1990 காலகட்டத்தில் நடக்கிற கதை.
நாயகன் யோகிபாபு நரிக்குறவ சமுதாயத்தைச் சேர்ந்தவர். அவரது அப்பா, அம்மா, சகோதரிகள், சொந்த பந்தம் என நாற்பது ஐம்பது பேர் இணைந்து வாழ்கிறார்கள். அவர்கள் எங்கு போனாலும் அந்தந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் அவர்களை நிரந்தரமாக வசிக்க விடுவதில்லை. அவர்களுக்கு ரேஷன் கார்டு உள்ளிட்ட எந்தவொரு அடையாள அட்டையும் கிடையாது; அரசாங்க சலுகைகள் கிடையாது.
ஒரு கட்டத்தில் யோகிபாபு தங்கள் இனத்தின் அடையாளத்துக்காக, உரிமைக்காக போராட களமிறங்குகிறார். தேர்தலில் போட்டியிடுகிற அளவுக்கு முன்னேறுகிறார்.
எப்படியெல்லாம் போராடுகிறார், என்ன மாதிரியான சவால்களைச் சந்திக்கிறார், தேர்தலில் போட்டியிடுகிற வாய்ப்பு எப்படி கிடைக்கிறது என்பதெல்லாம் திரைக்கதை…
நரிக்குறவராக பலவிதமான துன்புறுத்தலுக்கு ஆளாகி பின்னர் வசதி வாய்ப்பு பெருகி கெத்து காட்டுவது வரை யோகிபாபுவின் நடிப்பு வழக்கம்போலவே இருக்கிறது. நரிக்குறவராக கெட்டப் மாறினாலும் நடிப்பில், டயலாக் டெலிவரியில் மாற்றமில்லை. அதனால் எந்த குறையுமில்லை.
யோகிபாபுவின் குடும்பத்தினர்களாக எம் எஸ் பாஸ்கர், தீபா சங்கர், சபீதா ராய், சொந்த பந்தங்களாக மனோபாலா, ஜாவா சுந்தரேசன், கணேஷ்கர் என பலரும் கேரக்டராகவே மாறியிருக்கிறார்கள்.
எம் எல் ஏ வாக மாரிமுத்து, ஊரில் பெரிய மனிதராக மக்களுக்கு நல்லது செய்வதை நோக்கமாக கொண்டிருக்கும் வேல ராமமூர்த்தி, நரிக்குறவ மக்களை துன்புறுத்தி குஷியாகிற மனநிலை கொண்டவராக சென்றாயன் என மற்றவர்களின் நடிப்பு கச்சிதம்.
பின்னணி இசையில் அதிரடி அட்டகாசம் செய்கிற சாம் சி எஸ் இந்த கதைக்கு என்ன தேவையோ அதை மட்டும் செய்திருக்கிறார். ஒளிப்பதிவு தரம்.
ஒடுக்கப்பட்ட மக்கள் படுகிற வலியை மட்டும் காண்பிக்காமல் அந்த மக்கள் கூட்டத்திலிருந்து ஒருவன் தேர்தலில் போட்டியிடுவது, கோடீஸ்வரனாவது என கதையோட்டத்தை விறுவிறுப்பாக்கியிருக்கிறார் இயக்குநர் கே.வி. கதிர்வேலு.
Rating 3.5 / 5

