இன்றைய நவீன கால காதலை மையமாக வைத்து உருவாகியுள்ள நீ Forever படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாசென்னையில் நடைபெற்றது.
நிகழ்வில் படத்தின் இயக்குநர் இயக்குநர் அசோக்குமார் கலைவாணி பேசியபோது, ”இங்கே வந்துள்ள பத்திரிகை, சமூக வலைத்தளம் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. நான் எப்போதும் நம்புவது ஒன்று தான் – ஒரு நல்ல விஷயம் செய்ய நினைத்தால், அது கண்டிப்பாக நடக்கும். இந்த படம் அதற்கான ஒரு உதாரணம்.
நான் சினிமாவுக்கு ஆசைப்பட்டு சின்ன சின்ன முயற்சிகள் செய்தேன். அதன் மூலம் புகழ் சார் தொடர்பு கிடைத்தது. அவர் மூலம் தான் இந்த வாய்பு கிடைத்தது. இந்த படத்திற்காக எங்கள் முழு குழுவும் மிகுந்த உழைப்புடன் வேலை செய்திருக்கிறோம். சுதர்ஷன் மிக நன்றாக நடித்துள்ளார். நல்ல நண்பர். அர்ச்சனா ஹீரோயின் என்பதை விட நல்ல கதாப்பாத்திரம் அவர் மிகச்சிறப்பாக செய்துள்ளார். YG மகேந்திரன் சார், நிழல்கள் ரவி சார் போன்ற ஆளுமைகளுடன் வேலை பார்த்தது, நிறைய கற்றுக்கொள்ள முடிந்தது. இசையமைப்பாளர் அஸ்வின் ஹேமந்த் இசை படத்திற்கு பெரிய பலம். ஒளிப்பதிவாளர் ராஜா பட்டாச்சார்ஜி மிகப்பெரிய உறுதுணையாக இருந்தார். எடிட்டிங், கொரியோகிராஃபி என அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் மிகச்சிறப்பான பங்களிப்பை தந்துள்ளனர்.
இப்படத்திற்காக புகழ் சார் என்னை முழுமையாக நம்பினார். அவர் நெட்பிளிக்ஸ் படத்தை வாங்கி விட்டார்கள் என்று சொன்ன போது மகிழ்ச்சியாக இருந்தது. படம் கண்டிப்பாக ரசிகர்களை ஏமாற்றாது. அனைவருக்கும் இப்படம் பிடிக்குமென நம்புகிறேன். இந்த முயற்சிக்கு நீங்கள் அனைவரும் ஆதரவு அளிப்பீர்கள் என்று நம்புகிறேன். நன்றி” எனறார்.

படத்தின் கதாநாயகன் சுதர்ஷன் கோவிந்த் பேசியபோது, ”எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது… எப்போதும் வெற்றி பெறாத ஒவ்வொருக்கும் ஒரு நாள் வாய்ப்பு வந்து சேரும். நாம் செய்யும் வேலையில் நேர்மையும் அர்ப்பணிப்பும் இருந்தால் அந்த வாய்ப்பு நிச்சயம் கிடைக்கும். பல வருடங்களாக காத்திருந்த இந்த வாய்ப்பு “நீ Forever” படத்தின் மூலம் எனக்கு கிடைத்தது. சினிமாவில் எல்லாரும் கஷ்டப்பட்டுத்தான் வருகிறோம்; நான் மட்டும் சிறப்பானவன் இல்லை, விடாமுயற்சி செய்த ஒரு சாதாரண மனிதன் தான். 2024 பிப்ரவரியில் இந்த பயணம் தொடங்கியது. வேலைக்காக ஹைதராபாத் சென்றிருந்த போது ஒரு அழைப்பு வந்தது. ஒரு தயாரிப்பாளர் புதிய முகத்தைக் தேடுகிறார் என்று கூறினார்கள். அந்த வாய்ப்பு எனக்கு கிடைத்தது. என் விவரத்தை இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்கும் காட்டிய கவுதம் அண்ணாவுக்கு நன்றி.
முதல் முறையாக தயாரிப்பாளர் நேரடியாக அழைத்த போது அது யாரோ கலாய்கிறார்கள் என்று நினைத்தேன். ஆனால் அது உண்மையான வாய்ப்பாக மாறியது. சென்னை வந்து கதை கேட்டேன், மிகவும் பிடித்தது. நான் செய்த ஒரு சிறிய வீடியோவிலிருந்தே என்னை தேர்வு செய்தார்கள். பின்னர் என்னை கதாபாத்திரத்திற்காக தயாரித்து, தொடர்ந்து ஊக்கப்படுத்தினர். ஒரு நாள் அந்த தோற்றத்துடன் வீட்டிற்கு சென்றபோது என் அம்மா சிரித்தார். ஆனால் இந்த குழுவே எனக்கு நம்பிக்கை கொடுத்தது. இந்த வாய்ப்பை அளித்த புகழ் சார் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் விடாமுயற்சி இருந்தால் ஒரு நாள் வாழ்க்கை நமக்காக சிரிக்கும். இப்படம் கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி” என்றார்.
படத்தின் கதாநாயகி அர்ச்சனா ரவி பேசியபோது, ”இந்த படம் எனக்கு ஒரு கனவு மாதிரி. இந்த கதையை முதன்முதலில் கேட்டபோது மிகவும் ஆச்சரியமாகவும், உற்சாகமாகவும் இருந்தது. பாடல்கள், காட்சிகள் எல்லாமே எனக்கு மிகவும் பிடித்தது. இயக்குநர் அசோக் எனக்கு ஒரு சிறந்த கதாபாத்திரம் கொடுத்து, என்னை இன்னும் நன்றாக நடிக்கத் தூண்டினார். படப்பிடிப்பில் நிறைய சுவாரஸ்யமான அனுபவங்கள் இருந்தது, குறிப்பாக சுதர்ஷனுடன் வேலை செய்தது மிகவும் மகிழ்ச்சி.
தயாரிப்பாளர் புகழ் சார் மற்றும் ஈடன் மேம் மிகவும் ஆதரவாக இருந்தார்கள். எங்களுக்கு தேவையான எல்லாவற்றையும் கொடுத்து, சுதந்திரமாக வேலை செய்ய வைத்தார்கள். இந்த படத்தில் உள்ள அனைத்து நடிகர்களுடனும் வேலை செய்தது ஒரு நல்ல அனுபவம். குறிப்பாக சினேகா எனக்கு ஒரு நல்ல நண்பராக இருந்தார். பல சவால்களை கடந்து உருவான இந்த படம், மார்ச் 27 அன்று வெளியாகிறது. அனைவரும் திரையரங்கில் வந்து பார்த்து ஆதரிப்பீர்கள் என்று நம்புகிறேன். நன்றி” என்றார்.

