HomeCinemaஉதயநிதி ஸ்டாலின், வைகோ, தொல் திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்பில் உற்சாகமும் பிரமாண்டமும் கலந்துகட்டிய 'அரிசி' திரைப்படத்தின்...

உதயநிதி ஸ்டாலின், வைகோ, தொல் திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்பில் உற்சாகமும் பிரமாண்டமும் கலந்துகட்டிய ‘அரிசி’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா!  

Published on

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில பொதுச் செயலாளர் முத்தரசன் நடித்துள்ள ‘அரிசி’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது.

நிகழ்வில் கலந்துகொண்ட உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், ” அண்ணன் இரா முத்தரசன் – சமுத்திரக்கனி நடிப்பில் தயாராகி இருக்கும் அரிசி திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டிருக்கும் திரு. செல்வ பெருந்தகை- திரு. வைகோ- திரு. திருமாவளவன் – திரு. வீரபாண்டியன் – திரு. பேராசிரியர் காதர் மைதீன்- திரு. புதுமடம் அலி- திரு. பழ. ஆசைத்தம்பி- திரு. செல்வராஜ் – திரு. சண்முகம் – திரு. வன்னியரசு – திரு. எஸ். எஸ். பாலாஜி- திரு. மாரிமுத்து – திரு. ரூபி மனோகரன் – திரு. கனகராஜ் – திரு. திருமுருகன் காந்தி- மருத்துவர் ஷர்மிளா- திரு. சிற்றரசு- திரு. முகமத் அபுபக்கர் – தயாரிப்பாளர் சண்முகம்- இயக்குநர் விஜயகுமார்- திரு ஆர் கே செல்வமணி- மற்றும் இங்கு வருகை தந்திருக்கும் அனைவருக்கும் என் காலை வணக்கம்.

முதலில் இந்த திரைப்பட குழுவினருக்கு என்னுடைய பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். முதலில் இது போன்ற திரைப்படங்களின் இசை மற்றும் முன்னோட்ட விழாவை மிகப் பெரிய நட்சத்திர ஹோட்டலில் நடத்துவார்கள். மிகப்பெரிய திரையரங்கத்தில் நடத்துவார்கள். ஆனால் அரிசி திரைப்படக் குழுவினர் இந்த நிகழ்ச்சியை கலைஞர் கட்டிய இந்த வள்ளுவர் கோட்டத்தில் நடத்தியதற்கு முதலில் என்னுடைய பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அமைச்சராக பொறுப்பேற்ற இந்த நான்காண்டு காலங்களில் திரைப்படம் தொடர்பான எந்த நிகழ்விலும் கலந்து கொண்டதில்லை. இது அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் நன்கு தெரியும். யார் கேட்டாலும் சினிமா சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை என்று உறுதியாக சொல்லிவிடுவேன். ஆனால் அண்ணன் முத்தரசன் கேட்கும்போது என்னால் தட்டிக் கழிக்க முடியவில்லை. நீங்கள் தேதியை சொல்லுங்கள் நான் உறுதியாக வந்து விடுகிறேன் என்று சொன்னேன். அதன் பிறகு நேரம் கேட்டார். அதையும் நீங்களே சொல்லுங்கள் என்று சொன்னேன்.

பல வருடங்களாக கொடுக்காமல் இருந்த திரைப்படத் துறையினருக்கான தமிழக அரசின் விருது வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. கடந்த பத்து ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் தமிழக அரசின் விருதுகள் வழங்கப்படாமல் இருந்தது. இதற்காக குழு அமைக்கப்பட்டது . 2017 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை திரைப்பட விருதுகளை வழங்குவதற்கான வாய்ப்பு கிடைத்தது.

நான் திரை துறையில் இருந்து வெளியேறி, மக்கள் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன். ஆனால் இன்று நான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான அண்ணன் முத்தரசன் அவர்கள் மக்கள் பணியில் இருந்து சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்திருக்கிறார். அவர் சினிமா துறைக்கு வந்திருந்தாலும் எவ்வளவு பெரிய வெற்றியைப் பெற்றாலும் அவர் மக்கள் பணிக்கு தான் முக்கியத்துவம் கொடுப்பார். அதில் யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம். அவர் சினிமாவில் உச்சத்திற்கு போனாலும் அவர் எப்போதும் விரும்புவது மக்களோடு மக்களாக இருப்பதைத்தான். இது தமிழ்நாடு மக்கள் அனைவருக்கும் நன்றாக தெரியும்.

அரசியலில் இருந்து சினிமாவிற்கு வந்திருக்கும் அண்ணன் முத்தரசனுக்கு திரைத்துறையில் முன்னால் இருந்தவர் என்ற வகையில் என்னுடைய வாழ்த்துக்களை நான் தெரிவித்துக் கொள்கின்றேன்.

மக்களுக்காக பல்லாண்டு காலம் களத்தில் போராடியவர் தான் அண்ணன் முத்தரசன். திரையிலும் மக்களுடைய உரிமைகளை.. உரிமையுடன் பேச வந்துள்ளார். அதிலும் குறிப்பாக இந்த படத்தில் அவர் விவசாயியாக நடித்திருக்கிறார். இந்தப் படத்தின் போஸ்டர் ,ட்ரெய்லர், பாடல்களை பார்க்கும் போது அவர் விவசாயியாக நடித்திருக்கிறார் என்பதை விட விவசாயியாகவே வாழ்ந்திருக்கிறார் என்று சொன்னால் நிச்சயமாக எல்லோராலும் ஏற்றுக் கொள்ள முடியும்.

முத்தரசன் மட்டுமல்ல அண்ணன் சமுத்திரக்கனியும் கம்யூனிஸ்ட் கொள்கைகளை தொடர்ந்து பேசக்கூடியவர். விவசாயிகளுக்காக கம்யூனிஸ்ட்கள் களத்தில் இறங்கி போராடினால் நிச்சயம் அதில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். இந்த முறையும் வெற்றி பெறுவார்கள். அதேபோல் இந்த படமும் நிச்சயமாக வெற்றி படமாக அமையும்.

இந்தப் படத்தின் தலைப்பு அரிசி உயிரின் மறு பெயர் என வைத்திருக்கிறார்கள். இந்த அரிசிக்காக ஒரு காலத்தில் மக்கள் எவ்வளவு கஷ்டப்பட்டார்கள். பண்ணையார்களிடம் வாழ்க்கை முழுவதும் அடிமையாக இருந்தார்கள். காலமெல்லாம் வயலில் வேலை பார்த்தாலும் அவர்களுக்கு என்று ஒரு நேர சாப்பாட்டிற்கு கூட வழியில்லாமல் இருந்தது. அப்படிப்பட்ட விவசாய தொழிலாளர்களின் உரிமைக்காக களத்தில் இறங்கி கம்யூனிஸ்டுகள் எத்தனையோ போராட்டங்களை நடத்தி இருக்கிறார்கள் அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள்.

அதனால் டாக்டர் கலைஞர் அடிக்கடி சொல்வார். நான் மட்டும் தந்தை பெரியாரையும், அண்ணாவையும் என் வாழ்க்கையில் சந்திக்காமல் இருந்திருந்தால்… நானும் ஒரு கம்யூனிஸ்ட் தோழனாக மாறி இருப்பேன் என அடிக்கடி சொல்வார்.

அப்படிப்பட்ட கலைஞர் தான் 1969 ஆம் ஆண்டில் ஆட்சி கட்டிலில் ஏறிய பிறகு ஏழைகளுக்கு அரிசி கிடைப்பதற்கான எல்லா வழிவகைகளையும் செய்து கொடுத்தார். ஒரு படி அரிசிக்காக யாரும் மற்றவர்களின் வீட்டு வாசலில் காத்துக் கொண்டிருக்கக் கூடாது எனும் நிலைமையை தமிழகத்தில் ஏற்படுத்தியவர் டாக்டர் கலைஞர்.

இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் 2006 சட்டமன்ற தேர்தலில் கலைஞர் அவர்கள் தேர்தல் வாக்குறுதி ஒன்றை அளித்தார். 2 ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என முதன் முதலில் அறிவித்தார். இது மக்களிடத்தில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. ஏனெனில் அந்த காலத்தில் பல குடும்பங்களுக்கு அரிசி சோறு என்பது மிகப்பெரிய கனவாக இருந்தது. அந்தக் கனவை நனவாக்கியவர் டாக்டர் கலைஞர் . பின்னர் அந்த ரெண்டு ரூபாயை ஒரு ரூபாயாக குறைத்தார். அதற்கு அடுத்த கட்டமாகத்தான் இன்று விலையில்லா அரிசியும் வந்திருக்கிறது. மக்களுடைய அடிப்படைத் தேவையான இந்த அரிசி பிரச்சனையை போக்கியவர் டாக்டர் கலைஞர்.
அந்த வகையில் விவசாயிகளின் உரிமையை பேசும் இந்த படம் நிச்சயம் வெல்லும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அண்ணன் முத்தரசனின் அரசியல் களப்பணியும், கலைப் பணியும் மென்மேலும் சிறக்கட்டும் என உங்கள் அனைவரின் சார்பாக நான் வாழ்த்துகின்றேன். ” என்றார்.

இயக்குநர் விஜயகுமார் பேசுகையில், ”இந்தப் படம் நீண்ட கால ப்ராஜெக்ட். இதை கஷ்டப்பட்டு உருவாக்கினோம் என்பது அனைவருக்கும் தெரியும். இதற்கு உதவி செய்த தயாரிப்பாளர்கள் சண்முகம் – பிரபாகரன் – மகேந்திரன்- ஆகியோருக்கு நன்றி. இந்த விழா இந்த அளவிற்கு பிரம்மாண்டமாக நடைபெறும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இது நடைபெற்றதற்கு இறைவனுக்கு நான் நன்றி சொல்கிறேன்.

இதில் நடித்த இரா முத்தரசன், சமுத்திரக்கனி உள்ளிட்ட நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு நன்றி.

இந்த திரைப்படம் ஒரு உணர்வுபூர்வமான படமாக இருக்கும். இந்த திரைப்படம் எனக்கு மிகப்பெரிய அடையாளமாக இருக்கும் என்று நம்பிக்கை இருக்கிறது.

நாங்கள் நெய் குப்பை எனும் கிராமத்திற்கு சென்ற போது கிடைத்த அனுபவத்தால் தான் இந்தப் படம் உருவானது ”என்றார்.

இரா. முத்தரசன் பேசுகையில், ”இயக்குனர் விஜயகுமாரும் இளங்கோவும் முதலில் என்னை சந்தித்து விவசாயம் தொடர்பான ஆவணப்படம் ஒன்று உருவாக்குகிறோம் அதில் நீங்கள் இரண்டு நாட்கள் வந்து வருகை தந்து நடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். நான் உடனடியாக கையைக் கூப்பி நான் வரமாட்டேன் என்று உறுதியாக சொல்லி விட்டேன். அதன் பிறகு கதையை சொன்னார்‌. கதை எல்லாம் நன்றாகத்தான் இருந்தது. கிராமத்திற்கு சென்று படப்பிடிப்பு நடத்துங்கள். எங்களுடைய தோழர்கள் உங்களுக்கு உதவி புரிவார்கள் என்று சொன்னேன்.

இயக்குனர் விஜயகுமார் மிகப்பெரிய கெட்டிக்காரர். சாதிக்க கூடிய ஆற்றல் படைத்தவர்.

அதன் பிறகு இது குறித்து தோழர் வீரபாண்டியனிடம் விவாதித்தேன். ஆவணப்படத்தில் இரண்டு நாட்கள் நடிக்க அழைப்பு விடுத்திருக்கிறார்கள் என்று சொன்னேன். இதைக் கேட்டதும் வீரபாண்டியன் இது ஒன்றும் தப்பில்லை தாராளமாக நடிக்கலாம். அதை விருதிற்காக அனுப்புவார்கள். என்றார்.

அதன் பிறகு தோழர் பெரியசாமி இடமும் இதைப்பற்றி சொன்ன போது அவரும் நடிக்கலாம் என்று சொன்னார்.

அதன் பிறகு இரண்டு நாள் என்பதை மூன்று நாளாக நான் கணக்கிட்டு படப்பிடிப்பு தளத்திற்கு சென்றேன். எனக்கு அப்போது ஆவணப்படம் என்றால் என்ன? நீண்ட படம் என்றால் என்ன? எதுவும் தெரியாது. படப்பிடிப்பு தளத்தில் வித்தியாசமான அனுபவம் கிடைத்தது.

அதன் பிறகு உங்களுக்கு எப்போது ஓய்வு நேரம் கிடைக்கிறதோ அப்போது சொல்லுங்கள் படப்பிடிப்பு நடத்தலாம் என மெதுவாக இயக்குநர் சொன்னார்.

அதன் பிறகு 40 நாட்கள் ஆனது. அதன் பிறகு உங்களுடன் சமுத்திரக்கனியையும் சேர்த்து நடிக்க வைக்க வேண்டும் என்று சொன்னார். அப்போது என்னுடன் சமுத்திரக்கனி நடிக்கவில்லை சமுத்திரக்கனியுடன் நான் நடிக்கிறேன் என்று சொன்னேன்.‌

இது என்ன ஆனது என்றால் அரசியலை விட்டு நான் சினிமாவுக்கு சென்று விட்டேனோ.. என்ற நிலை உருவாகிவிட்டது. ஆனால் உண்மையை சொல்கிறேன் இது ஒரு விபத்து போன்றது தான் .என்னுடைய முழு நேரமும் அரசியல் தான். அதை இங்கு தெளிவுபடுத்துகிறேன்.

விரைவில் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும். அனைவரும் பார்க்க வேண்டும். படம் எப்படி என்பதை உங்களின் முடிவுக்கு விட்டு விடுகிறேன்.

என்னுடைய அழைப்பை ஏற்று இங்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி. இப்படத்தில் பணியாற்றிய நடிகர் நடிகைகள் தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் நெய் குப்பை கிராம மக்களுக்கும் நன்றி” என்றார்.

திரு. வைகோ பேசுகையில், ” அரிசி உயிரின் மறு பெயர் எனும் இந்த திரைப்படத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணி தலைவரான இரா முத்தரசன் உழவனாகவே மாறி இருக்கிறார். அவர் நடிப்பு கலையை பயின்றவர் அல்ல ஆனால் இயற்கையாக அவர் கட்டியிருக்கும் தலைப்பாகையுடன் தொலி உழவு செய்யப்பட்ட வயலில் நெற்கதிரை லாவகமாக வீசுகிறாரே.. அது நெடுங்காலமாக வயலில் நெற்கதிரை வீசி இருந்தால் மட்டுமே அப்படி நெல்லை வீச முடியும்.

அண்ணன் முத்தரசன் கலை உலகில் பிரவேசித்திருக்கிறார். எந்த பயிற்சியும் முன் அனுபவமும் கிடையாது. ஆனால் அந்த கதாபாத்திரமாகவே மாறிவிட்டார் என்பதை இப்படத்தின் முன்னோட்டத்தை பார்த்த சில நிமிடங்களிலேயே உணர முடிந்தது.

அரிசி திரைப்படத்தில் சிம்பொனி இசை அமைத்து உலகப் புகழ் பெற்றாரே.. அண்ணன் கலைஞரால் இசைஞானி என்று பெயர் சூட்டப்பட்ட அந்த மாமேதையினுடைய இசையமைப்பிலே வெளியான உருவான பாடல்கள் பின்னணி இசை இதயத்தை கவர்வதாக அமைந்திருக்கிறது.

இந்தத் திரைப்படம் விரைவில் வெளிவரும் என்பதை நான் அறிந்தேன் அது மக்களின் ஆதரவை பெறும் என்று நான் நம்புகிறேன். விவசாய மக்களுக்கு உழவர் பெருங்குடி மக்களுக்கு ஒரு அரிசி தான் உலகத்தை காப்பாற்றுகின்ற உயிர்கருவி என்கின்ற தத்துவத்தை தருகின்ற இந்த திரைக்காவியம் மகத்தான வெற்றி பெறுவதற்கு தமிழகத்தில் வாழும் கோடான கோடி விவசாய பெருமக்கள்.. நான் இதுவரை எந்த மேடையிலும் திரைப்படங்களை பாருங்கள் என்று விளித்ததில்லை. ஆனால் மண்ணை நம்பி கலப்பையை நம்பி விதைக்கும் விதைகளை நம்பி உலகத்தை வாழ்வித்து கொண்டிருக்க கூடிய பசிப்பிணி போக்குகின்ற மருத்துவர்களாக திகழ்கின்ற விவசாய பெருமக்கள் நீங்கள் திரையரங்கங்களுக்கு வர வேண்டும்.

அரிசி உன்னதமான வெற்றியை பெற்றது என்ற நிலையை விவசாயிகள் உருவாக்க வேண்டும். உங்கள் துயரங்கள் போராட்டங்கள் ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்தாலும் கலை உலகம் அரசியலையும் நாட்டின் தலை விதியையும் தீர்மானிக்கின்ற இடத்தில் ..வேளாண்மை இருப்பதால் விவசாயம் இருப்பதால் இந்த காவியம் வெற்றி பெறும். இதில் பங்கெடுத்து இருக்க கூடிய அனைத்து நடிகர்களுக்கும் என் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நம்முடைய சமுத்திரக்கனி அவர்கள் இன்னும் உயர்ந்த விருதுகளை அவர் நடித்த திரைப்படங்களின் மூலமாக பெற வேண்டும் என வாழ்த்துகிறேன். இந்த திரைப்படத்தை தயாரித்த தயாரிப்பாளர்களின் எதிர்காலம் சிறப்பாக இருக்க வேண்டும் என வாழ்த்துகிறேன். என்னை உயிராக நேசிக்கும் முத்தரசனுக்கு பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து, அரிசி திரைப்படத்தில் மட்டுமல்ல.. எதிர்கால தேர்தல் களத்திலும் நாங்கள் தான் வெல்வோம் எனக் கூறி விடைபெறுகிறேன் நன்றி ” என்றார்.

அறிமுக இயக்குநர் எஸ். ஏ. விஜயகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அரிசி’ எனும் திரைப்படத்தில் இரா .முத்தரசன், சமுத்திரக்கனி, சுப்பிரமணிய சிவா, ரஷ்யமாயன் உள்ளிட்ட பலர் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். ஜான்ஸ் வி ஜெரின் ஒளிப்பதிவு செய்ய கே எஸ் நதிஸ் படத்தொகுப்பு செய்திருக்கிறார். இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார். விவசாயத்தையும் , விவசாயிகளையும் மையப்படுத்திய உணர்வுபூர்வமான படைப்பாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கி, ‘அரிசி ‘ படத்தின் இசை மற்றும் முன்னோட்டத்தை வெளியிட, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் நிறுவன தலைவரான வைகோ பெற்றுக்கொண்டார்.

 

Latest articles

Renacon Launches RENAFLEX Fibre Cement Boards, Advancing Sustainable Construction in India!

Rs 350 crore integrated green building materials facility at Naidupeta, Andra Pradesh built in...

கதைக்களம் மதுரை… முதன்மை கதாபாத்திரத்தில் சசிகுமார்… பிரைம் வீடியோவில் ஆகஸ்ட் 7 முதல் அசத்த வரும் ‘வதந்தி சீசன் 2.’

ஆகஸ்ட் 7 முதல், வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி பிரைம் வீடியோவில் தமிழுடன், தெலுங்கு மற்றும்...

நம்மாழ்வாரின் பிறந்த நாளை முன்னிட்டு இயற்கை விவசாயிகளுக்கு விருது வழங்கிய நடிகர் சௌந்தரராஜா!

நடிகரும் சமூக ஆர்வலருமான சௌந்தரராஜா, தனது "மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை" சார்பில், ஒவ்வொரு ஆண்டும் நம்மாழ்வாரின் பிறந்த நாளை...

ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறதா? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறதா? -புதிய கோணத்தில் நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட ‘பியார் பிரேமா கல்யாணம்’ புரமோ

“ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறது? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறது?” சந்தோஷமான திருமண வாழ்க்கைக்கான விதிகளை தலைகீழாக மாற்றும்...

More like this

Renacon Launches RENAFLEX Fibre Cement Boards, Advancing Sustainable Construction in India!

Rs 350 crore integrated green building materials facility at Naidupeta, Andra Pradesh built in...

கதைக்களம் மதுரை… முதன்மை கதாபாத்திரத்தில் சசிகுமார்… பிரைம் வீடியோவில் ஆகஸ்ட் 7 முதல் அசத்த வரும் ‘வதந்தி சீசன் 2.’

ஆகஸ்ட் 7 முதல், வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி பிரைம் வீடியோவில் தமிழுடன், தெலுங்கு மற்றும்...

நம்மாழ்வாரின் பிறந்த நாளை முன்னிட்டு இயற்கை விவசாயிகளுக்கு விருது வழங்கிய நடிகர் சௌந்தரராஜா!

நடிகரும் சமூக ஆர்வலருமான சௌந்தரராஜா, தனது "மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை" சார்பில், ஒவ்வொரு ஆண்டும் நம்மாழ்வாரின் பிறந்த நாளை...