எமலோகத்துக்கும் பூலோகத்துக்கும் பாலம் போட்ட கதையில் உருவாகி சிரித்து ரசிக்க வைக்கும் படம்.
கதாநாயகன் கதாநாயகிக்காக என்னவெல்லாம் செய்வான்? அவள் மனதுக்கு பிடித்த மாதிரி நடந்து கொள்வான். அவளுக்கு பிடித்த உடைகளை வாங்கிக் கொடுப்பான். பிறந்தநாளில் பரிசுப் பொருள் வழங்கி குஷிப்படுத்துவான். டூயட் பாடுவான். சந்தர்ப்பம் பார்த்து கட்டிப் பிடிப்பான், முத்தமிடுவான். அவள் அனுமதித்தால் அத்து மீறுவான். இதெல்லாம்தானே உலக வழக்கம்…
ஆனால், இந்த படத்தின் கதாநாயகன் கதாநாயகிக்காக மாப்பிள்ளை தேடி அலைகிறான். அதுதான் இந்த படத்தின் வித்தியாசம். அவன் அவளுக்காக மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் செய்து வைக்க வேண்டும் என்பது எமனுடைய கட்டளை.
எமனே கட்டளையிடுகிற அளவுக்கு அவனது கடந்த காலத்தில் என்ன நடந்தது என்பது சுருக்கமாகவும், எமன் அவனை அழைத்து கட்டளையிட்ட பின் என்னவெல்லாம் நடக்கிறது என்பது படு சுவாரஸ்யமாகவும் நகர்கிறது…
தனது திருட்டுத் தொழிலால் ஒரு பெண்ணுக்கு நடக்கவிருந்த கல்யாணம் நின்று போய்விட, அதற்கு பரிகாரமாக அந்த பெண்ணுக்கு வேறு மாப்பிள்ளை பார்க்கும் பொறுப்பை ஏற்கும் இளைஞனாக அன்பு மயில்சாமி. அவர் பார்க்கும் மாப்பிள்ளைகள் பிரச்சனைக்குரியவர்களாக மாறிக் கொண்டிருக்க, அவளை அவரே கல்யாணம் செய்து கொள்ளலாம் என்றால் அது எமன் கட்டளைப்படி குற்றமாகிவிடும், தலை வெடித்து விடும். அப்படியொரு சிக்கலில் அவர் மாட்டிக் கொண்டு தவிக்கிற காட்சிகள் நகைச்சுவையாக அமைக்கப்பட்டிருக்க அதற்கேற்ற நடிப்பை நேர்த்தியாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
நாயகி சந்திரிகாவின் அழகும் வெகுளித்தனமும் பாடலில் காட்டும் அளவான கவர்ச்சியும் அசத்துகிறது.
எமனாக நெல்லை சிவா அடிக்கடி வந்து கலகலப்பூட்டுகிறார்.
தன்னை பிடிக்கவில்லை என்று சொல்லும் பெண்ணை வலுக்கட்டாயமாக கல்யாணம் செய்துகொள்ள துடிக்கும் கராத்தே ராஜாவின் வில்லத்தனம் மிதமாக இருக்கிறது.
நாயகனுக்கு நண்பனாக வருகிற அர்ஜுனன், நாயகிக்கு அப்பாவாக டி பி கஜேந்திரன், மற்ற பாத்திரங்களில் ஆர் சுந்தர்ராஜன், டெல்லி கணேஷ், பாண்டு, ஷகிலா, பவர் ஸ்டார் என ஏகப்பட்ட பேர் வந்து போகிறார்கள்.
என் சசிகுமார் இசையில் பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. கார்த்திக் ராஜாவின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்துள்ளது.
இறந்துபோன ஒருவன் எமனால் பூமிக்கு திருப்பி அனுப்பப்படுவது, அவன் ஒரு பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்ப்பது என கடந்தோடும் காட்சிகள் காமெடி பட்டாசாக சிதறிக் கொண்டிருக்க,
எமன் கட்டளைப் படி அவனால் அந்த பெண்ணுக்கு கல்யாணம் செய்து வைக்க முடியுமா முடியாதா என்ற எதிர்பார்ப்பை திரைக்கதையில் உருவாக்கி ரசிகர்களை இருக்கையில் கட்டிப்போடுகிறார் இயக்குநர் எஸ் ராஜசேகர்.
எமன் கட்டளை _ எந்த வயதினரும் பார்க்கலாம்; படம் முழுக்க சிரிக்கலாம்!

