இந்த கதை நடக்கும் ஊரில் வீரன் என்பவர் கொலைகார ரவுடி. அவரது தம்பி காமவெறியில் பெண்களைச் சீரழித்துக் கொண்டிருக்கிறான்.
கதை இப்படி துவங்கும்போதே, அந்த இருவரையும் தீர்த்துக்கட்ட பாதிக்கப்பட்டவர்களில் இருந்து யாரோ ஒருவர் களமிறங்குவார் என்பதை யூகிக்க முடிகிறது. அதன்படியே நடக்கிறது.
இருவரும் எப்படி அழிக்கப்படுகிறார்கள், யாரால் அழிக்கப்படுகிறார்கள் என்பது பரபரப்பான திரைக்கதை.
ஊரில் பவர்ஃபுல்லான ரவுடிப் பேர்வழி என்பதற்கான கம்பீரத்தை தனது நடிப்பில் கச்சிதமாக காட்டியிருக்கிறார் வீரனாக வருகிற ஆனந்த முருகன். உயிரற்றவராக நடித்து தன் எதிரியின் உயிரைப் பறிக்கும்போது அதிகமாய் கவர்கிறார்.
பெண்களை தன் காமவெறிக்குப் பலியாக்குகிற, நிர்வாணமாக வீடியோ எடுத்து மிரட்டுகிற கேடுகெட்ட வேலைகளை திமிரும் தெனாவட்டுமான உடல்மொழியோடு செய்திருக்கிறார் ‘ராட்சசன்’ யாசர்.
யாசரிடம் சிக்கிச் சின்னாபின்னமாகும் இளம்பெண்களில் ஒருவராக, கதைநாயகியாக காயத்ரி ரெமா. காமவெறிக்குப் பலியாகும் தருணத்தில் கலங்க வைத்து பாடலுக்கான நடனத்தில் உற்சாகமூட்டுகிறார்.
தங்கையை சீரழித்தவனை மட்டுமல்லாது அவனது அண்ணனையும் போட்டுத்தள்ள திட்டம் தீட்டி நிறைவேற்றுகிற பாலா ஹசனின் துடிப்பான நடிப்பு கதைக்கு விறுவிறுப்பை தந்திருக்கிறது.
இயக்குநர் சரவண சக்தி, சிறகடிக்க ஆசை ஸ்ரீதேவா, கஜராஜ், சர்மிஷா, ஹலோ கந்தசாமி, ஸ்வாதி எஸ் பிள்ளை, சரவணன், ரொட்டேரியன் விஸ்வநாராயணன், மிதுன் சக்ரவர்த்தி ஆகியோரின் நடிப்பு நேர்த்தி.
சீரியஸான கதைக்கிடையில் புத்துணர்ச்சி தந்துபோகிறது என் ஆர் ரகுநந்தன் இசையமைத்திருக்கும் ‘டம்ம டம்மா’ பாடல். பின்னணி இசையை ஆர்ப்பாட்டமில்லாமல் தந்திருக்கிறார் ஜோஸ் பிராங்ளின்.
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவங்களை மையப்படுத்திய திரைக்கதையால் காட்சிகளை விறுவிறுப்பாக்கி, இன்ஸ்டா உள்ளிட்ட சமூகவலைதளங்களால் பெண்கள் சந்திக்கும் ஆபத்துக்களை எடுத்துக்காட்டி சமூகத்துக்கு விழிப்புணர்வூட்டுவது இயக்குநர் குகநேசன் சோனைமுத்துவின் நோக்கம். அதை எளிமையான பட்ஜெட்டில், எளிமையான நடிகர் நடிகைகளை வைத்துக் கொண்டு சரியானபடி நிறைவேறியிருப்பதற்காக ஆடியன்ஸின் பாராட்டுக்களைக் குவிக்கிறார்.
Rating 3 / 5


