தனித்துவமான கதைகளில் அமைந்த படங்களைக் கொடுக்கிற இயக்குநர் ராம் அதே தனித்துவத்துடன் தந்திருக்கும் ‘ஏழு கடல் ஏழு மலை.’
எட்டாயிரம் வருடங்கள் கடந்தும் வாழ்கிற ஒருவரும், துபாயில் ஏழெட்டு வருடங்களாக வேலை பார்த்து சொந்த ஊருக்கு திரும்புகிற தமிழ்நாட்டுக்காரர் ஒருவரும் ரயில் பயணத்தில் சந்திக்கிறார்கள். அந்த சந்திப்பில் அவர்களுக்குள் வெகு நேரம் உரையாடல் தொடர்கிறது, அதிரடியான சண்டைகளும் உருவாகிறது.
என்னதான் பேசுகிறார்கள்? சண்டை ஏன்? எட்டாயிரம் வருடங்கள் ஒரு மனிதன் வாழ முடியுமா? அந்த மனிதனின் ரயில் பயணம் எதற்காக?
இதுபோன்ற கேள்விகளுக்கு பதில் சொல்லும் விதமாக அமைந்திருக்கிறது திரைக்கதை.
எதற்கும் அடங்காத காளை என்பதுபோல் முரட்டுத்தனம் நிறைந்த மனிதராக நிவின் பாலி. காதலியைத் தேடும் நோக்கம் சுவாரஸ்யமாக இருக்க, உடன் பயணிப்பவரை அடித்து துவைத்து உயிர்பயம் காட்டுகிற நடிப்பு மிரட்டுகிறது.
நிவின் பாலியிடம் மாட்டி சித்தரவதைக்கு ஆளாகும் கேரக்டருக்கு தேவையான நடிப்பைத் தந்திருக்கிறார் சூரி.
அஞ்சலி அழகாய் வந்து, அழகாய் சில வார்த்தைகள் பேசிப் போகிறார்.
யுவன் சங்கர் ராஜாவும் சந்தோஷ் தயாநிதியும் பின்னணி இசையை காட்சிகள் கடத்த விரும்பும் உணர்வுகளுக்கு உதவுகிறது. பாடல்கள் பீல் குட் உணர்வைத் தருகின்றன.
கடுமையான மழை நேரம், வேகமெடுத்தோடும் ரயில், அதில் இரண்டு பேருக்கிடையிலான மிரள வைக்கும் அடிதடி சம்பவங்கள் என கதையோட்டம் மிரட்சி தர, எல்லாவற்றையும் தரமான ஒளிப்பதிவில் சுருட்டியிருக்கிறார் ஏகாம்பரம்.
வழக்கமான சினிமாவாக இல்லாமல், வேறொரு உலகத்துக்குள் போய் வந்த உணர்வைத் தருகிற இந்த படத்தின் மூலம் இயக்குநர் ராம் சொல்ல வருகிறார் என ஆழ்ந்து யோசித்தால் ‘உயிர்கள் எதுவானாலும் ஒன்றுதான்; பேரன்பு காட்டுவோம்’ என்ற புரிதல் கிடைக்கும்.
Rating 3.5 / 5

