தீனா நம்மூர் இளைஞன். அவனை அவனது முறைப் பெண் விரும்புகிறாள். அந்த விவரம் அவனுக்கு தெரியாத நிலையில், வெளிநாட்டிலிருந்து நம்மூரை சுற்றிப்பார்க்க வந்த ஹெலன் என்ற பெண்ணுடன் நட்பாகப் பழகுகிறான்.
பழக்க வழக்கம் மனதுக்கு பிடித்துப் போக ஹெலன் அவனிடம் மனதைப் பறிகொடுக்கிறாள். அவளது காதலை அவனும் ஏற்கிறான்.
அதன்பிறகே முறைப் பெண் தன்னை விரும்புவது அவனுக்கு தெரிகிறது. அவனுக்கு தெரிந்த விஷயம் ஹெலனுக்கும் தெரிகிறது.
இப்படி சூடுபிடிக்கும் கதையில், முறைப் பெண் தன் மாமனை விட்டுத்தர மாட்டேன் என பிரச்சனையைக் கிளப்ப, தீனாவும் ஹெலனும் என்ன முடிவெடுக்கிறார்கள் என்பது மீதிக் கதை…
தீனாவாக லிங்கேஷ். ஒரு பக்கம் மீனவனாக லோக்கல் பிரச்சனைகளை இழுத்துப்போட்டுக் கொண்டு டெரராக திரிபவர், ஹெலனுக்கு ஊரைச் சுற்றிக் காட்டும் கைடாக மாறியபின் ஸ்மார்ட் லுக்கிற்கு தாவியிருக்கிறார். முறைப் பெண்ணின் காதலை ஏற்க முடியாத நிலையில் வெளிப்படுத்தும் தவிப்பில் இன்னும் கொஞ்சம் நெகிழ வைத்திருக்கலாம்.
முகபாவங்களில் கதையோட்டத்திற்கு தேவையான உணர்வுகளை கச்சிதமாக பிரதிபலித்திருக்கிறார் ஹெலனாக வருகிற லண்டனைச் சேர்ந்த லியா.
முறை மாமன் மீதான காதல் உணர்வு, அதை அவன் ஏற்காதபோது மனக் கலக்கம், மாமனை காதலிக்கும் பெண்ணிடம் தன் நிலைமையை விளக்கும்போது பரிதாபம் கலந்த கோபம் என லிங்கேஷின் முறைப் பெண்ணாக வருகிற அழகும் இளமையும் நிரம்பிய திவ்யாவின் நடிப்பில் ஆழமிருக்கிறது.
கஞ்சா கருப்பு மாறனோடு சேர்ந்து கலகலப்பூட்டுகிறார்.
மதுசூதன், காட்பாடி ராஜன், தர்சன் என மற்றவர்களின் பங்களிப்பு நேர்த்தி.
சாண்டி சாண்டல்லோவின் இசையில் பாடல்கள் இதமாகவும் இருக்கின்றன; குஷி மூடுக்கும் கொண்டு செல்கின்றன. பின்னணி இசையும் டோனிசென் & வெங்கடேஷ் கூட்டணியின் ஒளிப்பதிவும் கதைக்கேற்ற கச்சிதம்.
மீனவ சமூகத்தில் ஆளுமையாக இருக்கிறவர்கள், அவர்களுக்குள் இருக்கிற பகை என நீளும் காட்சிகளில் விறுவிறுப்பும், காதலும் காதல் சார்ந்த பிரச்சனைகளில் பரபரப்பும் குறையாதபடி திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் ஜெயலெஷ்மி.
Rating 3 /5