வாம்பயர், மான்ஸ்டர் என உலவ விட்டு ரசிகர்களை பயத்திற்குள் தள்ளுகிற ஹாலிவுட் பாணியிலான படம்.
ஒரு அழகான இளம்பெண், ஸ்டார் ஹோட்டல் ரேஞ்சிலிருக்கிற தன் வீட்டில் வெறும் 5000 ரூபாய் வாடகையில் ரூம் பார்ட்னராக இருந்து கொள்ள அழைத்தால் எந்த இளைஞனுக்குத்தான் மறுக்கத் தோன்றும். நம் கதையின் நாயகனாலும் மறுக்க முடியவில்லை. அவளுடன் தங்குகிறான். பேசிப் பழகி, தொட்டு உரசி, காதலாகி, உற்சாகத்தில் மிதந்து அடுத்த கட்டத்துக்கு அதாவது ‘அந்த’ விஷயத்துக்கு தயாராகும்போது, அந்த பெண்ணால் தன் உயிருக்கு ஆபத்து என தெரிய வருகிறது. அவள் யார்? அவளால் அப்படியென்ன ஆபத்து? அந்த ஆபத்தில் ஹீரோ சிக்குகிறாரா? எஸ்கேப்பாகிறாரா? இயக்குநர் மாரியப்பன் சின்னாவின் தீப்பிடித்த பரபரப்பில் நகரும் திரைக்கதையில் பதில் இருக்கிறது…
பெண்ணின் அழகில் மயங்கிக் கிடப்பது, படு உற்சாகமாக ரொமான்ஸில் ஈடுபடுவது, அதே பெண் தனக்கு எமனாகும் சூழ்நிலையில் தப்பிக்க மரணப் போராட்டத்தில் தவிப்பது, வினோத விலங்கு வடிவில் தாக்கவரும் வாம்பயரை வெறித்தனமாக எதிர்கொண்டு வீழ்த்துவது என ஜி வி பிரகாஷின் நடிப்பில் இதுவரை இல்லாத மெச்சூரிட்டியை பார்க்க முடிகிறது.
ஒவ்வொரு காட்சியிலும் ஒரு ஹீரோயினால் ஆச்சரியப்படுத்த முடியுமா? தன்னை வைத்த கண் எடுக்காமல் ரசிக்க வைக்க முடியுமா? என்னால் முடியும் என காட்டுவது போலிருக்கிறது கவர்ச்சியாகவும் கொலை வெறிபிடித்த மான்ஸ்டராகவும் களமாடியிருக்கிற கயாது லோகரின் ஃபெர்பாமென்ஸ். எக்ஸலன்ட் என்று சொல்லி பாராட்டுவதை தவிர வேறு வழியில்லை.
பல படங்களில் அச்சுப்பிச்சு காமெடியனாக பார்த்துப் பழகிய டி எம் கார்த்திக், வித்தியாசமான கெட்டப்பில் முக்கியத்துவமுள்ள கேரக்டரில் வருகிறார். ஆதித்யா கதிர், லொள்ளுசபா மாறன், குமார் நடராஜன் உள்ளிட்டோர் கதையில் கலந்திருக்கிறார்கள்.
படத்தில் கதைதான் ஹீரோ என்றால், அதிரடி சரவெடியாக பயணிக்கும் சாம் சி எஸ்’ஸின் பின்னணி இசையை இன்னொரு ஹீரோ என்று சொல்லலாம். பாடல்களும் ஈர்க்கிறது.
ஹாலிவுட் படம் பார்க்கிற மிரட்டலான உணர்வைத் தருகிற அசத்தலான காட்சிகளை நேர்த்தியாக ஒளிப்பதிவு செய்திருக்கும் அருண் ராதாகிருஷ்ணனையும், சி ஜி – வி எஃப் எக்ஸ் டீமையும் தனியாக பாராட்ட வேண்டும்.
பயங்கர சம்பவங்களின் அணிவகுப்பால் அலற விடுகிற இந்த படம் எல்லா தரப்பினரையும் கவரும்; விறுவிறுப்பான படங்களை விரும்புகிறவர்கள் ரீப்பீட் ஆடியன்ஸாக மாறவும் வாய்ப்புண்டு.
Rating 4 /5

