சூர்யா நடிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள ரெட்ரோ படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடந்தது.
நடிகர் சூர்யா, கதாநாயகி பூஜா ஹெக்டே, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், நடிகர் சிவகுமார், நிகழ்வில் தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன், தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம், பாடலாசிரியர் விவேக், இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன், நடிகர் கஜராஜ் , நடிகர் ஜோஜு ஜார்ஜ், தயாரிப்பாளர் ஜெயந்தி லால் கட்டா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் சூர்யா பேசுகையில், ” ரெட்ரோ இசை வெளியீட்டு விழாவில் மிக குறைவாக பேசலாம் என நினைத்தேன். வேறொரு விழாவில் நிறைய பேசலாம் என்றும் நினைத்தேன். தமிழகத்தின் அனைத்து பகுதியிலிருந்தும் வந்திருக்கும் என் அன்பான ரசிகர்களுக்கு முதலில் நன்றி. நன்றி.
‘ரெட்ரோ’ என்பது ஒரு காலத்தை குறிக்கிறது. நாம் கடந்து வந்த காலத்தை குறிப்பது. சினிமாவுக்கு வந்து 28 வருஷம் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். அந்த காலத்தை என்னால் மறக்க முடியாது. இந்த அழகான நினைவுகளை கொடுத்த உங்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றி.
இன்று நடிகர் ஜெயராமை தவற விடுகிறோம். நாசர், ஜோஜு ஜார்ஜ் போன்றவர்கள் படப்பிடிப்பு தளத்திற்கு வருகை தந்து தங்களுடைய உழைப்பை உற்சாகத்துடன் வழங்குவதை பார்க்கும் போது வியப்பாக இருக்கும். நான் வெற்றி பெற வேண்டும் என உண்மையாக விரும்பும் நாசர் சாருடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சி. இந்த படத்தில் என்னுடன் பணியாற்றிய இயக்குநர் தமிழ், கருணாகரன், கஜராஜ் அப்பா, சுவாசிகா, விது, பிரேம் … இவர்களுடன் நான்கு மாதம் இணைந்து பணியாற்றி இருக்கிறேன்.
கார்த்திக் சுப்புராஜ் சிங்கிள் ஷாட்டாக எடுப்பார். இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்கினார்கள். ருக்மணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பூஜா ஹெக்டேவிற்கும் நன்றி. இந்த படத்தில் அவரே டப்பிங் பேசி இருக்கிறார்.
இந்தப் படத்தின் தொடக்கப்புள்ளி ராஜசேகரும் , கார்த்திகேயனும் தான். அந்தமானில் ஆயிரம் பேருடன் சென்று படப்பிடிப்பு நடத்தினோம். இது மறக்க முடியாது.
நம்முடைய படங்கள் வட மாநிலங்களில் திரையிடப்பட்டு, அங்குள்ளவர்களின் அன்பை சம்பாதித்திருக்கிறது என்றால் அதற்கு முக்கியமான காரணம் தயாரிப்பாளர் ஜெயந்தி லால் கட்டா தான். அவருக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
கார்த்திக்கும், ஸ்ரேயாசும் இணைந்து ஒரு காட்சியை மேஜிக் போல் உருவாக்குவார்கள். இவர்களின் திட்டமிடலால்தான் நான்கு மாதத்தில் ஒரு படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்ய முடிந்தது. நான் மணி சாரிடமும் பணியாற்றி இருக்கிறேன். ஹரி சாரிடமும் பணியாற்றி இருக்கிறேன். இவர்கள் இரண்டு பேரும் கலந்த கலவை தான் கார்த்திக் சுப்புராஜ். கார்த்திக் சுப்புராஜிடம் ஒரு பாசிட்டிவிட்டி எப்போதும் இருக்கும். இந்தப் படத்தில் பணியாற்றிய நடிகர், நடிகைகளுக்கும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒரு படம் உருவாக வேண்டும் என்றால் சகோதரத்துவம் இருக்க வேண்டும் என நினைப்பேன். இந்தத் திரைப்படத்தில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் அற்புதமான இசையை வழங்கி இருக்கிறார். எங்களுடைய 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் லோகோவிற்கும், ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்தின் லோகோவிற்கும் இசையமைத்தது சந்தோஷ் நாராயணன் தான். மனதை வருடுவது என்பது மிகவும் அரிதாகத்தான் நடைபெறும். இந்த திரைப்படத்தின் பாடல்கள் நீண்ட நாள் கழித்து ஆல்பமாக ஹிட் ஆகியிருக்கிறது. இதில் மனதை வருடும் பாடல்களும் இருக்கிறது.
சிறிது நாட்களுக்கு முன் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்களை சந்தித்திருப்பேன். அவர்களுடன் போட்டோ எடுத்துக் கொண்டேன். இது நான் பிறந்த நாளில் சொன்ன வாக்குறுதி. நீங்கள் அனைவரும் உங்களைக் கடந்து மற்றவர்களுக்காக… நீங்கள் செய்த ஒரு காரியத்திற்காக … உங்களுடன் இணைந்து போட்டோ எடுத்துக் கொண்டேன். அந்த சமயத்தில் என்னிடம், ‘நீங்கள் நல்லா இருக்கீங்கல்லே.. ‘என உரிமையுடன் நலம் விசாரித்திருக்கிறீர்கள். அந்த அன்பு மட்டும்தான் என்னை தொடர்ந்து இயங்க செய்து கொண்டிருக்கிறது. இங்கு வருகை தந்திருக்கும் நீங்கள் அனைவரும் 20 வயதில் இருக்கிறீர்கள். என் மீது நீங்கள் அளவு கடந்த அன்பை வைத்திருக்கிறீர்கள். நீங்கள் அனைவரும் இந்த நாளை…. இந்த தருணத்தை… கொண்டாட வேண்டும் என்று இங்கு வருகை தந்திருக்கிறீர்கள். இந்த அன்பு ஒன்றே போதும்.. நான் எப்போதும் நன்றாகவே இருப்பேன். இங்கிருக்கும் தம்பிகளுக்கும் , தங்கைகளுக்கும் சொல்லும் ஒரே விசயம் இதுதான். அப்பா இந்த மேடையில் சொன்னது தான்.
நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போது ஒரு சப்ஜெக்ட்டில் மட்டும் தான் பாசானேன். பன்னிரண்டாம் வகுப்பிலும் எல்லா சப்ஜெக்டிலும் பெயில் ஆனேன். பப்ளிக் எக்ஸாமில் மட்டும்தான் பாஸானேன். லைஃப் இஸ் பியூட்டிஃபுல். வாழ்க்கையை நம்புங்கள். வாழ்க்கையில் நிறைய அழகான விசயங்கள் நடக்கும். வாய்ப்புகள் வரும்போது அதை தவற விடாதீர்கள். வாழ்க்கையில் ஒரு முறை ..இரண்டு முறை அல்லது மூன்று முறை வாய்ப்பு கிடைக்கும். அதனைத் தவற விட்டு விடாதீர்கள். இந்த வயதில் எல்லோரும் ரிஸ்க் எடுக்கலாம். தவறில்லை. பேரார்வத்துடன் இருந்தால் மட்டும் போதாது. முழுமையான ஈடுபாட்டுடன் இருக்க வேண்டும். எல்லோருக்கும் அழகான வாழ்க்கை இருக்கிறது. அந்த வாழ்க்கையில் வெற்றி பெறலாம்.
இந்தப் படத்தில் கார்த்திக் சுப்புராஜ் சொன்னது போல் நிறைய லேயர்ஸ் இருக்கிறது. ஆனால் எனக்கு பிடித்த விசயம் ஒன்று இதில் இருக்கிறது. நானும், பூஜாவும் பேசிக் கொண்டிருக்கும்போது தம்மம் … தி பர்பஸ்… என்பதை பற்றி பேசுவோம். இந்த வேகமான வாழ்க்கையில் கார்த்திக் சுப்புராஜ் சொன்ன அந்த ரெண்டு விசயங்கள் என்னை கவர்ந்தது.
என்னுடைய பர்பஸ் ..அகரம் பவுண்டேஷன் தான். இதற்கும் உங்களுடைய ஒத்துழைப்பு இருக்கிறது. படிப்பில் ஆவரேஜ் ஸ்டூடண்ட்டான எனக்கும் ஒரு வாழ்க்கையை கொடுத்து அதன் மூலமாக எனக்கு ஒரு சக்தியை கொடுத்து ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட தம்பிகளும், தங்கைகளும் பட்டதாரி ஆகியிருக்கிறார்கள். இன்னும் நிறைய பேர் பட்டதாரி ஆவார்கள். இதற்கு அகரத்தில் பணியாற்றும் அனைவருக்கும் பங்கு இருக்கிறது. இதை நான் எப்போதும் பெருமிதமாக கருதுவேன்.
மே முதல் தேதியன்று வெளியாகும் கார்த்திக் சுப்புராஜின் ‘ரெட்ரோ’ படத்தை திரையரங்கத்திற்கு வருகை தந்து கொண்டாடுங்கள். ஐ லவ் யூ ஆல். உங்கள் அன்பிற்கு நன்றி” என்றார்.

