காதலும் காதலர்களைப் பிரிக்கிற சாதிவெறியும் என சமூக அவலத்தை மையப்படுத்தி மீண்டும் ஒரு படம்.
நாயகன் ஹாக்கி பிளேயர். அவரைவிட சாதியில் பல மடங்கு உயர்ந்த குடும்பத்துப் பெண்ணும் காதலிக்கிறார்கள். பெண் வீட்டார் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்க, வேறு வழியில்லாமல் காதலனைப் பிரிந்து, வீட்டில் பார்த்த மாப்பிள்ளைக்கு மனைவியாகிறார். கொஞ்ச காலம் கழித்து அந்த பெண் பழைய காதலனை தேடிப் போய் சந்திக்கிறார்.
சந்திப்புக்கு பின் உற்சாகமூட்டும் நிகழ்வுகளும் கிளைமாக்ஸில் கண்கலங்க வைக்கும் சம்பவங்களும் நடக்கின்றன… அந்த கிளைமாக்ஸ் மூலம், படம் சாதியற்ற சமூகம் அமையவேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.
படத்தை இயக்கி, எடிட்டிங் பணியையும் கவனித்திருக்கிற பரத் ஜெ எஸ் கதாநாயகனாக நடித்திருக்கிறார். அவரது இயல்பான தோற்றம் கேரக்டருக்கு பொருத்தமாக இருக்கிறது. மகிழ்ச்சி, மன உளைச்சல், வேதனை, உற்சாகம், துக்கம் என எல்லாவிதமான உணர்வுகளையும் வெளிப்படுத்த வேண்டும். பரவாயில்லை ரகத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார்.
பரத்தின் காதலியாக காயத்ரி ஷான். பளபளப்பும் தளதளப்பமாக இருக்கிறார். அவருடையது ஹீரோவை காதலிக்கிற, அவருடன் டூயட் பாடலில் ஆடுகிற வழக்கமான ரோல் இல்லை. அதையும் தாண்டி, இன்னொருவருக்கு மனைவியான பின்னும் பழைய காதலனை சந்திக்கிற, அவனுடன் வாழ்கிற, வீட்டாரின் கொலை முயற்சியில் சிக்குகிற, கதையை தாங்கிப் பிடிக்கிற மிகப் பெரிய பொறுப்பு. அதை தன்னால் எந்தளவு முடியுமோ அந்தளவு சிறப்பாக செய்திருக்கிறார். கதையாழமுள்ள படங்களில் நடிப்பதற்கான தகுதிகள் தனக்கிருக்கிறது என்பதை சொல்லாமல் சொல்கிறார்.
மற்ற கேரக்டர்களில் வருகிற நந்தன், ஷிவாங்கி, ஸ்ரீதர், குட்டி, ரவி ஏழுமலை உள்ளிட்டோர் புதுமுகங்களாக இருந்தாலும் நடிப்பில் அது தெரியவில்லை.
பரபரப்பான கதையின் போக்கிற்கு பலம் சேர்க்க விறுவிறுப்பான பின்னணி இசையைத் தந்திருக்கிறார் ஜோயல் ஜோன்ஸ். எளிமையான தரமான ஒளிப்பதிவால் தன் பங்கிற்கு காட்சிகளை மெருகேற்றியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் விக்னேஷ் மலைச்சாமி.
இந்த மாதிரியான படங்களை தொடர்ந்து பார்ப்பது ரசிகர்களுக்கு அலுப்பு சலிப்பு தரவே செய்யும். சமூகத்தில் சாதிவெறி ஒழிந்தால் இந்த மாதிரியான படங்களும் வராமல் போகும். அதுவரை பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும். சாதிப்பாகுபாடு இல்லாத சமூகம் அமைய வேண்டும் என்கிற படத்தின் நோக்கத்தை பாராட்டத்தான் வேண்டும்!
Rating 3 / 5 

