ஊத்திக் குடுக்கிறவனுக்கு அது ஜாலி; ஏத்திக்கிட்டா உன் லைஃப் காலி.
புருசன் பொஞ்சாதிக்குள்ள ஆயிரம் இருக்கும்; அதை மூணாம் மனுசங்கிட்ட சொல்றது மனநிம்மதிக்கு ஆப்பு வைக்கும்.
பொண்டாட்டிய நீ கண்ணும் கருத்துமா பாத்துக்கலைன்னா, அவ கட்டுமஸ்தா யாரையாச்சும் சேர்த்துப்பா.
இப்படி இரண்டொரு கருத்துக்களை சொல்கிற ‘மூன்றாம் மனிதன்.’
சோனியா அகர்வாலின் கணவர் போலீஸ் அதிகாரி. அவர் காணாமல் போக, காவல்துறை தோண்டித் துருவி தேடியதில் அவர் துண்டு துண்டாகக் கிடைக்கிறார். அந்த கொலைக்கு என்ன காரணம், யார் காரணம் என்பதுதான் கதை.
கணவன் கண்மண் தெரியாமல் குடிப்பதால் நிம்மதியிழந்து, வேறொரு ஆணின் அரவணைப்புக்கு அடிமையாகி அல்லல்படுகிற கனமான பாத்திரத்தை அதற்கேற்ற உணர்வாலும் அளவான அழுகையாலும் பிரமாதப் படுத்தியிருக்கிறார் பிரணா.
படத்தை இயக்கி, பிரதான பாத்திரத்தில் நடித்திருக்கிற ராம்தேவ் அதிகப்படியான குடியால் அன்பான மனைவியின் வெறுப்பைச் சம்பாதித்து, கொலைப் பழியில் சிக்கும்போது பரிதாபத்தைச் சம்பாதிக்கிறார். அப்பாவித் தனத்தோடு நக்கலும் நையாண்டியுமாக வெளிப்படும் அவரது டயலாக் டெலிவரி ரசிக்க வைக்கிறது.
கணவனை வேலைக்காரியோடு சேர்த்து சந்தேகப்பட்டு, அதனால் வேறொரு அயோக்கியனின் மிரட்டலுக்கு ஆளாகி துடிப்பான நடிப்பால் கவர்கிறார் சோனியா அகர்வால்.
காவல்துறை உயரதிகாரியாக இயக்குநர் பாக்யராஜ். சந்தேக வளையத்துக்குள் வந்தவர்களை சூடாகி சுளுக்கெடுக்காமல், கனிவாய் பேசி உண்மையைக் கறக்கிற விதம் கச்சிதம்.
வேலைக்காரப் பெண்ணுக்கு பிராக்கெட் போட்டு ஆசையைத் தீர்த்துக் கொள்கிற ரிஷிகாந்த், உதவிக்கு வந்த சோனியா அகர்வாலின் அந்தரங்கத்தை ரசித்து வெறியேறுகிற ஸ்ரீநாத் என மற்ற பாத்திரங்களில் வருகிறவர்களின் நடிப்பில் குறையில்லை.
தங்களுடைய அம்மாக்களின் கள்ளத் தொடர்பில் கசப்பான அனுபவத்தை சம்பாதித்து, சேரக்கூடாத இடம் சேர்ந்து குற்றவாளியாகிற அந்த இரண்டு இளைஞர்களும் பாத்திரத்துக்கு பொருத்தமாய் நடித்திருக்க, அவர்கள் மூலம் சமூகத்துக்கு விடுக்கப்பட்டிருக்கும் செய்தி பெரிது!
பாடல்களை ரசிக்க முடிகிறது. ஒளிப்பதிவு நேர்த்தி.
அடிக்கடி கேள்விப்படுகிற, கள்ளத் தொடர்பால் சமூகத்தில் நடக்கிற கொலைகளை மையப்படுத்திய சாதாரண கதைதான். திரைக்கதையில் திருப்பங்களும், கிரைம் திரில்லருக்கான விறுவிறுப்பும் சேர்த்திருப்பது பலம்.
குறைகள் இல்லாமலில்லை. அதையெல்லாம் தள்ளிவைத்துப் பார்த்தால், நாலாந்தர மனிதர்களை அடையாளம் காட்டியிருப்பதற்காக மூன்றாம் மனிதனை பாராட்டலாம்.