HomeCinemaபடம் ஆரம்பிக்கும்போதே கதாநாயகன், கதாநாயகியிடம் பட விழாக்களுக்கு வருவேன் என்று பிராமிஸ் வாங்க வேண்டும்! -பிராமிஸ்...

படம் ஆரம்பிக்கும்போதே கதாநாயகன், கதாநாயகியிடம் பட விழாக்களுக்கு வருவேன் என்று பிராமிஸ் வாங்க வேண்டும்! -பிராமிஸ் பட விழாவில் இயக்குநர் பேரரசு பேச்சு

Published on

சத்தியத்தின் சக்தியை மையமாக வைத்து ‘ப்ராமிஸ்’ என்ற திரைப்படம் உருவாகியிருக்கிறது. அருண்குமார் சேகரன் கதாநாயகனாக நடித்து இயக்கியுள்ளார். நாயகியாக நதியா நடித்துள்ளார். இந்த படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா 25.1.2025 அன்று சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.

நிகழ்வில் இயக்குநர் அருண்குமார் சேகரன் “எங்களுக்கு எந்தப் பின்புலமும் இல்லை,இந்தப் படத்தில் பெரிய நட்சத்திரங்களோ பிரமாதமான பட்ஜெட்டோ கிடையாது. எங்களைத் தூக்கி விடுவதற்கு ஆட்கள் இல்லை. அப்படி இருக்கும்போது இங்கே பேரரசு, கே ராஜன் போன்றவர்கள் தான் ஆதரவாக இருக்கிறார்கள்.

தமிழ்நாட்டு மக்களுக்குச் சினிமா மிகவும் பிடிக்கும்.நன்றாக இருந்தால் சினிமாவைக் கொண்டாடுவார்கள். நன்றாக இல்லை என்றால் விமர்சனமும் பலமாக செய்வார்கள். நான் ஊடகத்தில் 2015 – லிருந்து 21 வரை வேலை பார்த்தேன். பிறகு ஒரு பைலட் பிலிம் எடுத்தேன். நண்பர்கள் ஆதரவாக இருந்தனர். ‘வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்’ என்ற அந்த ஒரு மணி நேரப் படத்தை எடுத்து எங்கள் பகுதியில் எல்இடியில் திரையிட்டேன் .அதிலிருந்து நகர்ந்து இந்தப் படத்தின் தயாரிப்பாளரைச் சந்தித்து இந்த நிலைக்கு வந்து நிற்கிறேன்.

வாய்ப்பு கேட்டு எங்கே போனாலும் அனுபவம் வேண்டும், அனுபவம் வேண்டும் என்று கேட்டார்கள்.அந்த நிலையில் இவர் என்னை நம்பினார்.அதுமட்டுமல்ல இந்தப்படம் உருவாகும் போது என்னை ஒவ்வொரு கட்டத்திலும் கைப்பிடித்து அழைத்துச் சென்ற இந்தத் தயாரிப்பாளரை மறக்க முடியாது. இந்தப் படத்துக்கு உயிரோட்டமாக சரவண தீபனின் இசை இருக்கிறது. இந்தப் படத்தின் முதல் பாதிக்குத்தான் ட்ரெய்லர் வெளியிட்டுள்ளோம்.சுவாரஸ்யம் போய்விடும் என்று இரண்டாம் பாதியைப் பற்றி எதுவும் சொல்லவில்லை. படம் பார்ப்பவர்களுக்கு அது தெரியும்.

இதை விளம்பரப்படுத்துவதற்கு ஹெச். வினோத் சாரின் உதவியைக் கேட்டோம் .உதவுவதாகச் சொன்னார். அவருக்கு நன்றி.ஆனால் அவரோ ’ஜனநாயகன் ’ பிரச்சினையில் இருக்கும் போது நாங்கள் எப்படிக் கேட்பது?அதனால் அவரை வைத்து எதுவும் செய்ய முடியவில்லை.இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட இயக்குநர் சேரன் சார், மற்றும் நட்டி சாருக்கு நன்றி.

நாங்கள் அதிக ஆட்கள் இல்லாமல் 12 பேர் மட்டும் கொண்ட குழுவாக இருந்து பல வேலைகளையும் செய்தோம்.இந்தப் படத்தை எடுத்து முடித்து இருக்கிறோம். ஒரு கட்டத்தில் இந்தப் படம் நிறுத்தப்பட்டு விடுமோ என்கிற பயம் இருந்தது. அந்த கஷ்டமான காலத்தில் அப்போது கதாநாயகி நதியா கைகொடுத்து உதவினார் .அதை மறக்க முடியாது. இப்படிப் பலரும் எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்து இருக்கிறார்கள். அனைவருக்கும் நன்றி” என்றார்.

பாடலாசிரியர் பாலா பேசும்போது “இப்போது வருகிற படங்களில் நல்ல பாட்டு இல்லை என்கிற குறை , வருத்தம் இருக்கிறது. உண்மை என்னவென்றால் அதற்கான நல்ல பாடலாசிரியர்களும் இசை அமைப்பாளர்களும் இருக்கிறார்கள். ஆனால் அதற்கான களங்கள் குறைந்து வருகின்றன. நல்ல வாய்ப்பு கொடுத்தால் நல்ல பாடல்கள் வரும். திரைப்படங்களில் பாடல்களை ஸ்பீட் பிரேக்கர் என்று சொல்கிற போக்கு இருக்கிறது.பாடல்கள் ஸ்பீடு பிரேக்கர் அல்ல, அவை படங்களுக்கு மைலேஜ் என்றுதான் சொல்ல வேண்டும்.

‘குணா’ படத்தின் பாடல் காலம் கடந்தும் ரசிக்கப்படுகிறது.அது ஓர் அடையாளமாக இருக்கிறது ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படத்தில் இடம்பெற்ற பாடல் ஓர் அடையாளமாக மாறி இருக்கிறது.இப்படிப் பாடல் ஒரு படத்தைக் கொண்டு செல்வதற்கு உதவியாக இருக்கும்.இந்தப் படத்தில் பாடல் எழுதியது நல்ல அனுபவம்” என்றார்.

இயக்குநர் பேரரசு பேசும்போது “சத்தியம் என்ற வார்த்தைக்கு ஒரு மதிப்பு உள்ளது. ஒரு காலத்தில் சத்தியம் செய்து விட்டால் அதைப் பெரிதாக நினைப்பார்கள். அது இப்போது மாறி வருகிறது .சிலர் அப்படி நடந்து கொள்வதில்லை.அவர்களைப் பார்த்து அப்போது சொல்வார்கள் ’சத்தியம் அவனுக்குச் சர்க்கரைப் பொங்கல்’ என்பார்கள்.

நான் படிக்கும்போது புத்தகத்தின் மீது சத்தியம் பண்ணச் சொல்வார்கள் .தவறாகச் சத்தியம் செய்தால் படிப்பு வராது என்று பயந்தார்கள். கணவன் மனைவிக்குள் சண்டை வந்தால் குழந்தை மீது சத்தியம் பண்ணச் செல்வார்கள்.இன்று சத்தியத்துக்கு யாரும் பயப்படுவதில்லை .அதனால் தான் இந்த இந்த நாட்டில் இவ்வளவு வன்முறைகள், அநியாயங்கள் நடக்கின்றன. நாடு மோசமாகப் போய்க்கொண்டிருக்கிறது.

இந்தப் படத்தில் இயக்குநர்தான் கதாநாயகன். ஆனால் இங்கே கதாநாயகி வரவில்லை. இங்கே ஒரு படம் ஆரம்பிக்கும் போதே கதாநாயகன் ,கதாநாயகியிடம் பட விழாக்களுக்கு வருவேன் என்று படத்தின் மீது சத்தியம் வாங்க வேண்டும்.

நீண்ட நாள் கழித்துதான் இப்படிப் பார்க்கிறோம் இங்கே திரையிடப்பட்ட மூன்று பாடல்களுமே ஈர்ப்பாக உள்ளன. பாடல்களும் சரி, வரிகளும் சரி நன்றாக உள்ளன.சில இசை கொண்டாட வைக்கும் ; சில இசை இதயத்துக்கு நெருக்கமாக இருக்கும் .அப்படி இதயத்திற்குப் பாலமாக இருக்கும் படி இந்தப் பாடல்களும் இசையும் இருந்தது. இசையமைப்பாளர், பாடலாசிரியருக்கு வாழ்த்துக்கள்.

ட்ரெய்லர் பார்க்கும்போது கதை இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.இந்தப் படத்தில் கதாநாயகன் கதாநாயகி தலையில் அடிக்கடி அடித்துச் சத்தியம் செய்வதைப் பார்க்கும் போது ஏதோ கதையில் இருக்கிறது என்று தான் சொல்லத் தோன்றுகிறது.அதிக சத்தியம் செய்பவன் ஆபத்தானவன். படத்தில் செய்யும் சத்தியங்களைப் பார்க்கும்போது கதை விறுவிறுப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

’முந்தானை முடிச்சு’ படத்தில் பாக்யராஜ் மீது ஊர்வசி ஒரு பழி செல்லும்போது குழந்தையைத் தாண்டச் சொல்வார் .ஊர்வசியும் பொய் சத்தியம் செய்து தாண்டி விடுவார், அதற்குப் பிறகுதான் படத்தின் கதையே ஆரம்பிக்கும். அது போல் இதிலும் சத்தியத்திற்குப் பிறகு வரும் சத்திய சோதனை இருக்கும் என்று நினைக்கிறேன்.

சின்ன திரைப்படங்கள் என்றாலே நல்ல கதைதான் முக்கியம்.பெரிய நடிகர்களோ பெரிய செலவுகளோ இல்லாத பட்சத்தில்நல்ல கதையை நம்பித்தான் படம் எடுக்க வேண்டும். நல்ல கதை, வித்தியாசமான கதை இருந்தால் தான் அது சிறந்த படம்.கமர்சியல் படம் என்பது வேறு சிறந்த படம் என்பது வேறு.வணிகத்திற்குத் தேவையான கதை, வாழ்க்கைக்குத் தேவையான கதை என்று இரண்டு உண்டு.’ப்ராமிஸ்’ திரைப்படம் வாழ்க்கைக்குத் தேவையான கதை என்று நினைக்கிறேன்.

மக்கள் சின்ன படங்களைப் பார்க்க வருவதற்குப் பயப்படுகிறார்கள் அதற்குக் காரணம் சில சின்ன படங்கள்தான்.அனுபவம் இல்லாதவர்கள் படம் எடுக்கிறார்கள்.அது பார்க்கும் படியாக இருப்பதில்லை. ஆனால் இந்தப் படம் ஒரு நம்பிக்கையைத் தருகிறது.எந்தப் படம் வந்தாலும் இது ஓடும் என்கிற நம்பிக்கையைத் தருகிறது. அந்த அளவிற்குக் கதை உள்ளது.

இன்று ரீரிலீஸ் படங்களுக்கு உள்ள வரவேற்பு ,நேரடிப் படங்களுக்கு இல்லாமல் இருக்கிறது.’படையப்பா’ ரீரிலீஸ் வந்தது; ஓடியது. இப்போது ‘மங்காத்தா ‘ வந்திருக்கிறது.நாலு நாட்களுக்குத் திரையரங்குகள் நிரம்பிவிட்டன.அதனால் புதிய நேரடிப் படங்கள் திணறுகின்றன.இப்போது ‘திரௌபதி 2 ‘வந்திருக்கிறது. நல்ல விதமாகவே அதைப்பற்றிப் பேசுகிறார்கள் .ஆனால் வசூலில் திணறுகிறது.

இது பற்றி மோகன் ஜி தைரியமாகப் பேசுகிறார். ‘மங்காத்தா’ வை விட ‘திரௌபதி 2’ வசூல் குறைந்துவிட்டது என்கிறார்.அவரது தைரியத்தைப் பாராட்ட வேண்டும். ‘மங்காத்தா’ அளவிற்கு தன் படத்திற்கு வசூல் இல்லை என்று தைரியமாகச் சொல்கிறார் யாருக்கு அந்தத் தைரியம் வரும்?படம் வெளியான இரண்டாவது நாளே சக்சஸ் மீட் வைக்கிறார்கள்.

ஆனால் மோகன் ஜி மங்காத்தாவுடன் வந்தது தவறு, தன் படத்திற்கு வசூல் இல்லை என்று வெளிப்படையாகச் சொல்கிறார் .அவரது தைரியத்தைப் பாராட்ட வேண்டும். அதுவும் மூன்றாவது நாளில் பேட்டி கொடுக்கிறார் என்றால் அவரது தைரியத்தைப் பாராட்டாமல் இருக்க முடியாது.

பொய்யாக என் படம் வெற்றி, இரண்டாவது நாள் வசூல், மூன்றாம் நாள் வசூல் என்றெல்லாம் அவர் சொல்லவில்லை. ஓபன் ஸ்டேட்மெண்டாக வெளிப்படையாகக் கூறுகிறார். ஆனால் மக்களிடம் படம் நன்றாக இருக்கிறது என்று பேச்சு இருக்கிறது.ஒரு சின்ன பட்ஜெட்டில் படம் இவ்வளவு பிரமாதமாக இருக்கிறதே என்று பேசிக்கொள்கிறார்கள்.

ஏனென்றால் மக்கள் சின்ன படங்களுக்கு வருவதற்குத் தயங்குகிறார்கள்.
அதைவிட ஏற்கெனவே வெற்றியடைந்த ’மங்காத்தா’விற்குச் செல்கிறார்கள்.
சின்ன படத்தைப் பார்ப்பதற்குப் பயத்தைத் தமிழ் திரையுலகில் யார் கொடுத்தது

எப்போதும் கே. ராஜன் சார் தயாரிப்பாளர்கள் பற்றிப் பேசிக் கொண்டே இருப்பார்.
’எஜமான்’, ’மன்னன்’, ’தெறி’ போன்ற ரஜினி, விஜய் படங்கள் ரீ ரிலீஸுக்கு தயாராகிக் கொண்டிருக்கின்றன. சின்ன படங்கள் வரும்போது ரீரிலீஸ் வந்தால் எழும் பிரச்சினைகளுக்கு வழி காண வேண்டும். அதற்குரிய கட்டுப்பாடுகளைக் கொண்டு வர வேண்டும். ஏற்கெனவே ‘மங்காத்தா’ ஓடிய படம் தான். அது மறுபடியும் ஓடினாலும் ஓடவிட்டாலும் பிரச்சினை இல்லை.அது ஏற்கெனவே வெற்றிப் படம் தான். ’படையப்பா’ ஓடா விட்டால் ரஜினி மார்க்கெட் ஒன்றும் ஆகாது. ’மங்காத்தா’ ஓடாவிடாவிட்டால் அஜித்துக்கு ஒன்றும் பிரச்சினை இல்லை.ஆனால் நேரடிப் படங்களுக்கு வெளியீடு என்பது பெரிய வாழ்க்கைப் பிரச்சினை.இன்னும் ரஜினி படங்கள், விஜய் படங்கள் வெளியாகத் தயாராக இருக்கின்றன.ரீரிலீஸ் என்பது அவர்களுக்கு ஃபேண்டஸி .நேரடிப் படம் வெளியீடு என்பது இவர்களுக்கு வாழ்வாதாரம்.

சினிமாவில் இருந்து கொண்டு நாம் கவலைப்பட வேண்டிய இன்னொரு விஷயம் ’ஜனநாயகன்’.ஒரு படம் சென்சார் பிரச்சினையில் இத்தனை நாள் இழுத்துக் கொண்டிருப்பது என்பதைக் கேள்விப்பட்டிருக்கவே முடியாது. எல்லாவற்றையும் விட்டு விடுங்கள் அது ஒரு படம்.ஒரு படம் என்கிறபோது சென்சார் என்ன செய்ய வேண்டும்? வன்முறை என்றாலோ ஆபாசமாகஇருக்கிறது என்றாலோ அனுமதிக்க மாட்டார்கள். வெட்டச் சொல்வார்கள். அவை கூடுதலாக இருந்தால் ‘ஏ: சான்றிதழ் கொடுப்பார்கள்., கொடுத்து ரிலீஸ் பண்ணிக் கொள்ளுங்கள் என்பார்கள். இவ்வளவு தானே விஷயம்? கட் பண்ணச் சொன்னால் கட் பண்ண முடியாது என்று சொன்னால்தான் பிரச்சினை .இதில் என்ன பிரச்சினை? நீதிமன்றம் வரை சென்றிருக்கிறது.ஒரு திரைப்படம் சென்சருக்குப் போய் ஏன் இத்தனை நாள் வெளியிடப்படாமல் இருக்கிறது? மத்திய அரசுக்கும் சென்சாருக்கும் நான் ஒன்றே ஒன்று சொல்லிக் கொள்கிறேன் .

மத்திய அரசுக்கு ஆயிரம் கோடிக்கு மேலாக இங்கிருந்து சினிமா வரிப் பணம் உங்களுக்கு வருகிறது,இது டிக்கெட்டில் இருந்து மட்டுமே வருகிறது. நடிகர்கள்,நடிகைகள் 200 கோடியில் இருந்து 50 கோடி என்று வாங்குகிறார்கள். அதிலிருந்து சம்பளத்திலிருந்து இன்னொரு ஆயிரம் கோடிக்கு மேல் உங்களுக்கு வரிப்பணம் வருகிறது.இப்படி.அந்தப் பணத்திலிருந்து தான் சென்சார் போர்டுக்கு சம்பளம் கொடுக்கிறீர்கள்.அதைத் தயவு செய்து மனதில் வையுங்கள்.ஒரு திரைப்பட வெளியீடு ஒரு மாதம் தாண்டியும் முடிவுக்கு வரவில்லை என்றால் என்ன அர்த்தம்? மத்திய அரசும் தணிக்கைத் துறையும் யோசிக்க வேண்டும்.

இது ஏதோ ’ஜனநாயகன்’ படத்திற்கும் விஜய் படத்திற்கும் இருக்கின்ற பிரச்சினை தான் என்று மற்றவர்கள் சும்மா இருக்கக் கூடாது .நாளை நமக்கும் வரும். எனவே இதற்குக் குரல் கொடுக்க வேண்டும். ’ஜனநாயகன்’ விஷயம் நீதிமன்றம் சென்றிருக்கிறது .அங்கே சென்றால் வெளிப்படைத் தன்மை வேண்டும் அல்லவா? ’ஜனநாயகன்’ படத்தைத் தணிக்கை செய்து விரைவில் வெளிவர வேண்டும். காத்திருக்கிறோம் .நன்றி வணக்கம்” என்றார்.

 

 

 

Latest articles

Renacon Launches RENAFLEX Fibre Cement Boards, Advancing Sustainable Construction in India!

Rs 350 crore integrated green building materials facility at Naidupeta, Andra Pradesh built in...

கதைக்களம் மதுரை… முதன்மை கதாபாத்திரத்தில் சசிகுமார்… பிரைம் வீடியோவில் ஆகஸ்ட் 7 முதல் அசத்த வரும் ‘வதந்தி சீசன் 2.’

ஆகஸ்ட் 7 முதல், வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி பிரைம் வீடியோவில் தமிழுடன், தெலுங்கு மற்றும்...

நம்மாழ்வாரின் பிறந்த நாளை முன்னிட்டு இயற்கை விவசாயிகளுக்கு விருது வழங்கிய நடிகர் சௌந்தரராஜா!

நடிகரும் சமூக ஆர்வலருமான சௌந்தரராஜா, தனது "மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை" சார்பில், ஒவ்வொரு ஆண்டும் நம்மாழ்வாரின் பிறந்த நாளை...

ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறதா? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறதா? -புதிய கோணத்தில் நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட ‘பியார் பிரேமா கல்யாணம்’ புரமோ

“ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறது? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறது?” சந்தோஷமான திருமண வாழ்க்கைக்கான விதிகளை தலைகீழாக மாற்றும்...

More like this

Renacon Launches RENAFLEX Fibre Cement Boards, Advancing Sustainable Construction in India!

Rs 350 crore integrated green building materials facility at Naidupeta, Andra Pradesh built in...

கதைக்களம் மதுரை… முதன்மை கதாபாத்திரத்தில் சசிகுமார்… பிரைம் வீடியோவில் ஆகஸ்ட் 7 முதல் அசத்த வரும் ‘வதந்தி சீசன் 2.’

ஆகஸ்ட் 7 முதல், வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி பிரைம் வீடியோவில் தமிழுடன், தெலுங்கு மற்றும்...

நம்மாழ்வாரின் பிறந்த நாளை முன்னிட்டு இயற்கை விவசாயிகளுக்கு விருது வழங்கிய நடிகர் சௌந்தரராஜா!

நடிகரும் சமூக ஆர்வலருமான சௌந்தரராஜா, தனது "மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை" சார்பில், ஒவ்வொரு ஆண்டும் நம்மாழ்வாரின் பிறந்த நாளை...