காக திருடி, போலீஸில் சிக்கி அடிபடும்போது ‘நல்லவனா இருந்து என்ன பலன்’ என சமூகத்தைப் பார்த்து நியாயமான கேள்வியெழுப்பும் ஆதேஷ் பாலாவின் கதாபாத்திரம் கவனம் பெறுகிறது.
இஸ்லாமியராக வருகிற லொள்ளு சபா ஜீவா ‘தனக்கு செய்வதையல்ல; இல்லாதவர்க்கு செய்வதையே இறைவன் விரும்புவான்’ என்ற கருத்தை அழகாக சொல்லி போகிறார்.
விஜயகாந்தை ஜெராக்ஸ் எடுத்தது போலிருக்கிற நாமக்கல் விஜயகாந்த், கதை நாயகனுக்கு நண்பனாக வந்து உதவி செய்யும் விசயத்தில் நிஜ விஜயகாந்த் போலவே நடந்து கொள்கிறார்.
மற்றவர்களின் நடிப்பும் நேர்த்தி.
ஷாஜகான் தந்திருக்கும் இதயம் வருடும் இசையில் கதைக்கு பொருத்தமாக அமைந்திருக்கின்றன ‘நீதானே என் உலகம்’, ‘யாரோ என் நெஞ்சில்’ என அணிவகுக்கும் பாடல்கள். கதை நாயகன் பிஜேஷ் ஆவேசமாக ஆடும் அனுமனை போற்றும் பாடலுக்கான இசை சிலிர்ப்பூட்டுகிறது.
தரமான ஒளிப்பதிவை தந்து படத்தை காட்சிகளை தரமாக்கியிருக்கிறார் நிரன் சந்தர்.
‘நல்லவனை சோதனை சுற்றி வளைக்கும்போது அவனை மீட்டெடுக்க சில நல்லவர்கள் வரிசையில் வருவார்கள்’ என்ற நம்பிக்கையூட்டும் இந்த படம், ‘ஊர் உலகத்துக்கு நல்லவனா இருந்தா வாழ்க்கையில நல்லாயிருக்க முடியாது’ என்ற கருத்தை எடுத்துச் சொல்லி குழப்பவும் செய்கிறது.
வானரன் _ பூமியில் மனிதாபிமானம் உள்ளவர்களுக்குப் பஞ்சமில்லை என உணர்த்துபவன்!

