HomeGeneral‘டிரோன்ஸ்’ படக்குழுவினர் ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தைக் காண ஆவலுடன் இருக்கிறோம்! -டிரோன்ஸ் பட விழாவில் நடிகை...

‘டிரோன்ஸ்’ படக்குழுவினர் ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தைக் காண ஆவலுடன் இருக்கிறோம்! -டிரோன்ஸ் பட விழாவில் நடிகை சித்தி இத்னானி

Published on

சித்தி இத்னானி, அஞ்சலி நாயர், தேவதர்ஷினி, டிராவிட் செல்வம், குரேஷி, சினிமாவாலா சதீஷ், சசி செல்வராஜ், ஆர்.ஜே. தீபக் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘டிரோன்ஸ்.’
ஹாரர், ஃபேண்டஸி, சயின்ஸ் ஃபிக்ஷன் மற்றும் நகைச்சுவை அம்சங்களை உள்ளடக்கிய வித்தியாசமான படைப்பாக உருவாகியுள்ள இந்த படம் வரும் அக்டோபர் 16-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. முன்னதாக படக்குழுவினர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.

நிகழ்வில் நடிகை சித்தி இத்னானி பேசியதாவது..,

“பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். உங்கள் அனைவரையும் இன்று சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. எங்கள் படத்தைப் பற்றிப் பேசுவதற்கு முன்பு, உங்கள் மனதில் ஒரு கேள்வி இருக்கும் என்று நினைக்கிறேன். இந்த ஆண்டின் மிகப்பெரிய வெளியீடுகளில் ஒன்றாக எதிர்பார்க்கப்படும் ரஜினிகாந்த் சாரின் படத்துடன், எங்களுடைய சிறிய படத்தை ஏன் வெளியிடுகிறார்கள் என்பதுதான் அந்தக் கேள்வி. ஆனால், உண்மையில் தலைவரின் படத்துடன் எங்களுடைய படமும் வெளியாவது எங்களுக்குப் பெருமையும் கௌரவமும் அளிக்கிறது. அவருடைய படத்திற்கு முன்னால் எங்களுடைய படம் ஒரு சிறிய புள்ளியாக இருந்தாலும், அதுவே எங்களுக்கு மிகப்பெரிய விஷயம். தமிழ் சினிமாவைப் பற்றிப் பெருமையாகப் பேசும்போதெல்லாம் என் நினைவுக்கு முதலில் வருபவர் தலைவர் ரஜினிகாந்த். அவருடைய எளிமையும் பணிவும் தமிழ்நாட்டைத் தாண்டி, நாட்டின் எல்லைகளைக் கடந்து உலகம் முழுவதும் உள்ள மக்களைக் கவர்ந்திருக்கிறது. ‘டிரோன்ஸ்’ படக்குழுவினர் அனைவரும் தலைவரின் ‘ஜெயிலர்’ திரைப்படத்தைக் காணவும், அவருடைய வெற்றியைக் கொண்டாடவும் ஆவலுடன் இருக்கிறோம்.
அதேநேரத்தில், இது நவராத்திரி உள்ளிட்ட பண்டிகைகள் நிறைந்த காலம். குடும்பத்துடன் அமர்ந்து ரசிக்கக்கூடிய சிறிய, சுவாரஸ்யமான பொழுதுபோக்குப் படமாக ‘டிரோன்ஸ்’ இருக்கும் என்பதை உறுதியாகச் சொல்வேன். எங்கள் தயாரிப்பாளர் ஜி. எம். மோர்கன் சார், ஒன்று முதல் நான்கு படங்கள் வரை மட்டுமே பணியாற்றியுள்ள எங்களைப் போன்ற புதிய கலைஞர்களை நம்பி இவ்வளவு பெரிய முதலீட்டைச் செய்திருக்கிறார். இந்த நவராத்திரியில் நான் கடவுளிடம் வேண்டிக்கொண்ட ஒரே விஷயம், அவர் முதலீடு செய்த பணத்தைத் திரும்பப் பெறுவதோடு லாபமும் சம்பாதிக்க வேண்டும் என்பதுதான். எங்களைப் போன்ற சிறிய படங்களுக்கு உங்கள் ஆதரவு மிகவும் அவசியம். பெரிய நட்சத்திரங்களின் படங்கள் வெற்றி பெறுவது வழக்கமான ஒன்றுதான். ஆனால், இயக்குநர் ராகவ் போன்ற படைப்பாளிகளுக்கும், ஜி. எம். மோர்கன் போன்ற தயாரிப்பாளர்களுக்கும் வாய்ப்பளித்து, அவர்கள் கடினமாக உழைத்துச் சம்பாதித்த பணத்தைப் புதிய திரைப்படங்களில் முதலீடு செய்ய ஊக்கமளிப்பதில் பத்திரிகையாளர்களுக்கும் ஊடக நண்பர்களுக்கும் முக்கியப் பங்கு இருக்கிறது.
இந்தப் படத்தில் என்னுடன் பணியாற்றிய தீபக், சதீஷ் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. சினிமாவாலா சதீஷுடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சியாக இருந்தது. அஞ்சலியுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. இரண்டு நடிகைகள் நல்ல நண்பர்களாக இருக்க முடியும் என்பதற்கும் எங்கள் நட்பு ஓர் உதாரணம். ராகவ் மிகவும் திறமையான இயக்குநர் என்பது அனைவருக்கும் தெரியும். அவர் சூர்யா சாரின் படத்திற்கும் எழுதி வருகிறார். குரேஷி விஜய் தொலைக்காட்சியில் சிறப்பான பணிகளைச் செய்திருக்கிறார்; தற்போது பல படங்களிலும் நடித்து வருகிறார். நகுல், சதீஷ் உள்ளிட்ட பலரும் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ளனர். சமூக வலைதளங்களில் பிரபலமானவர்களும் இந்தப் படத்தில் இணைந்திருப்பது சிறப்பு. இங்கே இருக்கும் ஆர்.ஜே. தீபக்கிற்கு இரண்டு மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பாளர்கள் இருக்கிறார்கள். இது போன்ற உண்மையான, இயல்பான மனிதர்களை ரசிகர்கள் பார்க்க விரும்புகிறார்கள் என்பதையே இது காட்டுகிறது.
இறுதியாக, இங்கு வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. எங்கள் ‘டிரோன்ஸ்’ திரைப்படத்திற்கு நீங்கள் அனைவரும் ஆதரவு கொடுக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் ஆதரவு எங்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியைத் தரும். மிக்க நன்றி.”
நடிகை அஞ்சலி நாயர் பேசியதாவது..,
உங்கள் அனைவருக்கும் வணக்கம். இதுவரை என்னுடைய படங்களுக்கு நீங்கள் நிறைய ஆதரவு கொடுத்திருக்கிறீர்கள். இந்தப் படத்திற்கும் அதேபோல் தொடர்ந்து ஆதரவு கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன். முதலில் என்னுடன் நடித்த சக கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. அனைவரும் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். நாங்கள் அனைவரும் ஏற்கெனவே ஒருவரையொருவர் அறிந்திருந்தாலும், இணைந்து பணியாற்றுவது இதுதான் முதல் முறை. எங்கள் தயாரிப்பாளர் ஜி. எம். மோர்கன், இயக்குநர் ராகவ் மிர்தாத் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. சிறிய குழுவாக இருந்தாலும், மிகவும் வலிமையான குழுவாக இணைந்து பணியாற்றியிருக்கிறோம்.
இந்தப் படத்தின் மூலம் புதிதாக ஒரு முயற்சியை மேற்கொண்டிருக்கிறோம். ‘டிரோன்ஸ்’ திரைப்படம் ஃபேண்டஸி, ஹாரர் மற்றும் சர்வைவல் அம்சங்கள் கொண்ட படமாக இருக்கும். இதில் பல விசித்திரமான சம்பவங்கள் நடைபெறும். அதேசமயம், ரசிகர்களை மகிழ்விக்கும் பல பொழுதுபோக்கு அம்சங்களும் இடம்பெற்றுள்ளன. குடும்பத்துடன் அனைவரும் அமர்ந்து ரசிக்கக்கூடிய முழுமையான பொழுதுபோக்குத் திரைப்படமாக இது இருக்கும்.
பொழுதுபோக்கு அம்சங்களுடன் மட்டுமல்லாமல், நிற அரசியல், நிறவெறி மற்றும் காதல் சார்ந்த சில தீவிரமான, சர்ச்சைக்குரிய விஷயங்களையும் இப்படம் தொட்டுச் செல்கிறது. இத்தகைய கருத்துகளைப் பேசினாலும், அவற்றைச் சுவாரஸ்யமான பொழுதுபோக்கு பாணியில் ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க முயற்சி செய்திருக்கிறோம்.
வரும் அக்டோபர் 16-ம் தேதி வெளியாகும் இப்படத்தை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் திரையரங்குகளில் சென்று பாருங்கள். படம் பிடித்திருந்தால் மற்றவர்களிடமும் பகிர்ந்து ஆதரவு கொடுங்கள். இப்படிப்பட்ட சிறிய படங்கள் ரசிகர்களின் விமர்சனங்கள், கருத்துகள் மற்றும் வாய்மொழி வரவேற்பின் மூலமாகத்தான் அதிகமான மக்களைச் சென்றடைகின்றன. இதுபோன்ற புதிய கருத்துகளைக் கொண்ட, வழக்கமான சினிமா பாணியை உடைக்கும் திரைப்படங்கள் தொடர்ந்து தமிழில் வெளியாக வேண்டும் என்று விரும்புகிறேன். மிக்க நன்றி!”
நடிகர் டிராவிட் செல்வம் பேசியதாவது..,
“இங்கு வந்திருக்கும் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். எல்லோரும் நன்றாக இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். எனக்குச் சற்று பதற்றமாக இருக்கிறது. இந்தப் படத்தைப் பற்றிச் சொல்ல வேண்டும் என்றால், ‘டியூட்’ படத்தை முடித்திருந்தபோது இந்தக் கதையைக் கேட்டேன். என்னை அழைத்து, இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்றும், இரண்டு கதாநாயகிகள் இருப்பதாகவும் சொன்னார்கள். அதற்கு நான், ‘இரண்டு கதாநாயகிகள் இருக்கிறார்கள் என்றால் என்னை ஏன் அழைக்கிறீர்கள்? நான் ஏற்கெனவே பரிதாபங்கள் நிகழ்ச்சியில் இதுபோன்ற விஷயங்களைச் செய்துகொண்டிருக்கிறேனே’ என்று கேட்டேன். அதற்கு, ‘எவ்வளவு நாள்தான் இப்படியே நடிப்பீர்கள்? நீங்களும் இதுபோன்ற கதாபாத்திரங்களில் நடித்தால் நன்றாக இருக்கும்’ என்று கூறினார்கள். அதனால் இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன்.
ஆரம்பத்திலிருந்தே ஒரு குறிப்பிட்ட ஜானருக்குள் அடக்கிவிட முடியாத படமாக ‘டிரோன்ஸ்’ உருவாகியிருக்கிறது. இதில் ஹாரர், நகைச்சுவை எனப் பல அம்சங்கள் உள்ளன. குழந்தைகள் ரசிக்கக்கூடிய மோகினிப் பேய், மோகினிப் பாட்டி, தேவதை எனப் பல்வேறு விதமான வித்தியாசமான கதாபாத்திரங்கள் இடம்பெற்றுள்ளன. ஒரு சிறிய படத்தில் அரசியல் கருத்தையும் அதே நேரத்தில் பொழுதுபோக்கு அம்சங்களையும் இணைத்துக் கொடுப்பதற்கு தயாரிப்பாளருக்குத் தைரியம் வேண்டும். அந்த வகையில், இப்படத்தைத் தயாரிக்க முன்வந்த தயாரிப்பாளர் ஜி. எம். மோர்கன் சாருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். எல்லா தயாரிப்பாளர்களும் இதுபோன்ற வித்தியாசமான கதைகளில் முதலீடு செய்ய முன்வர மாட்டார்கள். ஆனால், தமிழ் சினிமாவில் உருவாகும் சிறிய படங்கள்தான் மற்ற மொழிகளிலும் கவனம் பெறும் என்று நம்புகிறேன். இந்தப் படமும் அப்படிப் பலரிடம் சென்றடையும் என எதிர்பார்க்கிறேன். இயக்குநர் ராகவ் மிர்தாத் அவர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
என்னுடன் நடித்த சக கலைஞர்கள் அனைவரும் சிறப்பானவர்கள். முதலில் குரேஷி அண்ணா, மிகவும் ஜாலியான மனிதர். பத்து அடி தூரம் நடந்தால்கூட, அதற்குள் பல காமெடி கவுண்டர்களைப் போட்டு நம்மைக் கலாய்த்துவிடுவார். அடுத்து ஆர்.ஜே. தீபக். செட்டில் இவர் என்ன செய்வாரோ என்று சில நேரங்களில் நானே பயந்திருக்கிறேன். ஏதாவது விஷமம் செய்துவிடுவாரோ என்று அவரை அமைதியாக இருக்கச் சொல்வோம். ஆனால், அவர் நல்ல மனிதர். அஞ்சலி நாயர் மிகச் சிறந்த நடிகை. அவர் அழுது நடித்தால் பார்ப்பவர்களையும் அழ வைத்துவிடுவார். சித்தி இத்னானி எங்கள் படக்குழுவில் அனுபவம் மிக்கவராக இருந்தார். சிம்பு, அருண் விஜய், ஆதி போன்ற நடிகர்களுடன் நடித்தவர் என்பதால், ஆரம்பத்தில் அவரிடம் பேசுவதற்குக்கூட எங்களுக்குச் சற்று தயக்கம் இருந்தது. ஆனால், எந்தப் பந்தாவும் இல்லாமல் முதல் நாளிலிருந்தே எங்களை நண்பர்களாகப் பழகி, எளிதாக நடிக்க உதவினார். அனைவருடனும் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சியான அனுபவம்.
இறுதியாக, சினிமாவாலா சதீஷ் அண்ணனுக்கு நன்றி சொல்ல வேண்டும். இந்தப் படத்தில் எனக்கு முக்கியமான வாய்ப்பு கிடைத்ததற்கு அவர்தான் காரணம் என்று நம்புகிறேன். அவர்தான் என்னுடைய பெயரைப் பரிந்துரைத்து இந்தப் படத்தில் நடிக்க வைத்ததாகச் சொன்னார். அதேபோல், பரிதாபங்கள் கோபி மற்றும் சுதாகர் அண்ணன்களுக்கும் இந்த நேரத்தில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். பரிதாபங்கள் இல்லாமல் நான் இந்த இடத்திற்கு வந்திருக்க முடியாது. ‘டியூட்’ உள்ளிட்ட படைப்புகளுக்கு நீங்கள் எந்த அளவுக்கு ஆதரவு கொடுத்தீர்களோ, அதேபோல் ‘டிரோன்ஸ்’ என்ற இந்தச் சிறிய படத்திற்கும் ஆதரவு கொடுக்க வேண்டும். ரசிகர்களின் வாய்மொழி வரவேற்பின் மூலமாகவே இந்தப் படம் வெற்றி பெறும் என்று நம்புகிறேன். படத்தைப் பார்த்துவிட்டு உங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள். ஏதேனும் தவறு செய்திருந்தாலோ, குறைகள் இருந்தாலோ, உங்கள் வீட்டுப் பையனாக நினைத்து, அடுத்த முறை எப்படிச் சிறப்பாகச் செய்யலாம் என்று அறிவுரை கூறுங்கள். அதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்வேன். இங்கு வந்திருக்கும் அனைவருக்கும் மிக்க நன்றி.”

Latest articles

5000 மாணவர்கள் முன்னிலையில் விஜய் மில்டனின் ‘தொண்டர் படை – Chapter 1: Gods and Soldiers’ படத்தின் ‘நந்தினி’ முதல் பாடல் வெளியீடு!

விஜய் மில்டன் இயக்கத்தில், ரஃப் நோட் புரொடக்‌ஷன் (Rough Note Production) நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள தமிழ் –...

தமிழிலும் ஆங்கிலத்திலும் சமூகச் சிந்தனை முதல் சர்வதேச மனிதநேயம் வரை பாடல்களில் பதிவு செய்யும் இரமணிகாந்தன்!

https://www.youtube.com/watch?v=6JPqZc_lXGk https://www.youtube.com/watch?v=LwwM2jHwBr8   தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் பாடல்களை எழுதி, அவற்றை YouTube வலைத்தளத்தில் வெளியிட்டு வரும் பாடலாசிரியர்...

அமைச்சர் ராஜ்மோகன் பங்கேற்பில் உற்சாகமாய் நடந்த ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

யுவராஜ் சின்னசாமி இயக்கத்தில் ஏகன், ஸ்ரீதேவி, ஃபெமினா ஜார்ஜ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘ஹைக்கூ’ திரைப்படம் வரும்...

தீபாவளி கொண்டாட்டமாக நவம்பர் 6-ம் தேதி வெளியாகிறது விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி.’

மு. மாறன் இயக்கத்தில், தந்தை – மகள் பாசத்தை மையமாகக் கொண்ட ஆக்‌ஷன் குடும்பப் பொழுதுபோக்குத் திரைப்படமான “அப்பா...

More like this

5000 மாணவர்கள் முன்னிலையில் விஜய் மில்டனின் ‘தொண்டர் படை – Chapter 1: Gods and Soldiers’ படத்தின் ‘நந்தினி’ முதல் பாடல் வெளியீடு!

விஜய் மில்டன் இயக்கத்தில், ரஃப் நோட் புரொடக்‌ஷன் (Rough Note Production) நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள தமிழ் –...

தமிழிலும் ஆங்கிலத்திலும் சமூகச் சிந்தனை முதல் சர்வதேச மனிதநேயம் வரை பாடல்களில் பதிவு செய்யும் இரமணிகாந்தன்!

https://www.youtube.com/watch?v=6JPqZc_lXGk https://www.youtube.com/watch?v=LwwM2jHwBr8   தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் பாடல்களை எழுதி, அவற்றை YouTube வலைத்தளத்தில் வெளியிட்டு வரும் பாடலாசிரியர்...

அமைச்சர் ராஜ்மோகன் பங்கேற்பில் உற்சாகமாய் நடந்த ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

யுவராஜ் சின்னசாமி இயக்கத்தில் ஏகன், ஸ்ரீதேவி, ஃபெமினா ஜார்ஜ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘ஹைக்கூ’ திரைப்படம் வரும்...