பல லட்சங்கள் சில கோடிகள் இருந்தால் தனது கடன் தொல்லைகளிலிருந்து தப்பிக்கலாம் என்ற சூழ்நிலையில் இருக்கிற குருவுக்கு, ஒரு நபரால் ரகசிய இடத்தில் பதுக்கப்பட்ட பல கோடி ரூபாய் பற்றி தெரிகிறது. அதை அடைய அதாவது கொள்ளையடிக்க களமிறங்குகிறார். இது கதையாக இருக்க எப்படியான முயற்சிகளால் பணத்தை கண்டுபிடிக்கிறார், கொள்ளையடிக்கிறார், முயற்சிகளில் அவர் அடைந்த கஷ்ட நஷ்டங்கள் என்னென்ன என்பதெல்லாம் திரைக்கதையாக நீள்கிறது…
குருவாக வருகிற சந்தீப் கிஷன், கடனில் சிக்கித் தவிப்பதிலிருந்து புத்திசாலித்தனமான செயல்களால் பணத்தை அடைவது வரை அவரது கேரக்டருக்கு போதுமான உணர்வுகள் நிரம்பிய நடிப்பை இயல்பாக வழங்கியுள்ளார். ஆக்சனிலும் தேவைக்கேற்ப அதிரடி காட்டுகிறார்.
ஃபரியா அப்துல்லா, ஹீரோவுக்கு காதலியாக வருபவர்கள் என்னவெல்லாம் செய்வார்களோ அதையெல்லாம் தன்னால் முடிந்தளவில் சரியாக செய்திருக்கிறார்.
வில்லனாக சம்பத்ராஜ். வெட்டுக்குத்து, துப்பாக்கிச் சூடு என கெத்து காட்டுகிறார். இன்னொரு வில்லன் ஷிவ் பண்டிட் கார்ப்பரேட் வில்லத்தனத்தில் கவனிக்க வைக்கிறார்.
கேத்ரின் தெரசாவின் ஐட்டம் டான்ஸும் படத்தில் உண்டு.
தமன் இசையில் சுலோச்சனா பாடல் கிக்கேற்ற, பின்னணி இசையில் விறுவிறுப்பு போதவில்லை. கிருஷ்ணன் வசந்தின் ஒளிப்பதிவு சாதாரண காட்சிகளைக்கூட பிரமாண்டமாக காட்டுகிறது.
அறிமுக இயக்குநர் ஜேசன் சஞ்சய் படத்தை ஸ்டைலிஷ் மேக்கிங்கில் கட்டமைத்திருக்கிறார். கதையும், நடக்கும் சம்பவங்களும் பழைய படங்களைப் பார்ப்பது போலிருப்பதால் மேக்கிங் மீது கவனம் குவிய வாய்ப்பில்லாமல் போகிறது.
Rating 3 / 5

