தமிழ்த் திரையுலகில் நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் எனப் பன்முகத் திறமைகளுடன் வலம் வரும் சித்ரா லட்சுமணன். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் திரைப்படங்களில் நடிப்பதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். பல படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’ திரைப்படத்தில் சபாநாயகராக நடித்த சித்ரா லட்சுமணன், விஷால் இயக்கத்தில் உருவான ‘மகுடம்’ திரைப்படத்தில் டாக்டர் கதாபாத்திரத்தில் நடித்தார்.
இந்தப் படத்தைத் தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிக்கும் ‘அப்பா குட்டி’ திரைப்படத்திலும், கே.பி.ஒய். பாலா கதாநாயகனாக நடிக்கும் ‘ரி மேட்ச்’ திரைப்படத்திலும் டாக்டர் வேடத்தில் இப்போது நடித்து வருகிறார். இதன் மூலம் தொடர்ந்து மூன்று திரைப்படங்களில் டாக்டர் கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்துள்ளது.
இவை தவிர, இயக்குநர் திரு இயக்கத்தில் சண்முக பாண்டியன் கதாநாயகனாக நடிக்கும் ‘வாண வேடிக்கை’ திரைப்படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் சித்ரா லட்சுமணன் நடித்துள்ளார்.
இதற்கிடையே, நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் பிரபுவும் நடிகை சுகன்யாவும் இணைந்து நடிக்கும் ‘மேரி கோல்ட்’ திரைப்படத்திலும் சித்ரா லட்சுமணன் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார். பிரியன் ராஜேந்திரன் இயக்கும் இப்படத்தில் அவர் ஊர்த் தலைவராக நடிக்கிறார்.
இந்தப் படத்தில் வடிவுக்கரசி, சிங்கம்புலி, பாரதி கண்ணன், விவேக் பிரசன்னா உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும், ரக்சன் மற்றும் நம்ரதா ஆகியோர் காதல் ஜோடியாக நடிக்கின்றனர்.
‘மேரி கோல்ட்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் 15 நாட்கள் நடைபெற்றது. இந்தப் படப்பிடிப்பில் பிரபு, சுகன்யா, வடிவுக்கரசி, சிங்கம்புலி, பாரதி கண்ணன், விவேக் பிரசன்னா, ரக்சன், நம்ரதா உள்ளிட்ட நடிகர்களுடன் சித்ரா லட்சுமணனும் பங்கேற்று நடித்துள்ளார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் திரையுலகில் தனது நடிப்புப் பயணத்தைத் தொடர்ந்துள்ள சித்ரா லட்சுமணன், ஒரே நேரத்தில் பல திரைப்படங்களில் மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

