அணவக் கொலைகள் பொறுத்தவரை ‘அவனை நிறுத்தச் சொல் நான் நிறுத்துகிறேன்’ என்பது போல் இருக்கிறது தமிழ் சினிமாவின் நிலைமை. ‘இனி அணவக் கொலைகள் நடக்கவே நடக்காது’ என்கிற நாள் வரும் வரை இயக்குநர்கள் ஆணவக் கொலை சார்ந்த படங்கள் எடுப்பதை நிறுத்த மாட்டார்கள் போலிருக்கிறது. இந்த வாரம் வெளியாகியுள்ள ‘மனு’வும் ஆணவக் கொலையை மையப்படுத்தியே பயணிக்கிறது.
திரைப்படங்களில், ஆணவக் கொலை செய்தவர்களுக்கு தண்டனை கிடைப்பதுண்டு; கிடைக்காமலும் போவதுண்டு. ஆணவக் கொலை செய்த நபரின் வாழ்நாள் குற்றவுணர்ச்சியில் நரகமாய் கழிவதாக காண்பித்திருப்பதில் சற்றே தனித்துவமாகிறது துர்கா பிரசாத் இயக்கியிருக்கும் இந்த படத்தின் கதை.
நாயகன் எளிய குடும்பத்தைச் சேர்ந்தவன். நடிகர் விஜய் பெயரில் நலத்திட்டங்களை செய்து வருபவன். அவனுக்கும் அந்த ஊரின் கோடீஸ்வர, சாதிப்பாகுபாடு பார்க்கிற அம்பலத்தாரின் மகளுக்கும் காதல். அந்த காதலை அம்பலத்தார் எதிர்க்க, காதலர்கள் வீட்டை விட்டு ஓடுகிறார்கள். அம்பலத்தார் அவர்களைக் கொல்ல ஆட்களை ஏற்பாடு செய்கிறார்.
எந்த புதுமையும் இல்லாதது போன்ற உணர்வைத் தந்து நகர்கிற இந்த கதையில், காதலர்கள் மணவாழ்க்கையில் இணைவதை சற்றே வித்தியாசமாக கருதலாம்.
நாயகன் ஸ்ரீயூத். பெயரும், கதைப்படி விஜய் ரசிகரான அவர் கட்டவுட் வைப்பது, பாலபிஷேகம் செய்வது என்கிற வழக்கமான விஷயங்களில் ஈடுபடாமல் விஜய் பெயரில் உதவிகள் செய்வதும் கவனம் ஈர்க்கிறது. எதிர்ப்பு வந்தபின்னும் காதலில் உறுதியாக நிற்பது, சண்டைக் காட்சிகளில் அளவான ஆக்ரோஷம் காட்டுவது என நடிப்பில் பாஸ்மார்க் வாங்குகிறார். பெயரிலிருக்கிற யூத் நடனத்திலும் தெரிகிறது. நல்ல கதைகளில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்கலாம்.
நாயகி ரேஷ்மா, 100 கோடிக்கு மேல் சொத்துபத்துள்ள குடும்பத்தின் வாரிசாக வருகிறார்; எளிய குடும்பத்துப் பையனைக் காதலிக்கிறார்; அப்பாவின் எதிர்ப்பால் மன உளைச்சலுக்கு ஆளாகிறார். ஹீரோயின்கள் வழக்கமாக செய்கிற வேலைகள்தான். நடிப்பில் அழகில் இளமையில் குறையில்லை.
பெரும் பணக்காரர், அடியாள் பலமுள்ளவர்; மகளின் காதலை எதிர்ப்பவர்; எதிர்ப்புக்கு அடங்காததால் மகளையே கொல்ல முடிவெடுப்பவர். அப்படிப்பட்ட கெத்தான கேரக்டருக்கு பொருத்தமாக நடித்திருக்கிறார் விஜய் செல்வம்.
ஐயப்பன் ஜெய், தேவிஸ்ரீ உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களை ஏற்றிருப்போரின் நடிப்பு நேர்த்தி.
ஹர்ஷாவின் இசையில் ஏகப்பட்ட பாடல்கள், ஒன்றிரண்டு இதம் தர மற்றவை படத்தின் நீளத்தை அதிகரிக்க உதவுகின்றன. பின்னணி இசை பரவாயில்லை ரகம். குளிரும் பசுமையும் ஆக்கிரமித்துள்ள மலைப் பகுதியொன்று கதையின் பெரும்பாலான சம்பவங்கள் நடக்கும் இடங்களாக இருக்க, அவற்றை ரசனையோடு பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் வீனஸ் மூர்த்தி.
காதலர்களை வாழ விடுங்கள்; ஆணவக் கொலைகள் தருகிற குற்றவுணர்ச்சி கொடுமையானது; சட்டம் தண்டிக்கிறதோ இல்லையோ மனசாட்சி தருகிற தண்டனை தாங்க முடியாததாக இருக்கும். இப்படி பல கருத்துக்களை தன் படைப்பின் மூலமாக சமூகத்துக்கு கடத்த நினைத்த இயக்குநர் துர்கா பிரசாத், எளிமையான பட்ஜெட்டில் புதுமுகங்களின் பங்களிப்பில் நினைத்தை செய்திருக்கிறார்.
மனு – சமூக அவலத்தின் சாட்சி; மகிழ்விப்பது நிறைவுக் காட்சி!
Rating 3 / 5

