நம் வீட்டுக்குள் ஒரு ஆள் ஒரு பிணத்தை இழுத்து வந்து போட்டால் எப்படியிருக்கும்?
யோசித்துப் பாருங்கள். அப்படியொரு சம்பவம் இந்த கதையில் நடக்கிறது.
கொலை செய்தது ஹீரோ. பயந்து நடுங்குவது ஒரு பெண்மணி. அவள் அந்த வீட்டில் தனியாக இருக்கிறாள்.
இப்போது நம் மனதில், கொலை செய்யப்பட்டது யார்? கொலை எதற்காக? கொலைகாரன் பிணத்துடன் அந்த பெண்ணின் வீட்டுக்குள் போனது ஏன்? என்ற கேள்விகள் தோன்றும். அதற்கெல்லாம் பதில் தருகிறது திரைக்கதை.
ஹீரோவாக சதா நாடார். காமவெறியனால் சீரழிக்கப்பட்ட மகளின் இழப்புக்காக கதறுவது, ஆவேசத்துடன் கிளம்பி சம்பந்தப்பட்ட காமவெறியனை கொலை செய்வது, அவனைப் போன்ற கொடூரன்களை தொடர்ந்து வதம் செய்ய களமிறங்குவது என எடுத்துக்கொண்ட பணியை சரியாக உணர்வுகளுடன் செய்திருக்கிறார்.
பயந்து நடுங்குவது, கொலைக்கான காரணத்தை தெரிந்து கொள்வது என தனக்கு கொடுக்கப்பட்ட காட்சிக்கு பொருத்தமாக நடந்து கொள்கிறார் மோனிகா செலினா.
கதையில் சதா நாடாருக்கும் மோனிகா செலினாவுக்கும் பெரிதாய் எந்த சம்பந்தமும் இல்லை; நிஜத்தில் இருவரும் கணவன் – மனைவி. இரண்டு ஆண்டுகள் முன் வெளியான ‘ல்தகா சைஆ’ படத்தை இணைந்து இயக்கிய அனுபவத்தோடு இந்த படத்தை இயக்கியிருப்பதும் அவர்களே.
காமவெறியன், ஹீரோவுக்கு நண்பன் என மற்ற கேரக்டர்களில் வருகிற ஒருசிலரின் நடிப்பில் குறையில்லை.
பின்னணி இசையை கதையோட்டத்தின் சீரியஸ்னஸுக்கு பொருந்தும்படி அதிரடியாக வழங்கியிருக்கிறார் இ ஜெ ஜான்சன். ஒரே வீட்டுக்குள் பெரும்பாலான சம்பவங்கள் நடக்க, ஒளிப்பதிவாளர் எம்.எஸ்.மனோகுமார் அவெய்லபிள் லைட்டிங்கில் அமைத்த கேமரா கோணங்கள் கவர்கிறது.
நாட்டில் பாலியல் வன்முறை சம்பவங்கள், உயிரிழப்புகள் நடக்காத நாளேயில்லை. அப்படியான வன்முறைகளில் ஈடுபடுகிற எல்லோருக்கும் உரிய தண்டனைகள் கிடைக்கிறதா என்றால் இல்லையென்பதே உண்மை நிலையாக இருக்கிறது. அப்படியான காலகட்டத்தில், காமவெறியர்களை அடக்க கடுமையான தண்டனை மட்டுமே தீர்வு என்று சொல்கிற படத்தின் நோக்கம் மதிக்கத்தக்கது. கமர்சியல் அம்சங்களுக்கு இடம் தராமல், 75 நிமிடங்களில் ஓடி முடிகிற விதத்தில் ஒரே நேர்க் கோட்டில் திரைக்கதை அமைத்திருப்பது படத்தின் ஹைலைட்.
Rating 2.5 / 5 

