இன்றைய தலைமுறையினரின் உணர்வுகளையும், காதலையும் மையமாகக் கொண்ட படம்.
ஜெய்ப்பூரில் உணவகம் நடத்தி வரும் சிவாவும் சாதனாவும் காதலர்கள். ஒரு கட்டத்தில் சிவாவுக்கு விபத்து ஏற்பட்டு, புதிய விஷயங்களை மறக்கிறார். அவரைக் காதலித்து ஐந்தாறு வருடங்கள் முன் பிரிந்துபோன காதலியுடன் கலந்து பழக வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. சிவா அந்த காதலியை இப்போதும் காதலிப்பதாக நினைத்துக் கொண்டு அவளிடம் ரொமான்ஸில் ஈடுபடுகிறார். அதை இப்போதைய காதலி இமயாவால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இப்படி, பழைய காதலுக்கும் புதிய காதலுக்கும் இடையில் சிக்கித் தவிக்கும் சிவாவின் நினைவு மறதி பிரச்சனை தீர்ந்ததா இல்லையா என்பது கதையின் மீதி…
சிவாவாக சனந்த் இயல்பாக நடித்துள்ளார். சனந்தின் காதலி சாதனாவாக இமயா, கதையோட்டத்திற்குத் தேவையான பலமான பங்களிப்பை அளவான நடிப்பில் தந்துள்ளார். சனந்தின் முன்னாள் காதலியாக மடோனா செபாஸ்டியன் அனுபவ நடிப்பில் நேர்த்தியாக தன் கதாபாத்திரத்திற்கு உயிரூட்டியுள்ளார். வாட்சப் மணி, உமா பத்மநாபன், மேத்யூ வர்கீஸ், பிரகதி மாதவி, அஜித் கோஷி உள்ளிட்ட மற்றவர்களும் கதையோட்டத்திற்கு ஈடு கொடுத்துள்ளனர்.
ராஜேஷ் முருகேசனின் பின்னணி இசை காட்சிகளின் எமோஷனல் உணர்வுகளை கடத்துவதற்கு உதவுகிறது. பாடல்கள் கேட்கும் ரகம். முகேஷின் ஒளிப்பதிவில் காட்சிகளை வண்ணமயமாக பார்க்க முடிகிறது.
இளைய தலைமுறை ரசிகர்கள் தங்களின் சொந்த வாழ்க்கையோடு தொடர்புபடுத்திக் கொள்ளும் பல காட்சிகள் படத்தில் உண்டு. மனதைத் தொடும் எமோஷனல் காதல் கதையாகத் தொடங்கி, எதிர்பாராத திருப்பங்களுடன் நகர்கிற இந்த ஹார்ட்டீன் ரசிகர்களின் ஹாட்ட்டில் இடம்பிடிக்கும்.
Rating 3 / 5 

