ஒரு பெரும் புதையலை அடைவதற்காக நரபலி கொடுக்கத் திட்டமிடும் பெண் மந்திரவாதி ஒருவர் கதையின் நாயகி அபிராமியை குறிவைத்து தூக்குகிறார். அவரிடமிருந்து அவளை, அவளது குடும்பத்தாரும் காதலனும் காப்பாற்றும் முயற்சியில் இறங்குவதும்,
மந்திரவாதி ஏற்கனவே கொடுத்த நரபலி, அதில் கிடைத்த தோல்வி என பரபரக்கும் பிளாஷ்பேக் காட்சிகளுமாக சூடுபிடிக்கிறது தந்த்ராவின் திரைக்கதை.
துஷ்ட சத்தியின் துணையோடு நிற்கிற மந்திரவாதி, அவரிடமிருந்து அபிராமியை காப்பாற்ற போராடுபவர்கள் நம்புகிற நல்ல சக்தி… எந்த சக்தி பலமானது, எது ஜெயிக்கிறது என்பது கதையோட்டம்…
அன்பு மயில்சாமி கதையின் நாயகன் என்றாலும் அதிரடி ஹீரோயிஸம் காட்டுகிற வேலை குறைவாகவும் இயல்பாக நடிப்பதற்கான வாய்ப்பு அதிகமாகவும் வழங்கப்பட்டிருக்கிறது. அதை பயன்படுத்தி குடித்துக் கும்மாளமடிப்பது, காதல் உணர்வில் மிதப்பது, காதலியை ஆபத்திலிருந்து காப்பாற்றுவதற்காக முயற்சியில் பதற்றத்தை வெளிப்படுத்துவது என கச்சிதமாக பங்களிப்ப்பு தந்துள்ளார்.
தான் நினைத்ததை சாதித்துக் கொள்வதற்காக சூழ்ச்சி, துரோகம், நரபலி என எதையும் செய்யத் தயாராக இருப்பது, முதல் முயற்சியில் ஒருவரை பலிகொடுத்தும் தன் முயற்சியில் தோல்வியடைவது, ஒரு ஆணின் உடம்புக்குள் நுழைந்து தன் ஆசையை தீர்த்துக் கொள்ளும் முயற்சியில் இறங்குவது என தனக்கான காட்சிகளில் மிரட்ட்டியிருக்கிற நிகாரிகா அழகாகவும் இளமையாகவும் இருப்பது கவனம் ஈர்க்கிறது.
அபிராமியாக வருகிற பிருந்தா புன்னகையால் வசீகரிக்கிறார்; காதல் காட்சிகளுக்கு பொருத்தமான முகபாவங்களைக் காட்டுகிறார். பாடல் காட்சியில் சில விநாடிகள் கவர்ச்சியாகவும் தோன்றுகிறார்.
பெண் மந்திரவாதியின் ஆண் உருவமாக வருகிற ஜாக், கறை படிந்த பற்களைக் காட்டியபடி அடிக்கடி எட்டிப் பார்ப்பது ஆடியன்ஸை பயமுறுத்தும் என இயக்குநர் நினைத்திருக்கலாம். ஆனால், அப்படியெதுவும் நடக்கவில்லை. ஜாக்கின் நடிப்பில் குறையில்லை.
ஜாவா சுந்தரேசனின் காமெடி வழக்கம்போலவே கலகலப்பூட்டுகிறது. அவரது தேவர்மகன் மீசையுடன் கூடிய கெட்டப் அசத்துகிறது.
லொள்ளுசபா சுவாமிநாநன், நிழல்கள் ரவி, சசிகுமார் சுப்ரமணியன், சித்தா தர்ஷன் என மற்றவர்கள் கதையில் கச்சிதமாக கலந்திருக்கிறார்கள்.
கணேஷ் சந்திரசேகர் பாடல்களுக்கான இசையில் இதத்தையும் தருகிறார்; உக்கிரத்தையும் புகுத்தியிருக்கிறார். பின்னணி இசையும், ஹாசிப் எம் இஸ்மாயிலின் ஒளிப்பதிவும் பரவாயில்லை என்ற உணர்வையே தருகிறது.
அமானுஷ்ய நம்பிக்கைகளை மையப்படுத்திய இந்த திரில்லரில் இருக்கும் சிலபல குறைகள் எளிமையான பட்ஜெட்டில் எடுத்திருப்பதால் நேர்ந்தவை என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. அதையெல்லாம் தாண்டி ஆடியன்ஸை பரபரப்பு உணர்வில் தக்க வைக்க தன்னால் முடிந்ததை செய்து, ‘இந்த உலகத்தில் நல்லதை மட்டுமே எதிர்பார்க்காதீர்கள்; கெட்டதும் இருக்கவே செய்யும், தவிர்க்க முடியாது’ என்ற எல்லோரும் ஏற்கத்தக்க கருத்துடன் படத்தை முடித்திருப்பதற்காக இயக்குநர் வேதமணியை பாராட்டலாம்.
Rating 2.5 / 5


