HomeCinemaஉளவியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் அதிகாரத்தின் மூலம்  அடக்குமுறையைச் சந்தித்து வருகிற மக்களின் கலை வடிவமாகத்தான்...

உளவியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் அதிகாரத்தின் மூலம்  அடக்குமுறையைச் சந்தித்து வருகிற மக்களின் கலை வடிவமாகத்தான் இந்த படத்தைப் பார்க்கிறேன்! -அந்தோனி பட விழாவில் இயக்குநர் சீனு ராமசாமி 

Published on

இலங்கையின் வாழ்வியல் பின்னணியில் உருவாகியிருக்கும் ‘அந்தோனி’ படத்தில் கயல் வின்சென்ட், டிஜே பானு, நிழல்கள் ரவி, அருள்தாஸ், சுதர்சன், ஷாமி நடித்துள்ளனர். இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ள இந்த படத்தை சுகிர்தன் கிறிஸ்துராஜா, ஜெனோசன் ராஜேஷ்வர் இணைந்து இயக்கியுள்ளனர்.
இந்த படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா 19.2.2026 அன்று சென்னையில் நடைபெற்றது.

நிகழ்வில் பேசிய இயக்குநர்களில் ஒருவரான ஜெனோசன் ராஜேஷ்வர் “நான் இங்கே இருப்பதை  உணர்வு பூர்வமாக நினைக்கிறேன்.நான் பல ஆண்டுகளாகத் தமிழ் சினிமாவைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். இதே அரங்கில் கடைசி வரிசையில் நின்று கொண்டிருந்த அனுபவம் கொண்டவன் நான்.

தயாரிப்பாளர் முதலீடு செய்து உதவி கொண்டிருக்கிறார் என்றால் இந்த பிரபஞ்சம் கண்ணுக்குத் தெரியாமல் எவ்வளவோ உதவிகளைச் செய்து கொண்டிருக்கிறது.

சுகிர்தன் எடுத்த ‘மழைக்கால இரவுகள்’  குறும்படம் தயாரிப்பாளருக்குப் பிடித்துப் போய் இந்தப் படம் உருவாகி இருக்கிறது. இந்தப் படத்திற்காக பல அண்ணன்கள் தங்களை அறியாமலேயே உதவிகள் செய்து கொண்டிருக்கிறார்கள்.கேமராவை சொந்தமாக வாங்கிக் கொண்டு போய்தான் இலங்கையில் படப்பிடிப்பு நடத்தினோம். நாங்கள் நினைத்தபடியே படத்தை எடுத்திருக்கிறோம்.
வழக்கமான படமாக இல்லாமல் ஒரு நல்ல படத்தை எடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இதை எடுத்திருக்கிறோம். இது ஒரு கடலோரக் காதல் காவியம்.
இது  இலங்கை மண் சார்ந்த  ஒரு காதல் கதை.அனைத்து சமூகத்தினரும் பார்க்க வேண்டும்,  ஆதரிக்க வேண்டும். அனைவரும் ஊக்கமளித்து வெற்றி பெற வைக்க வேண்டும்” என்றார்.
இன்னொரு இயக்குநர் சுகிர்தன் கிறிஸ்துராஜா பேசியபோது “நல்ல மழை பெய்து எந்தன் காடு இங்கு கனிந்தது. நான் நினைத்த எண்ணம் கல்வெட்டாக வளர்ந்தது. கொம்புத்தேனை பார்த்து நின்றேன்  கையில் வந்து விழுந்தது. கூட்டத்தோடு நின்ற என்னை கொஞ்சும் அன்னம் அழைத்தது என்ற மாதிரியான நிகழ்வு எனக்கு.
ஒரு படத்தில் சொல்லி இருப்பார்கள் ‘காதலும் கடலும் எப்போது பார்த்தாலும் சலிக்காது’ என்று.எங்கள் ஊரில் உள்ள காதலையும் கடலையும் இந்தப் படத்தில் காட்டி இருக்கிறோம். இந்தப் படம் எப்படி ஒரு அனுபவமாக இருக்கும் என்றால்,
காசு செலவழித்து இலங்கை வரத் தேவையில்லை. இந்த படத்திற்கு ஒரு டிக்கெட் எடுங்கள். யாழ்ப்பாணம் நகரத்தில் இறங்கி அழகான கிராமத்தில் ஒரு பஸ்ஸில் போகும்போது இளையராஜா பாடல்களை கேட்டுக் கொண்டு காற்று வீசும் ஜன்னல் ஓரம் அமர்ந்து இருக்கும்போது ஏற்படும் உணர்வை இந்தப் படம் கொடுக்கும்” என்றார்.
சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட இயக்குநர் சீனு ராமசாமி பேசியபோது “இந்த படத்தின் ட்ரெய்லரைப் பார்த்து  நான் கண்கலங்கினேன்.
இந்த பட விழாவிற்காக என்னை அழைப்பதற்காக இந்த இளைஞர்கள் வந்து என்னிடம் பேசிய போது, எந்த ஊர் என்று கேட்டேன் இலங்கை என்றார்கள். அந்த ஒரே காரணத்திற்காகத் தான் இந்த விழாவிற்கு நான் வந்தேன். எனக்கு மற்றபடி இளையராஜா இசை என்பது மட்டும் தெரியும். தயாரிப்பாளர் யார் படத்தில் மற்றவர்கள் யார் என்று தெரியாது.
அழிக்கப்பட்ட ஒரு நாட்டிலிருந்து இரண்டு இளைஞர்கள் இப்போது படம் எடுப்பதற்காக வந்துள்ள, அந்த ஒரே ஒரு காரணத்திற்காகத்தான் நான் இங்கு வந்தேன்.
ட்ரெய்லரையும் பாடல்களையும் பார்த்தேன். இசைஞானி இளையராஜா அவர்கள் இசையமைத்திருப்பது, அவர் இசை அமைத்தார் என்பதை விட அவர் ஆசிர்வதித்திருப்பதாகவே நான்  கருதுகிறேன்.என் உள் ளுணர்வு அதைத்தான் கூறியது.இளையராஜா ஆசீர்வதித்த படம் என்றுதான் நான் இதைச் சொல்ல வேண்டும். இது ஒரு நல்ல படமாக இருக்கும் என்று நம்புகிறேன்.
ஒரு நாடு சிதிலமடைந்த பிறகு,  போர் முடிந்த பிறகு, அல்லது போர் முடிந்ததாக அறிவிக்கப்பட்ட பிறகு  எப்படி இருக்கும் ?வாழ்க்கை கேள்விக்குறியாகவே இருக்கும்.அந்த நாடு அழிவில் இருக்கும்.   போர் முடிவுக்குப் பிறகு அந்த நாட்டில் வாழ்க்கை எப்படி இருக்கும்? ஒரு தனியனின் இருப்பு எப்படி இருக்கும்? எல்லாமே கேள்விக்குறிதான். எப்போது வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் எதற்காக வேண்டுமானாலும் கேள்வி கேட்பார் இன்றிக் கைது செய்யப்படலாம். அப்படி ஓர்  அச்சம் எப்போதும் இருக்கும். அப்படிப்பட்ட மண்ணிலிருந்து வந்த இளைஞர்களின் நினைவுகளில் குண்டு விழுந்த சத்தம் எப்போதும் கேட்டுக் கொண்டே இருக்கும். இதை யாரும் மறுக்க முடியுமா?
உளவியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் அதிகாரத்தின் மூலம்  அடக்குமுறையைச் சந்தித்து வருகிற மக்களின் கலை வடிவமாகத்தான் அந்தோனியை நான் பார்க்கிறேன். அப்படிப்பட்ட நாட்டில் இருந்து இங்கு வந்திருக்கிறார்கள்.
விடுதலைப் புலிகள் மீது ஏன் இன்னும் தடையை நீக்கவில்லை? விடுதலைப் புலிகள் தான் இல்லை என்று தெரிந்து விட்டதே. புலிகள் யாரும் உயிரோடு இல்லை என்ற பிறகும் ஏன் அந்தத் தடையை நீக்காமல் இருக்கிறார்கள்?நான் இதற்கு முன்பு சொன்னேன் அல்லவா? யாரை வேண்டுமானாலும் கைது செய்யலாம் அதற்காகத்தான்.அதனால்தான் நீக்காமல் இருக்கிறார்கள். நான் யாரோடும் உடன்பட்டோ முரண்பட்டோ இங்கே இதைப் பேசவில்லை.என்னுடைய கருத்தை நான் சொல்கிறேன்.
இந்த படத்தின் ஒளிப்பதிவாளரை நான் பாராட்டுகிறேன். வாழ்த்துகிறேன்.அந்தக் கடலையும் அந்த அலையையும் அந்த வாழ்க்கையையும் தத்ரூபமாக நம் கண் முன்னே கொண்டு வந்திருக்கிறார்.
இந்தப் படத்தில் நடித்த கயல் வின்சென்ட் இனி அந்தோனி வின்சென்ட் என்று அழைக்கப்படுவார். அந்த அளவிற்கு அவர் நடித்துள்ளார்.
நான் வின்சென்டிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.நீ இவ்வளவு சிறந்த நடிகன் என்று எனக்குத் தெரியாமல் போய்விட்டது.என்னை மன்னித்துவிடு.  நான் சந்திக்க வேண்டும் என்று எனக்குத் தேவைப்படும் போது எங்காவது வெளிநாட்டில் இருப்பாய். நடிக்க வைக்க முடியாமல் போய்விட்டது. வின்சென்ட் இதில் ஒரு முழுமையான நடிகனாக வெளிப்பட்டுள்ளார்.
நவயுக இலங்கை சினிமாவில் இருந்து ஒரு புது சக்தியாக வந்து இப்படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். எல்லாம் நேர்த்தியாக இருக்கிறது.
இந்த அந்தோனியில் ஒரு தோணி இருக்கிறது. அதனால் கண்டிப்பாக கரை சேரும். எப்போது படம் பார்க்கப் போகிறோம் என்று ஆர்வமாக இருக்கிறது .
ஒரு திரைப்படம் என்பது மறப்பதற்கு அல்ல, நினைப்பதற்கு என்று உருவாகியுள்ளது .
எதையோ ஒன்றை மறைப்பதற்கு எதையோ ஒன்றைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். பேசினாலும் காசு, பார்த்தாலும் காசு, தாகம் வந்து தண்ணீர் குடித்தாலும் காசு, கழிப்பறை சென்றாலும் காசு. மனித வாழ்க்கையில் எல்லாமே பணம் சம்பந்தப்பட்டதாக ஆகிவிட்டது.
நீங்கள் பார்க்க வைக்கப்படுகிற உலகத்தில் இருக்கிறீர்கள். நீங்கள் கேட்க வைக்கப்படுகிற உலகத்தில் இருக்கிறீர்கள்.ஒட்டுமொத்த மனித வர்க்கத்தையே அபிப்ராயங்களை உருவாக்குவதும்,அபிப்ராயங்களை அழிப்பதும் , அதை வேடிக்கை பார்ப்பதும் என்று தான் வைத்திருக்கிறார்கள்.இதுதான் இன்றைய உலகம்.அப்படி இருக்கிற இன்றைய உலகத்தில் ஈழத்து  மக்களின் வாழ்க்கையை உயிரோட்டமாக,போருக்குப் பின்னாலான வாழ்க்கையை அவர்களுக்குள் இருக்கும் பரிந்தவிப்பைக் காட்டுகிற இந்த ‘அந்தோனி’ திரைப்படம் மாபெரும் வெற்றி அடையும்.
எனக்கு ‘நீர்ப்பறவை’ கால கட்டம் நினைவுக்கு வந்தது.இந்தப் படத்தை ஊடகங்கள் சுமந்து கொண்டு போய் மக்களிடம் சேருங்கள். ஒவ்வொரு சிறிய படத்திற்கும் எழுத்தாளரும் பத்திரிகையாளரும் தான் துணை.வேறு யாருமே கிடையாது.தரமான படத்தை எடுத்திருக்கும் தயாரிப்பாளர் ரமணனுக்கு எனது இதயபூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இங்கே அம்மா அகிலா பாலு மகேந்திரா வந்து இருப்பது மகிழ்ச்சி.
அவர் மட்டக்களப்பைச் சேர்ந்தவர். அவர் இங்கே  வந்திருப்பது பெருமை.
எனது ஒவ்வொரு படத்தையும் அவருக்குப் போட்டுக் காண்பிப்பேன்.  ஆனால் இடி முழக்கத்தை மட்டும் போட்டுக் காண்பிக்கவில்லை – அது கமர்சியலாக இருப்பதால் போட்டுக்காட்டவில்லை. விழாக்களுக்காக மட்டும் படம் எடுத்தால் நம் வாழ்க்கையில் விழா என்பதே இல்லாமல் போய்விடும். எனவே அதை கமர்சியலாக எடுத்துள்ளேன்”என்றார்.

Latest articles

Renacon Launches RENAFLEX Fibre Cement Boards, Advancing Sustainable Construction in India!

Rs 350 crore integrated green building materials facility at Naidupeta, Andra Pradesh built in...

கதைக்களம் மதுரை… முதன்மை கதாபாத்திரத்தில் சசிகுமார்… பிரைம் வீடியோவில் ஆகஸ்ட் 7 முதல் அசத்த வரும் ‘வதந்தி சீசன் 2.’

ஆகஸ்ட் 7 முதல், வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி பிரைம் வீடியோவில் தமிழுடன், தெலுங்கு மற்றும்...

நம்மாழ்வாரின் பிறந்த நாளை முன்னிட்டு இயற்கை விவசாயிகளுக்கு விருது வழங்கிய நடிகர் சௌந்தரராஜா!

நடிகரும் சமூக ஆர்வலருமான சௌந்தரராஜா, தனது "மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை" சார்பில், ஒவ்வொரு ஆண்டும் நம்மாழ்வாரின் பிறந்த நாளை...

ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறதா? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறதா? -புதிய கோணத்தில் நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட ‘பியார் பிரேமா கல்யாணம்’ புரமோ

“ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறது? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறது?” சந்தோஷமான திருமண வாழ்க்கைக்கான விதிகளை தலைகீழாக மாற்றும்...

More like this

Renacon Launches RENAFLEX Fibre Cement Boards, Advancing Sustainable Construction in India!

Rs 350 crore integrated green building materials facility at Naidupeta, Andra Pradesh built in...

கதைக்களம் மதுரை… முதன்மை கதாபாத்திரத்தில் சசிகுமார்… பிரைம் வீடியோவில் ஆகஸ்ட் 7 முதல் அசத்த வரும் ‘வதந்தி சீசன் 2.’

ஆகஸ்ட் 7 முதல், வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி பிரைம் வீடியோவில் தமிழுடன், தெலுங்கு மற்றும்...

நம்மாழ்வாரின் பிறந்த நாளை முன்னிட்டு இயற்கை விவசாயிகளுக்கு விருது வழங்கிய நடிகர் சௌந்தரராஜா!

நடிகரும் சமூக ஆர்வலருமான சௌந்தரராஜா, தனது "மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை" சார்பில், ஒவ்வொரு ஆண்டும் நம்மாழ்வாரின் பிறந்த நாளை...