நெப்போலியன் நடிப்பில் தஞ்சை ஜே பி ஆர் இயக்கத்தில் உருவான ‘அமெரிக்க ஆவி’ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
நிகழ்வில் நடிகர் நெப்போலியன் பேசுகையில்,
”இந்த திரைப்படத்தில் ஆண்டோ, தியான், அர்லூ, பிரேமா, பிஜூ, மகேஷ், பப்லு, அருண் ஆண்டனி, சாம் ஆண்டோ, பிரகாஷ், ஐஸ்வர்யா, ராஜ்குமார், இந்து ராஜ்குமார், ராகுல், ஹேமமாலினி, ஊர்வசி, மைதிலி என தோராயமாக 200 பேர் புதுமுகமாக அறிமுகமாகி இருக்கிறார்கள். அவர்களில் மிக சிலர் மட்டுமே இங்கு இந்த நிகழ்விற்காக இங்கு வருகை தந்திருக்கிறார்கள்.
இதில் நடித்திருக்கும் அனைவரும் சாப்ட்வேர் இன்ஜினியர்கள் – டாக்டர்கள் – சயின்டிஸ்ட்- புரொபசர்ஸ்- என எல்லோரும் பெரிய பெரிய நிறுவனங்களில் பெரிய பொறுப்பில் பணியாற்றுகிறார்கள். அவர்கள் இந்த படத்திற்காக ஒதுக்கி தரும் நேரத்தை பயன்படுத்தி, 75 நாட்களில் இந்த திரைப்படத்தை உருவாக்கி இருக்கிறோம். திங்கள் முதல் வெள்ளி வரை அனைவரும் பரபரப்பாக இயங்குவார்கள். அதில் அவர்கள் எங்களுக்காக ஒதுக்கித் தரும் நேரத்தை சரியாக திட்டமிட்டு அந்த நேரத்தில் படப்பிடிப்பை நடத்தி இருக்கிறோம்.
இது மிகவும் கடினமான விசயம் தான். அமெரிக்காவில்.. இதுவரை சினிமா சூட்டிங்கை நேரில் வேடிக்கை பார்க்காதவர்கள் எல்லாம் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் நானும், இயக்குநரும் பயிற்சி கொடுத்து இதில் நடிக்க வைத்திருக்கிறோம்.
சிவாஜி சார் நடித்த ‘பாரத விலாஸ்: படத்தில் இந்தியாவில் உள்ள அனைவரும் நடித்திருப்பார்கள். இதில் உலகம் முழுவதிலும் உள்ளவர்கள் நடித்திருக்கிறார்கள். ஏறத்தாழ 40க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் இதில் நடித்திருக்கிறார்கள். இந்த அளவிற்கு இந்த படம் மிகவும் வித்தியாசமான படம். பொழுதுபோக்காகவும் இருக்கும்.
1994 ஆம் ஆண்டில் சன் டிவி நேரலை காட்சி தொடங்கிய போது, நானும், இயக்குநர் பாண்டியராஜனும் பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள மணிலாவிற்கு சென்று தொடங்கி வைத்தோம். அன்று முதல் எங்களுக்குள் ஏற்பட்ட நெருங்கிய நட்பு இன்று வரை நீடிக்கிறது. அவர் இங்கு வந்து எங்கள் படக் குழுவை வாழ்த்தியதற்கு நன்றி. மேலும் இங்கு வருகை தந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி” என்றார்.
இயக்குநர் தஞ்சை ஜே பி ஆர் பேசுகையில்,
” நான் ஒன்பது வயதிலேயே பழைய ஃபிலிம் வைத்து சூரிய ஒளி மூலம் சுவற்றில் அந்த படத்தை காண்பித்திருக்கிறேன். இதுதான் என்னுடைய தொடக்க கால பிலிம் டைரக்ஷன் ஆர்வம். அதற்கு பின் ‘ஓநாய்கள் ஜாக்கிரதை’ என்ற பெயரில் ஒரு திரைப்படத்தை தயாரித்து இயக்கியிருந்தேன். அதன் பிறகு குடும்ப சூழல் காரணமாக அமெரிக்காவில் செட்டிலாகி விட்டேன். அங்கு இருந்த காரணத்தினால் சினிமா பற்றிய தொடர்பு துண்டித்து போய்விடுமோ..! என பயந்தேன். அதற்காக இப்போதும் பல கதைகளை தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன். இந்த தருணத்தில் ஒரு முறை நெப்போலியனை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவரை சந்தித்து ஒரு கதையை சொன்னேன். அவருக்கு கதை மிகவும் பிடித்திருந்தது. ஆனால் என்னால் தனுஷை விட்டுவிட்டு வெளியில் வந்து நடிக்க முடியாது என்றார். அந்தத் தருணத்தில் அமெரிக்காவிலேயே ஏதாவது படத்தை உருவாக்க முடியுமா? அதற்கான கதை இருக்கிறதா? என கேட்டார். அதன் பிறகு மதிய உணவு அருந்தினோம். அத்துடன் அவர் புதிதாக வாங்கியிருக்கும் வீட்டை காண்பித்தார். மூன்றரை ஏக்கரில் அமைந்திருக்கும் பிரம்மாண்டமான வீடு அது. மரங்களுக்கு நடுவே அழகாக அமைந்திருந்த அந்த வீட்டை பார்த்ததும் ஆங்கில திரைப்படங்களில் வருவதை போல் இருந்தது. அதன் பிறகு இந்த வீட்டை மையப்படுத்தி ஏதேனும் கதையை உருவாக்க முடியுமா? எனக் கேட்டார். முடியும் என்று சொல்லிவிட்டு ஒரு வாரம் கழித்து கதையை சொன்னேன். அது அவருக்கு மிகவும் பிடித்து போனது. அப்போது அவர் இது வழக்கமான ஹாரர் படமாக இருக்கக் கூடாது. காமெடி கலந்த ஹாரர் படமாக இருக்க வேண்டும் என்றார்.
அதற்குப் பிறகு ஒரு கதையை உருவாக்கினோம். அந்தக் கதையை நெப்போலியனும், அவரது வாரிசுகளான குணால் – தனுஷ் என அனைவரும் இணைந்து அட்டகாசமான திரைக்கதையாக உருவாக்கினோம்.
இந்தப் படத்திற்காக பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகர்கள், நடிகைகள் அனைவருக்கும் நன்றி” என்றார்.

