வயலன்ஸ், வயலன்ஸ், வயலன்ஸ் படம் முழுக்க வயலனஸ்.
ஏன்? எதற்காக?
1947 காலகட்டத்தில் போர்த்துகீசியர்கள் வசமிருக்கும் கோவாவை ஆளத் துடிக்கும் கேங்ஸ்டர் அண்ணன் – தங்கை. அவர்களை எதிர்ப்பவர்கள் என்னவாகிறார்கள் என்பதும், அவர்களால் கோவாவை ஆள்கிற நிலைக்கு உயர முடிந்ததா இல்லையா என்பதுமே குத்து மதிப்பாக புரிந்து கொள்ள முடிகிற டாக்ஸிக்கின் படு சிக்கலான ஸ்க்ரீன்பிளே. இயக்கம் கீது மோகன்தாஸ்
நாயகன் யஷ்ஷுக்கு டூயல் ரோல். ஒருவர் நல்லவர், இன்னொருவர் கெட்டவர் என்றெல்லாம் கிடையாது. இருவருமே முரட்டுத்தனமான உடம்பும் தோற்றமும் கொண்ட கேங்ஸ்டர்கள். ஏகப்பட்ட பேரை இருவருமே விதவிதமாக கொடூரமாக கொன்று குவிக்கிறார்கள். ஹீரோயின்களுடன் உடற்பசியை தீர்த்துக் கொள்வதை ரசித்துச் செய்கிறார்கள். அதைத் தாண்டி சொல்வதற்கு ஏதுமில்லை.
யஷ்ஷுக்கு அக்காவாக நயன்தாரா. உடையும், ஹேர் ஸ்டைலும் அவரை வித்தியாசமாக காட்டுகிறது. தம்பிக்காக எதை வேண்டுமானாலும் செய்யக் கூடியவராக வருகிற அவரும் கேங்ஸ்டர் என்பதால் தன் பங்கிற்கு பலரையும் கொன்று குவிக்கிறார்.
ஹீரோயின்கள் கியாரா அத்வானி, ருக்மணி வசந்த் கவர்ச்சியை அதிகமாகவும் நடிப்பை கொஞ்சமாகவும் காட்டுகிறார்கள்.
தாரா சுதாரியா, ஹுமா குரேஷி, அக்சய் ஓபராய் என மற்ற கேரக்டர்களில் வருகிற நடிகர் நடிகைகளின் லிஸ்ட் ரொம்பவே பெரியது. நடிப்பில் குறையில்லை.
ரவி பஸ்ருரின் பின்னணி இசை காட்சிகளுக்கு பரபரப்பு கூட்ட உதவுகிறது.
காடு, மலை, வறட்சியான ஏரியா, பனி படர்ந்த பகுதி என ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத கதை நிகழ்விடங்களை ராஜீவ் ரவியின் ஒளிப்பதிவு நேர்த்தியாக திரையில் பதிவு செய்திருக்கிறது.
இந்த படத்துக்கு 500 கோடி செலவாம். மேக்கிங்காக பார்த்தால் தரம்தான்; பிரமாண்டம்தான். உருப்படியான கதையில்லாததால், வன்முறை – போதை – காமம் என திரைக்கதை ஒரு வட்டத்துக்குள்ளேயே சுழல்வதால் யஷ்ஷுக்கு ‘கே ஜி எஃப்’, ‘கே ஜி எஃப் 2’ படங்களைத் தொடர்ந்து கிடைத்திருக்க வேண்டிய ஹாட்ரிக் வெற்றி மிஸ்ஸாகியிருக்கிறது.
Rating 2 / 5

