நம்மூரில் சட்டமும் நீதியும் எந்தளவில் இருக்கிறது என்பதை வித்தியாசமாக அணுகி கவனம் ஈர்த்த சட்டமும் நீதியும் வெப் சீரிஸின் 2-வது சீஸன்.
தன் கணவரை கொன்றவர்கள் என நான்கு போலீஸ் அதிகாரிகளை நீதிமன்ற விசாரணைக்கு கொண்டு போகிறார் பிரபல வழக்கறிஞர் சந்திரா. ‘அந்த நான்கு பேரும் நிரபராதிகள்; நடந்தது தற்கொலை’ என நிரூபிக்கப் போராடுகிறார் மிகமிக சாதாரண வழக்கறிஞர் சுந்தரமூர்த்தி.
உண்மையில் நடந்தது கொலையா, தற்கொலையா? சம்பந்தப்பட்ட வழக்கில் போலீஸ் அதிகாரிகள் சிக்கியது எப்படி? படு வில்லங்கமான அந்த வழக்கு கேஸே இல்லாமல் அல்லாடிக் கொண்டிருக்கும் சுந்தரமூர்த்தியின் கைக்கு வந்தது எப்படி?
அத்தனை கேள்விகளுக்கும் பதில்களாய் விரிகின்றன அடுத்தடுத்த எபிசோடுகள்…
நீதிமன்ற விசாரணைகள் நடக்க நடக்க, ஒரு கட்டம் வரை நடந்தது தற்கொலையாகத்தான் இருக்கும் என நம்புகிறோம். பிறகு கொலையாகத்தான் இருக்கும் என்ற முடிவுக்கு வருகிறோம். ஆனால், கடைசி வரை கொலை செய்தது இவர்தான் என யாரையும் கணிக்க முடியவில்லை.
அப்படியொரு இன்ட்ரஸ்டிங்கான திரைக்கதையை பிரதீப் மரியானுடன் இணைந்து உருவாக்கி சீரிஸை இயக்கியிருக்கிறார் பாலாஜி செல்வராஜ்.
யாருமே ஆஜராகாத வழக்கை துணிச்சலாக கையிலெடுப்பது, போலீஸை விடவும், சிறப்பு விசாரணை அதிகாரியைவிடவும் ஆழமாக அலசி ஆராய்ந்து எடுத்துக் கொண்ட கேஸில் ஜெயிப்பதற்கான ஆதாரங்களைத் திரட்டுவது, பிரபலமான வழக்கறிஞரை நீதிமன்றத்தில் சாமர்த்தியமாக சமாளிப்பது, தன் பக்கம் தவறு நடந்திருப்பது தெரிந்தபின் மனம் உடைந்து போவது என சுந்தரமூர்த்தியாக வருகிற சரவணனின் நடிப்பு உணர்வுபூர்வமாகவும் உணர்ச்சிக் கொந்தளிப்பாகவும் இருக்கிறது.
‘நமக்கு முன் இவரெல்லாம் ஒரு ஆளே இல்ல’ என்பது போல், சாதாரணமாக நினைத்த வழக்கறிஞர் எடுத்து வைக்கும் வாதமும் ஆதாரங்களும் பவர்ஃபுல்லாக இருப்பதைப் பார்த்து திணறுவதாகட்டும், எப்படியாவது தான் குற்றவாளிகளாக கருதுபவர்களுக்கு தண்டனை பெற்றுத் தருவதற்காக மல்லுக்கட்டுவதாகட்டும் சந்திராவாக வருகிற வரலெஷ்மி சரத்குமாரின் நடிப்பில் ஆளுமைக்கு குறைவில்லை.
வரலெஷ்மி சரத்குமாரின் கணவராக காவல்துறை உயரதிகாரியாக பிரேம், சக அதிகாரிகளாக கவிதா பாரதி, ஆறுபாலா உள்ளிட்டோர் எளிமையான நடிப்பால் கேரக்டர்களை பலப்படுத்தியிருக்கிறார்கள்.
சக அதிகாரிகளில் ஒருவரான கல்லூரி வினோத்தின் நடிப்பு தனியாக தெரிகிறது. சிறப்பு விசாரணை அதிகாரியாக ஷிவின் தோரணையாக வந்து போகிறார். லாவண்யா, பிரேம்குமார், பீட்டர் ஜெ சந்திரன், பருல் சம்பரியா, அக்ஷயா வி, பிரியங்கா ரோப்ஷங்கர், அபர்ணா சுந்தர்ராமன் உள்ளிட்ட மற்ற நடிகர் நடிகைகள் போதுமான அளவில் நடித்திருக்க,
விபின் சங்கரின் பின்னணி இசை கதையோட்டத்தின் பரபரப்பை அதிகரிக்கிறது. எஸ் கோகுலகிருஷ்ணனின் ஒளிப்பதிவு கச்சிதம்.
கோர்ட் ரூம் டிராமாக்கள் பொறுத்தவரை நடிகர் நடிகைகளை வசனங்களில் புகுந்து விளையாட வைக்க வேண்டும். கொஞ்சம் அலட்சியமாக இருந்தால் போரடித்துவிடும். சீரிஸை உருவாக்கியவர்கள் அலட்சியமாக இருக்கவில்லை என்பதை தொடரின் ஒவ்வொரு அத்தியாயமும் சொல்கிறது!
Rating 3.5 / 5 

