ராணுவ வீரர் ஒருவர் காதலில் விழுகிற கதை. ஹீரோயிஸத்துக்கு முக்கியத்துவம் தராமல் ஹீரோயினை மையப்படுத்தி, வியப்பூட்டும் விதமாக ஒரு புதிய விஷயத்தை கதைக்’கரு’வாக்கியிருக்கிற ‘கமாண்டோவின் லவ் ஸ்டோரி.’
விஷுவல் கம்யூனிகேஷன் படிக்கும் மாணவன் முத்து, சக மானவர்களுடன் இணைந்து ராணுவ வீரர்களின் அருமை பெருமை பற்றி குறும்படம் எடுப்பதற்கு தயாராகிறான். அதற்காக நாட்டுக்காக தன் உயிரை தியாகம் செய்த வீரா என்கிற ராணுவ வீரரைப் பற்றி தெரிந்து கொள்கிறான். அந்த வீரர் செய்த தியாகம் பல ராணுவ வீரர்கள் நாட்டுக்காக செய்த, செய்து கொண்டிருக்கிற தியாகத்தைப் போலவே இருக்கிறது. அவர் காதலித்த பெண் ஒரு தியாகம் செய்கிறாள். அப்படியொரு தியாகத்தைச் செய்ய எந்த பெண்ணும் முன்வர மாட்டாள். ஆனால், அவள் முழு மனதுடன் செய்கிறாள். அதன் மூலம் இன்னொரு ராணுவ வீரன் நாட்டுக்கு கிடைக்கிறான்.
அப்படி அவள் செய்கிற தியாகம் என்ன, எதற்காக அதை அவள் செய்கிறாள் என்பதையெல்லாம் நம் மனம் ஆச்சரியத்தில் நிரம்புகிற அளவுக்கான காட்சிகளாக்கியிருக்கிறார் இயக்குநர் வீர அன்பரசு.
படத்தை இயக்கியிருக்கிற வீர அன்பரசு கதையின் நாயகன் வீராவாக வருகிறார். சதிகாரர்களை, பயங்கரவாத செயல்களில் ஈடுபடுபவர்களை சுற்றி வளைத்து தாக்கும்போது மினி சூறாவளியாய் மாறுகிறார். காதலியின் அழகை வர்ணிப்பது, கவிதை எழுதி குஷிப்படுத்துவது, அவள் ஆபத்தில் சிக்கியிருக்கும் தருணத்தில் காப்பாற்றுவதற்காக பதற்றத்துடன் செல்வது என நீளும் காட்சிகளில் பரவாயில்லை என்கிற அளவில் நடித்து, உயிர்த் தியாகம் செய்து மனதில் நிறைகிறார். ஏற்றிருப்பது ராணுவ உயரதிகாரி கதாபாத்திரம் எனும்போது அதற்கேற்ப உடற்கட்டில் கம்பீரத்தைக் கொண்டு வந்திருக்க வேண்டும். அதையெல்லாம் செய்யாமல் விட்டிருப்பது சரியாக படவில்லை.
வீர அன்பரசு மீது அன்பு காட்டும் அரசியாக ஏஞ்சல். ஒரு கட்டம் வரை, ‘இவரும் தமிழ் சினிமா வழக்கப்படி கதாநாயகனை சுற்றிச் சுற்றி காதலிக்கும் வழக்கமான கதாநாயகிதான்’ என நினைக்க வைக்கிறார். அன்பரசு வீர மரணம் அடைந்தபின், அவரது கருவைச் சுமக்கத் தயாராகும்போது சீரியஸான அந்த காட்சிகளுக்கு உயிரூட்டும் விதமாக நடித்திருக்கிறார். சின்னச் சின்ன உடைகளில் தோன்றி கணிசமாக கவர்ச்சியும் காட்டியிருக்கிறார்.
குறும்படம் எடுக்க ஆர்வம் காட்டுவதில் தொடங்கி, தன் தந்தை ராணுவ அதிகாரியாக இருந்தவர் என்பதை அறிந்து பெருமிதமடைவது, தன் தாய் தன்னை பெற்றெடுத்த விதமறிந்து கலங்கி நிற்பது வரை இயல்பாக நடித்திருக்கிறார் கதையின் இரண்டாவது ஹீரோவான ஆகாஷ் முத்து. பாடல் காட்சியில் நன்றாக ஆடவும் செய்கிறார். டயட், ஃபிட்னஸ் என இறங்கினால் அடுத்தடுத்து கதையம்சமுள்ள படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைக்கலாம்.
ஹீரோவின் அப்பாவாக ‘சூப்பர் குட்’ சுப்ரமணி, அம்மாவாக ‘வாழை’ ஜானகி, ராணுவ உயரதிகாரிகளாக பப்லு, பாய்ஸ் ராஜன், மற்ற கேரக்டர்களில் ஓஏகே சுந்தர், இயக்குநர் அரவிந்தராஜ், ரோபோ சங்கர், தேனடை மதுமிதா, ஸ்ரீதேவி, பூர்ணிமா, சுஷ்மிதா, நிஷா, விஜய் டிவி முல்லை, புதுப்பட்டு சக்திவேல், சிரஞ்சீவி, துரைபாண்டியன் என சீனியர்களும் புதியவர்களும் கலந்திருக்கிறார்கள்.
பாடல் வரிகள் முழுமையாக செவிகளை எட்டும்படி இதம் தரும் இசையைத் தந்திருக்கிறார் பாவலர் வரதராஜனின் வாரிசு சிவராமன். பின்னணி இசையை பரபரப்பு நிறைந்த திரைக்கதையின் பயணத்துக்கேற்ப வழங்கியிருப்பவர் இளையராஜாவின் வாரிசான கார்த்திக் ராஜா.
அந்த பக்கம் திரும்பினால் அடர்ந்த காடு, இந்த பக்கம் திரும்பினால் பரந்து விரிந்த மலை, இப்படி பார்த்தால் ஹீரோயின் குளிக்கும் அருவி, அப்படி பார்த்தால் பயங்கரவாதிகளுடனான ராணுவத் தாக்குதல் என எல்லாவற்றையும் தன் கேமராவில் நேர்த்தியாக சுருட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் வில்லியம்ஸ்.
காதலர்கள் காதலுக்காக எதை வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருப்பார்கள். அது சகஜம். ஆனால், இந்த கதையில் வருகிற காதலி காதலுக்கு மரியாதை செய்யும் விதம் நிச்சயமாய் புதுமையானது. அந்த அனுபவத்தைப் பெறுவதற்காகவே படத்தை ஒருமுறை பார்க்கலாம்.
கமாண்டோவின் லவ் ஸ்டோரி – காதல் புனிதமானது!
Rating 3 / 5


