காலங்காலமாக பெண்களை ‘ஆட்டி’ப் படைக்கும் பாலியல் வன்முறை, அந்த வன்முறைகளுக்கெதிராக அந்தக் காலத்துப் பெண்கள் காட்டிய எதிர்ப்பு, தாக்குதல், பழி வாங்கல் என வீரம் கொப்பளிக்கிற வரலாற்றுப் பக்கங்களைத் தொட்டு விரிகிற திரைக்கதை…
அந்த மலைக் கிராமத்தில் இளம்பெண் அழகி, சின்னஞ்சிறு பிள்ளைகளைத் திரட்டி பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார். அதே பாடம் நடத்தும் பணியில் இணையும் இளவயது ஆசிரியர் அழகியிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சிக்கிறார். கொஞ்ச நாளில் அவர் கொலை செய்யப்படுகிறார்.
அதற்கு ஐந்து பேர் கொண்ட குழு காரணம் என்பதையும், அவர்கள் யார் என்பதையும், அவர்கள் தொடர்ச்சியாக சிலரை கொலை செய்து வருவதையும் காவல்துறை உயரதிகாரி கண்டு பிடிக்கிறார். அவர் எப்படியெல்லாம் கண்டு பிடிக்கிறார் என்பது பரபரப்பாக இருக்க, கொலைக்கான காரணங்கள் அதிர்ச்சி தர, அந்த ஐந்து பேரைப் பற்றி தெரியவரும் தகவல்கள் பிரமிப்பூட்டுகிறது. இயக்கம் கிட்டு
அழகியாக அபி நட்சத்திரா. கேரக்டரின் பெயருக்கேற்ப அழகியாக இருக்கும் அவர் சிறுவர் சிறுமிகளுக்கு அக்கறையுடன் பாடம் நடத்துவது, பாலியல் சீண்டலுக்கு ஆளாகி சீற்றம் காட்டுவது உயிர்ப்பான நடிப்பால் கவர்கிறார்.
என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டாக வருகிற இசக்கி கார்வண்ணன், நடந்து வரும் கொலைச் சம்பவங்களைப் பற்றி அலசி ஆராய்வதில் அலட்டலில்லாத கம்பீரம் தெரிகிறது. ஆசிரியராக வருகிற பிரவீன் பழனிச்சாமி காமவெறியராக ஏற்ற கேரக்டரில் பொருந்தியிருக்க, தமிழக மக்களின் பெண் குல தெய்வங்கள் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபடுபவராக சித்து குமரேசனின் பங்களிப்பு முக்கியத்துவம் பெறுகிறது. செல்வகுமார், காதல் சுகுமார், கரண் சக்கரவர்த்தி, சவுந்தர் என மற்றவர்களும் கதையின் தேவைக்கேற்ப நடித்திருக்கிறார்கள்.
தீசனின் பின்னணி இசை, சிபி சதாசிவத்தின் ஒளிப்பதிவு, சி.எம்.இளங்கோவனின் எடிட்டிங் படத்துக்கு பலம்.
1970 காலகட்டத்தில் பாலியல் வன்முறை என பழகிய விஷயத்தில் துவங்கும் கதை, இன்னும் 100 வருடங்கள் வரை பின்னோக்கி பயணித்து ஏகப்பட்ட ஆச்சரியங்களையும், வித்தியாசமான பீரியட் படம் பார்த்த மன நிறைவையும் அள்ளித் தருகிறது.
Rating 3.5 / 5 

