பவி கிரியேஷன்ஸ் சார்பில் தயாராகியுள்ள திரைப்படம் ‘பனிவிழும் இரவு.’ அருண் கார்த்தி கதாநாயகனாகவும், எனாக்ஷி கங்குலி கதாநாயகியாகவும் நடித்துள்ள இப்படத்தை செ.ரா. ராஜேஷ் இயக்கியுள்ளார். திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் வரும் அக்டோபர் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு கடந்த அக்டோபர் 28-ம் தேதி சென்னையில் நடைபெற்றது.
நிகழ்வில் கதாநாயகன் அருண் கார்த்தி பேசியதாவது..,
அனைவருக்கும் வணக்கம். ஒரு படத்தில் ஹீரோவாக நடித்து, அந்தப் படம் வெளியாகும் இந்தத் தருணத்தில் நான் என்ன உணர்கிறேன் என்பதைச் சொல்ல வார்த்தைகள் இல்லை. இந்த மேடையில் நான் பேசும்போது, “டான்” படத்தின் கிளைமாக்ஸில் வருவதுபோல, என் அப்பா எங்கோ ஒரு மூலையில் நின்று கொண்டு என்னைப் பெருமையுடனும் சந்தோஷத்துடனும் பார்த்துக் கொண்டிருப்பார் என்ற நம்பிக்கையோடு என் பேச்சைத் தொடங்குகிறேன். லவ் யூ பா, மிஸ் யூ பா! என்னுடைய பயணத்தைத் தொடங்கிய நாளிலிருந்து இன்று வரை எனக்குத் துணையாக இருக்கும் என் அம்மா, தம்பி, சித்தி, சித்தப்பா, நண்பர்கள் என அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. பனிவிழும் இரவு திரைப்படம் உருவான கதையைச் சொல்ல வேண்டும் என்றால், முதலில் எனக்கு ஜே.கே. பிரதர் அவர்களைத்தான் தெரியும். அவருடன் ஏற்கெனவே ஒரு பயணத்தில் இணைந்து பணியாற்றியிருக்கிறேன். அவர்தான் இயக்குநர் ராஜேஷ் பிரதர் ஒரு த்ரில்லர் கதையை வைத்திருப்பதாகச் சொன்னார். கதையைப் படித்தவுடன் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதன்பிறகு பல விவாதங்கள், சந்தேகங்களுக்கான விளக்கங்கள் என எல்லாம் முடிந்து இந்தப் படத்தைத் தொடங்கினோம்.
இந்தப் படத்தின் தயாரிப்பாளர், இசையமைப்பாளர் சதா முருகன் சார் பற்றிக் குறிப்பாகச் சொல்ல வேண்டும். நாங்கள் கொடைக்கானலில் படப்பிடிப்பு நடத்தினோம். சாதாரணமாக நகரத்தில் படப்பிடிப்பு நடத்துவதே சவாலான விஷயம். அப்படியிருக்கும்போது, கொடைக்கானலில் எத்தனையோ சிரமங்களை எதிர்பார்த்தோம். ஆனால், எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் சதா முருகன் சார் எங்களைச் சிரிக்க வைத்துக்கொண்டே இருப்பார். அவருடைய நகைச்சுவை உணர்வு, எல்லோரையும் உற்சாகமாக வைத்திருக்கும் விதம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அவருக்கு என் மனமார்ந்த நன்றி. அடுத்ததாக, ஜே.கே. பிரதர். ஒரு த்ரில்லர் படத்துக்கு ஒளிப்பதிவு மிகவும் முக்கியம். இயக்குநர் ராஜேஷ் சாரும் ஜே.கே. பிரதரும் இணைந்து எங்களைச் செல்லமாகப் படுத்திய பாடு இருக்கிறதே! கொடைக்கானல் பனிமூட்டத்தில் ஷாட் வேண்டும் என்று சொல்லி, எங்களை ஸ்வெட்டர், ஜெர்கின் எதுவும் இல்லாமல் எங்களுடைய காட்சிகளுக்கான உடைகளிலேயே நடிக்க வைப்பார்கள். அப்போது கஷ்டமாக இருந்தாலும், இறுதியாகப் படத்தின் காட்சிகளைப் பார்த்தபோது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. கேபிள் சங்கர் சாருக்கும் என் நன்றி. என்னுடைய திரைப்பயணத்தின் தொடக்கத்திலேயே ஒரு நொடி படத்தைப் பார்த்துவிட்டு, “தம்பி, உன்னுடைய குரலும் நடிப்பும் நன்றாக இருக்கிறது; நீ பெரிய ஆளாக வருவாய்” என்று ஊக்கமளித்தவர் அவர். இந்தப் படத்தையும் பார்த்து விட்டு சில திருத்தங்களைச் சொல்லி எங்களுக்கு வழிகாட்டினார். சிறிய படங்கள் நன்றாக இருந்தால் அவற்றுக்கு ஆதரவு கொடுப்பதில் அவர் எப்போதும் முனைப்பாக இருப்பார். எங்கள் இரண்டு எடிட்டர்களான எம். செல்வா பிரதர், புவனேஷ் பிரதர் இருவரும் சிறப்பாகப் பணியாற்றி படத்தை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு சென்றிருக்கிறார்கள். இயக்குநர் ராஜேஷ் பிரதர், கதையை முதலில் என்னிடம் சொன்னபோது எந்த அளவுக்கு உழைப்பேன் என்று நினைத்தாரோ, அதைவிட அதிகமாக மெனக்கெட்டு இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார். அவருக்கு என் மனமார்ந்த நன்றி.
படப்பிடிப்பு முடிந்த பிறகு, இந்தப் படத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு ஏ.ஆர்.கே. புரொடக்ஷன்ஸ் சார்பில் தனசேகரன் சார், சஞ்சய் பிரதர், ராமகிருஷ்ணன் சார் ஆகியோர் பெரிய அளவில் ஆதரவு கொடுத்தார்கள். போஸ்டர் வெளியீட்டிலிருந்து படத்தின் விளம்பரப் பணிகள் வரை தனசேகரன் சார் தொடர்ந்து உதவி செய்திருக்கிறார். அவர்களுக்கு என் நன்றி. என்னுடன் நடித்த எனாக்ஷி கங்குலி மிகவும் அருமையான சக நடிகை. நாங்கள் இருவரும் சில நேரங்களில் டாம் அண்ட் ஜெர்ரி மாதிரி சண்டை போட்டுக் கொள்வோம்; ஆனால், எங்களுக்குள் நல்ல நட்பு இருக்கிறது. அவருக்குத் தமிழ் தெரியாத நிலையிலும், வசனங்களை மனப்பாடம் செய்து, அந்தக் கதாபாத்திரத்துக்காகத் தொடர்ந்து பயிற்சி எடுத்து மிகவும் அர்ப்பணிப்புடன் நடித்தார். அவருடன் பணியாற்றியது மகிழ்ச்சியான அனுபவம். மூத்த கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பும் இந்தப் படத்தில் எனக்குக் கிடைத்தது. கஜராஜ் சார் மிகவும் எளிமையானவர். படப்பிடிப்பில் என்னை ஊக்கப்படுத்தி, பல விஷயங்களை அன்புடன் சொல்லிக் கொடுத்தார். கருப்பு நம்பியார் சார் இந்தப் படத்தில் ஒரு காவல் நிலையத்தையே உண்மையான இடம்போல மாற்றிவிட்டார். அவருடைய இயல்பான நடிப்பு நிச்சயமாகப் பேசப்படும். சேரன் ராஜ் சாரும் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். உறியடி சுருளி அண்ணன் சிறிய பட்ஜெட்டில் நல்ல கதையுடன் உருவாகும் படங்களுக்கு எப்போதும் ஊக்கம் கொடுப்பவர். சரவண சக்தி சார் ஏற்கெனவே இயக்குநராக இருப்பதால், அவருடன் நடித்தபோது ஒரு காட்சியை எப்படி மேம்படுத்தலாம் என்பதை நேரடியாகக் கற்றுக்கொள்ள முடிந்தது. சரண் அண்ணனும் எங்கள் படத்தைப் பார்த்துவிட்டு ஊக்கமளித்ததோடு, பத்திரிகைத் துறை சார்பாக எங்களால் முடிந்த அளவுக்கு ஆதரவு தருவதாகச் சொன்னார். இப்படி ஒவ்வொருவரும் இந்தப் படத்துக்கு அளித்த ஆதரவும் பங்களிப்பும் எனக்கு மிகவும் முக்கியமானது.
இறுதியாக, பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கு ஒரு விஷயம் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். ஒரு நொடி படத்தின் போது என்னைப் பற்றி நீங்கள் எழுதிய நல்ல விமர்சனங்களும், கொடுத்த ஆதரவும் எனக்குப் பல வாய்ப்புகளைப் பெற்றுத்தந்தன. அதற்காக உங்கள் அனைவருக்கும் நன்றி. அதேபோல, பனிவிழும் இரவு படத்தையும் நீங்கள் ஆதரிப்பீர்கள் என்று நம்புகிறேன். இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் ட்விஸ்ட்டை மட்டும் உங்கள் விமர்சனங்களில் வெளிப்படுத்தாமல் இருந்தால், அது படத்தைப் பார்க்க வரும் ரசிகர்களுக்கு இன்னும் சிறப்பான அனுபவத்தைக் கொடுக்கும். இந்தப் படம் அக்டோபர் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அனைவரும் திரையரங்குக்கு வந்து படத்தைப் பாருங்கள். இதைச் சிறிய படம் என்று சொன்னாலும், கதைக்குத் தேவையான அனைத்தையும் எங்களால் முடிந்த அளவுக்கு முழுமையாகச் செய்திருக்கிறோம். விளம்பரப் பணிகளிலும் எங்களால் இயன்ற அளவு முயற்சி செய்திருக்கிறோம். இந்தப் பத்திரிகையாளர் சந்திப்பும் படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஒரு முக்கியமான வாய்ப்பாக அமைய வேண்டும் என்று விரும்புகிறேன். இங்கு வந்திருக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. நன்றி, வணக்கம்!
இயக்குநர் செ.ரா. ராஜேஷ் பேசியதாவது..,
என்னை ஈன்றெடுத்த என் தாய், தந்தையையும், என்னைக் கலை உலகத்துக்கு அழைத்து வந்த கலைத்தாயையும் வணங்கி, முதலில் பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் என் பணிவான வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்தப் படத்தை உருவாக்குவதற்குப் பல சிரமங்களைச் சந்தித்திருக்கிறோம். ஒரு திரைப்படத்தை எடுப்பதைவிட, அதை வெளியிடுவதற்காக நாங்கள் பட்ட கஷ்டங்கள் இன்னும் அதிகம். குறிப்பாக, கடந்த 30 நாட்களாக நாங்கள் அனுபவித்த சிரமங்களை வார்த்தைகளால் சொல்ல முடியாது. அந்தச் சூழலில் எனக்குப் பக்கபலமாக இருந்த தயாரிப்பாளர் சதா முருகன் அண்ணனுக்கு முதலில் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். நான் சினிமாவுக்கு ஒரு நடிகனாக வர வேண்டும் என்ற ஆசையில்தான் வந்தேன். இதுவரை சுமார் 15 சிறிய படங்களில் நடித்திருக்கிறேன். அவற்றில் சில வெளியாகியுள்ளன; சில படங்கள் இன்னும் வெளியாகாமல் இருக்கின்றன. நான் முதன்முதலில் சதா முருகன் அண்ணனிடம் சொன்ன கதை பகையாறு. அந்தப் படம் தற்போது வெளியீட்டுக்காகக் காத்திருக்கிறது. அதற்கிடையில், பனிவிழும் இரவு படத்தை உருவாக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்தக் கதையைப் பற்றி நாங்கள் விவாதித்தபோது, இது எதிர்காலத்தில் நிஜமாகக்கூடிய ஒரு விஷயம் என்பதால், தாமதிக்காமல் படமாக்கலாம் என்று சதா முருகன் அண்ணன் ஊக்கமளித்தார். அவருக்கு மீண்டும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்தப் படம் முழுவதும் கொடைக்கானலில் படமாக்கப்பட்டது. பட்ஜெட் தொடர்பாகச் சில சிரமங்கள் ஏற்பட்டபோது, சதா முருகன் அண்ணன் எங்களுக்குப் பக்கபலமாக இருந்து மீண்டும் நம்பிக்கையுடன் பயணிக்க உதவினார். இந்தப் படத்தின் கதாநாயகன் அருண் கார்த்திக்கைப் பற்றிச் சொல்ல வேண்டும். ஒரு இயக்குநராகச் சொல்கிறேன், அவர் இந்தப் படத்தில் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். அதைவிட, படப்பிடிப்பின்போதும் அதற்குப் பிறகும் எனக்குக் கொடுத்த ஆதரவு மிகவும் பெரியது. உதவி இயக்குநர்கள் செய்ய வேண்டிய பல வேலைகளைக்கூட அவர் தானாக முன்வந்து செய்திருக்கிறார். “ப்ரோ, நான் பார்த்துக் கொள்கிறேன்; நீங்கள் கவலைப்படாதீர்கள்” என்று ஒவ்வொரு கட்டத்திலும் எனக்குத் துணையாக இருந்தார். அவருடைய அன்புக்கும் ஒத்துழைப்புக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்தை வெளியிடுவதற்குப் பெரும் ஆதரவு அளித்த ஏ.ஆர்.கே. புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த தனசேகரன் அண்ணன், சஞ்சய் பிரதர், ராமகிருஷ்ணன் சார் ஆகியோருக்கும் என் மனமார்ந்த நன்றி. நான் ஒரு இயக்குநராக அறிமுகமாகும் முதல் படத்தை அவர்கள் நம்பிக்கையுடன் முன்னெடுத்துச் செல்கிறார்கள். அதேபோல, கேபிள் சங்கர் சார் படத்தைப் பார்த்துவிட்டு, இது வெற்றி பெறும் என்று நம்பிக்கையளித்ததுடன், என்னென்ன செய்ய வேண்டும் என்றும் வழிகாட்டினார். அவருடைய ஆதரவு எனக்கு மிகப்பெரிய பலம்.
என்னுடைய எடிட்டர்களைப் பற்றியும் சொல்ல வேண்டும். எம்.எஸ். செல்வா அண்ணன் இந்தப் படத்தின் பணிகளில் முக்கியப் பங்காற்றினார். அவருடைய தனிப்பட்ட பணிச்சூழல் காரணமாகத் தொடர்ந்து பணியாற்ற முடியாத நிலையில், என்னுடைய முதல் படத்தின் எடிட்டரான புவனேஷை வைத்து இந்தப் படத்தை நிறைவு செய்தோம். இருவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். நான் சினிமாவுக்கு வந்தது ஒரு நடிகராக வேண்டும் என்ற ஆசையில் என்றாலும், பின்னர் தயாரிப்பாளராகவும் பயணிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. 2018ஆம் ஆண்டு, கொரோனா காலத்துக்கு முன்பாக, இரண்டாவது சுதந்திரம் என்ற படத்தின் மூலம் தயாரிப்புப் பயணத்தையும் தொடங்கினேன். சினிமா எனக்குப் பல பாடங்களைக் கற்றுக் கொடுத்திருக்கிறது. பல ஏமாற்றங்களைச் சந்தித்திருக்கிறேன். வாய்ப்புகளைத் தேடிச் சென்றபோது கிடைக்காத அனுபவங்கள், நாமே ஒரு வாய்ப்பை உருவாக்கும்போது பலருக்கு உதவ முடியும் என்ற புரிதலைக் கொடுத்தன. நாம் நேர்மையாகவும் உண்மையாகவும் உழைத்தால், தமிழ் சினிமா நிச்சயமாக நம்மை ஒரு நல்ல இடத்துக்குக் கொண்டு செல்லும் என்று நம்புகிறேன். இந்தப் படத்தில் கதாநாயகியாக எனாக்ஷி கங்குலியைத் தேர்வு செய்ததற்கும் ஒரு காரணம் இருக்கிறது. கதையைப் பற்றி விவாதித்தபோது, ஜெயக்குமார் தங்கவேல் அவர்கள் தான் கதாநாயகன், கதாநாயகி உள்ளிட்ட கலைஞர்களைத் தேர்வு செய்தார். ஆரம்பத்தில் எனக்கும் சில சந்தேகங்கள் இருந்தன. ஆனால், படப்பிடிப்பில் எனாக்ஷி அனைவருடனும் நன்றாக ஒத்துழைத்து, தனது கதாபாத்திரத்தைச் சிறப்பாகச் செய்தார். அவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த நிகழ்வுக்கு வந்திருக்கும் சிவசாமி சார் அவர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவர் எனது முந்தைய பணிகளைப் பார்த்து, எனக்கு அடுத்த வாய்ப்பையும் வழங்கியிருக்கிறார். அவருடைய தயாரிப்பில் நான் படம் இயக்கும்போது, என்னுடைய முழு உழைப்பையும் கொடுத்து மிகச் சிறப்பாகச் செய்வேன். சதா முருகன் அண்ணனுடன் எனக்கு இருக்கும் உறவு வெறும் திரைப்படப் பயணத்தோடு முடிந்து விடக்கூடியது அல்ல. அவருடன் தொடர்ந்து பயணிக்க வேண்டும் என்ற அன்பும் நம்பிக்கையும் எனக்கு இருக்கிறது. அவருக்கு நான் மூன்று படங்களைக் கொடுத்திருக்கிறேன்; இனியும் அவருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று விரும்புகிறேன். பனிவிழும் இரவு படத்தைப் பொறுத்தவரை, இது எங்களுடைய உழைப்பையும் நம்பிக்கையையும் வெளிப்படுத்தும் முயற்சி. படத்தை உருவாக்கியதிலிருந்து வெளியீட்டுக்குக் கொண்டுவரும் வரை எங்களுக்கு உதவிய ஒவ்வொருவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். குறிப்பாக, பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் இந்தப் படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க ஆதரவு தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். உங்கள் ஆதரவுதான் எங்களைப் போன்ற புதிய இயக்குநர்களுக்கு மிகப்பெரிய ஊக்கம். அனைவருக்கும் நன்றி, வணக்கம்!

