காலங்காலமாக போதைப் பொருள் கடத்தலை தொழிலாக செய்து வருகிற ஒரு நபரிடம் அமர், தீனா என்கிற இரு இளைஞர்கள் வேலைக்குச் சேர்ந்து, சிறிய வேலைகளைச் செய்து, ஒரு கட்டத்தில் பல ஆயிரம் கோடி மதிப்புள்ள போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுகிறார்கள்.
அந்த கடத்தல் மன்னன், அவருக்கு வேலை கொடுக்கிற சர்வதேச கடத்தல் மன்னன் என எல்லோரையும் ஒட்டுமொத்தமாக தட்டித்தூக்க கஸ்டம்ஸ் அதிகாரியொருவர் தீவிர முயற்சியில் இறங்குகிறார்.
அந்த நேரமாகப் இரு இளைஞர்களும் சுயநலமாக 500 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் கன்டெய்னரை கடத்த திட்டமிட்டு செயல்படுத்த அதன் விளைவாக, அதுவரை கடத்தல் பிஸினஸை பிரச்சனையில்லாமல் செய்து வந்த தாதாக்கள் எதிரிகளாகிறார்கள்.
இப்படி பரபரப்பு வளையத்துக்குள் வந்துவிட்ட கதை கடத்தல் தாதாக்களின் மோதல் எதில் போய் முடியும்? இளைஞர்களின் கடத்தல் திட்டம் என்னவாகும்? கஸ்டம்ஸ் அதிகாரி கடத்தல் காரர்களின் நெட்வொர்க்கை முடக்க எப்படி வலை விரிக்கப் போகிறார்? என்பதை நோக்கி நகர்கிறது…
சூழ்நிலை காரணமாகவும் பணத்தாசையாலும் கடத்தல் தொழிலில் ஈடுபடும் இளைஞர்களாக சரண், பாலசரவணன். கடத்தலும் கடத்தல் சார்ந்தும் சரண் செயலில் பரபரப்பு காட்ட அதற்கு பலமாக புத்திசாலித்தனத்தால் சுறுசுறுப்பு காட்டும் வேலை பாலசரவணனுக்கு. சரணுக்கு கூடுதலாக காதல், கல்யாணம் என காடசிகள் கூடுதல். நடிப்பில் இருவரின் பங்களிப்பும் கச்சிதம்.
தேசிய அளவிலான கடத்தல் மன்னனாக ஜே டி சக்கரவர்த்தி, சர்வதேச கடத்தல் மன்னனாக லால். வில்லத்தனத்தை அலட்டலான ஹீரோயிஸத்துடன் செய்திருக்கிறார்கள்.
கெட்டவனாக இருப்பானோ என்ற சந்தேகத்துடன் ஹீரோவை காதலித்து, அதே சந்தேகத்துடன் கல்யாணம் செய்து கொண்டு, கெட்டவன்தான் என தெரிந்து மன உளைச்சலுக்கு ஆளாகிற நாயகி ஷிமேகாவின் நடிப்பு நேர்த்தி.
சரணின் அம்மாவாக ராதிகா சரத்குமார், ஷிமேகாவின் அண்ணனாக காளி வெங்கட் என தேர்ந்த நடிகர் நடிகைகளும் படத்தில் உண்டு.
சினேகா குப்தா இளமை விருந்து வைக்கும் ஐட்டம் சாங் சாம் டேனியல் இசையில் கதகதப்பூட்டுகிறது.
கா வின் பாஸ்கரின் ஒளிப்பதிவு படத்தை பிரமாண்டமாக காட்டுகிறது.
படத்தை இயக்கியிருக்கிற சமயமுரளி கஸ்டம்ஸ் துறையில் அதிகாரியாகப் பணியாற்றியவர். அவரது அனுபவம், கடத்தல் காரர்கள் கஸ்டம்ஸ் டிபார்ட்மென்ட்டை எப்படியெல்லாம் ஏமாற்றுவார்கள் என்பதை விரிவாக காட்சிப்படுத்த உதவியிருக்கிறது. படத்தை இயக்கியதோடு கஸ்டம்ஸ் அதிகாரியாக கம்பீரமாக நடித்திருப்பதும் அவரே. கூடுதலாக அதிரடியான பின்னணி இசையை தரவும் முயற்சித்திருக்கிறார்.
கடத்தல், துரோகம், அடிதடி, வெட்டுக்குத்து, கொலை என வழக்கமான கதைதான் என்றாலும் திரைக்கதையில் சேர்த்திருக்கும் ஒருசில திருப்பங்கள் படத்தை பெரிதாய் அலுப்பு சலிப்பில்லாமல் பார்க்க வைக்கின்றன.
Rating 3 / 5 

