கபடி போட்டிகளில் கலக்கலாக விளையாடி எதிரணிகளை கலங்கடித்துக் கொண்டிருக்கிற நண்பர்கள் உதயனும் (ஷேன் நிகம்) குமாரும் (சாந்தனு) சர்ந்தர்ப்ப சூழ்நிலையால், கந்து வட்டி பிஸினஸ் செய்கிற பைரவனின் அடியாட்களாக மாறுகிறார்கள். மிரட்டல், வெட்டுக்குத்து என அவர்களின் வாழ்க்கைப் பாதை ரணகளமாகிறது. ஒரு கட்டத்தில் அவர்கள் பைரவனுக்கு எதிரியாகிவிட, துவங்குகிறது வன்முறை வெறியாட்டம். அதில் யாரெல்லாம் செத்தார்கள், யார் யார் பிழைத்தார்கள் என்பது மிச்சமீதி கதை.
கபடி விளையாட்டில் காட்டும் ஈடுபாடாகட்டும், அடியாள் வேலையில் காட்டும் மிரட்டலாகட்டும், ஆக்சன் காட்சிகளில் அனல் பறக்க விடுவதாகட்டும் கதையின் நாயகர்கள் ஷேன் நிகமும் சாந்தனுவும் அடித்து ஆடியிருப்பது பெட்ரோல் கிணறு தீப்பிடித்து எரிவதைப் போலிருக்கிறது. நட்புக்கு மதிப்பளிப்பதில் சாந்தனுவைவிட ஷேன் நிகம் உயர்ந்து நிற்கிறார்.
வட்டிக்கு பணம் வாங்கி திருப்பித் தர முடியாதவர்களை கொடுமைப் படுத்துவதிலிருந்து கொலைமேல் கொலை செய்வது வரை பைரவனாக வருகிற செல்வராகவனின் வில்லத்தனத்தில் வீரியம் அதிகம். கிட்டத்தட்ட அதே அளவுக்கான வீரியத்தை தன் நடிப்பில் கொண்டு வந்திருக்கிறார் அல்போன்ஸ் புத்திரன். பூர்ணிமா இந்திரஜித்துக்கும் வில்லத்தனத்தை வெளிப்படுத்துகிற வேலைதான். அதை சரியாக செய்திருக்கிறார்.
ஷேன் நிகமின் காதலியாக பிரீத்தி அஸ்ராணி, கதையின் முக்கியமான சில காட்சிகளில் மட்டும் வருகிறார். எளிமையான நடிப்பைத் தருகிறார்.
ஒளிப்பதிவாளர் அலெக்ஸ் ஜே.புலிக்கலின் உழைப்பு மிகமிக தரம்.
சாய் அபயங்கர் பின்னணி இசையால் காட்சிகளுக்கு ராக்கெட் வேக சுறுசுறுப்பு தந்து, ‘ஜாலக்காரி’ பாடலுக்கு தந்திருக்கும் இசையால் உற்சாகத்தில் மிதக்க விடுகிறார்.
படத்தின் மூலம் ‘கெட்ட வழி என்பது ஒருவழிப்பாதை; அதில் நுழைந்தால் திரும்பி வர முடியாது’ என இயக்குநர் சொல்ல வரும் கருத்து சிறப்பானதுதான். காட்சிக்கு காட்சி ரத்தம் தெறிக்கும் ஆக்சன் படங்கள் பிடிக்குமென்றால் இந்த பல்டி உங்களுக்கானதுதான்.
பல்டி _ விளையாட்டல்ல; விபரீதம்!

