போதைக் காளான் பின்னணியில் அதிரடியான சம்பவங்களுடன் விரிகிற படம்.
கொடைக்கானலின் வட்டக்கானல் பகுதியில் விளைகிற போதைக் காளான்களை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் விற்பனை செய்கிற தொழிலில் கொடிகட்டிப் பறக்கிறார் ரவுடி கதிரவன். அவர் ஒரு இளம்பெண்ணுக்கு சொந்தமான, போதைக் காளான் விளைகிற 200 ஏக்கர் நிலத்தை வாங்க முயற்சிக்கிறார். அந்த நிலத்தை அவரிடம் விற்க மறுக்கிறார் அந்த பெண். அந்த பெண்ணை கதிரவனின் மகன் காதலிக்கிறார். இந்த காதல் விவகாரத்தால் கதிரவனின் மகன் கதிரவனுக்கு எதிரியாகிற சூழ்நிலை.
இது ஒரு பக்கமிருக்க கதிரவன் ஏற்கனவே, போதைக் காளான் பிஸினஸில் பலமாக இருந்த ஒருவரை கொலை செய்துவிட, அவரது மனைவி கதிரவனை பழிவாங்க காத்திருக்கிறார்.
கதிரவன் நினைத்தபடி நிலத்தை வாங்க முடிந்ததா? அவரது மகனுடைய காதல் என்னவானது? பழிவாங்கக் காத்திருந்த பெண்மணிக்கு அதற்கான சந்தர்ப்பம் கிடைத்தா? இந்த எல்லா கேள்விகளுக்குமான பதில்களாய் வேகமெடுக்கின்றன அடுத்தடுத்த காட்சிகள்…
பாடகர் மனோவின் மகன் துருவன் மனோ நடிகராக, கதாநாயகனாக அறிமுகமாகியிருக்கும் படம் இது. கதிரவனின் மகனாக வருகிற அவருக்கு அப்பாவின் அடியாளாக இருந்து ரவிடியிஸம் செய்வதோடு, எந்நேரமும் குடிக்கிற வேலை. அதையெல்லாம் ஓரளவு சரியாக செய்து அவ்வப்போது காதலிக்கிற கடமையை மனம்போன போக்கில் நிறைவேற்றுகிறார். அடுத்தடுத்த படங்களில் நடிப்பில் மெருகேற வாய்ப்பிருக்கிறது.
துருவனின் காதலியாக மீனாட்சி கோவிந்தராஜன் பேசும் திறனற்றவராக வந்து காதல், வருத்தம், கோபம், இயலாமை என கதைக்குத் தேவைப்படும் அழுத்தமான உணர்வுகளை பொருத்தமான முகபாவங்களில் கொண்டு வந்திருக்கிறார்.
கதிரவனாக வருகிற ஆர் கே சுரேஷ் வளர்ப்பு மகன்களை அடியாட்களாகப் பயன்படுத்தி போதைக் காளான் விற்பனையில் கெத்து காட்டுவதாகட்டும், தொழில் கற்றுக் கொடுத்தவரை சந்தர்ப்பம் பார்த்து போட்டுத்தள்ளிவிட்டு, அவரது மனைவி மீது காமப் பார்வை வீசுவதாகட்டும் கேரக்டருக்கு தேவையான வில்லத்தனத்தை வெறித்தனம் கலந்து தந்திருக்கிறார்.
கதிரவனின் மகன்களாக கபாலி விஷ்வந்த், விஜய் டிவி சரத், கதிரவனை கொன்றழிப்பதற்காக காத்திருந்து சூழ்நிலை அமைந்தபின் பயன்படுத்திக் கொள்கிற வித்யா பிரதீப், அவரது கணவராக ஆடுகளம் நரேன் என மற்றவர்களின் நடிப்பு கச்சிதம்.
எம் ஏ ஆனந்தின் கேமரா வழியாக கொடைக்கானலின் அழகை ரசிக்க முடிகிறது. மாரீஸ் விஜயின் பின்னணி இசை ஓரளவுக்கு காட்சிகளுக்கு சுறுசுறுப்பூட்டுகிறது. மனோவும் கானாபாலாவும் இணைந்து பாடும் பாடல் கொஞ்சமாய் கவர்கிறது. மற்ற பாடல்கள் மனதில் நிற்க மறுக்கின்றன.
பிஸினஸ் பகை, அடிதடி, வெட்டுக்குத்து என பரபரப்பான சம்பவங்கள் இருந்தும் திரைக்கதையின் போக்கு பழக்கப்பட்டதாக இருப்பதால் சலிப்பு ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.
போதையின் பாதை ஆபத்தானது என்பதை படம் சொல்ல வரும் கருத்தாக கிளைமாக்ஸில் பதிவு செய்திருக்கிற இயக்குநர் பித்தாக் புகழேந்தியின் சமூக அக்கறை பாராட்டுக்குரியது. போதைக் காளான்கள் எடுத்துக் கொள்பவர்கள் என்ன மாதிரியான பாதிப்புக்கு ஆளாவார்கள் என்பது பற்றி சற்றே விரிவாக எடுத்துச் சொல்லியிருந்தால் படத்தின் தர மதிப்பீடு இன்னும் கொஞ்சம் உயர்ந்திருக்கும்.
Rating 2.5


